இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்!
அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் 14 முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது.
இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்!
மத்திய கிழக்கில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, இரான் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா விலக்கிக்கொண்டது. "அதிபரின் உத்தரவுப்படி" முற்றுகை முடிவுக்கு வந்ததை அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மையமான சென்ட்காம் தனது 'எக்ஸ்' (X) பக்கத்தில் உறுதிப்படுத்தியது; அதேவேளையில், சில அமெரிக்கக் கப்பல்கள் "அந்தப் பொதுவான பகுதியில்" தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்றும் அது தெரிவித்துது.
இதனைத் தொடர்ந்து, இரானின் அதிஉயர் தலைவர் மொஜ்தபா காமனெயி (Mojtaba Khamenei), அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்குத் தான் "வேறுபட்ட கண்ணோட்டத்தை" கொண்டிருந்தபோதிலும் அதற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறினார்; ஆனால் அது றித்த கூடுதல் விவரங்களை அவர் அளிக்கவில்லை. "இரானிய தேசத்தின் உரிமைகளைப் பாதுகாப்பேன்" என்று இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) அளித்த உறுதியின் பேரிலேயே இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள அதிபர் டிரம்ப் "விரக்தியின் காரணமாகவே அனைத்து வகையான அழுத்தங்களையும் பயன்படுத்தினார்" என்று காமனெயி கூறினார். எதிர்காலத்தில் டெஹ்ரான் மற்றும் வாஷிங்டன் இடையே "நேரடிப் பேச்சுவார்த்தைகள்" நடைபெறும் என்றாலும், இது "எதிரியின் நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வதாக அர்த்தமல்ல" என்று காமனெயி குறிப்பிட்டார்.
இந்த ஒப்பந்தம் குறித்து காமனெயி கருத்துத் தெரிவிப்பது இதுவே முதல் முறையாகும். பிராந்தியப் போருக்கு வித்திட்ட பிப்ரவரி 28-ஆம் தேதி நடந்த அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் தனது தந்தையும் நாட்டின் முந்தைய தலைவருமான ஆயதுல்லா அலி காமனெயி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் பதவியேற்றதிலிருந்து இவர் பொதுவெளியில் காணப்படவில்லை.
காமனெயி கருத்துக்கு டிரம்ப் நேரடியாகப் பதிலளிக்கவில்லை; ஆனால் 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் அவர் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், இஸ்ரேல் மற்றும் லெபனானில் இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்போலா அமைப்புக்கு இடையிலான மோதல் உட்பட "அனைத்து முனைகளிலும்" போர்நிறுத்தம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும், பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான "தங்கள் உறுதிப்பாட்டை" மத்திய கிழக்கு நாடுகள் கடைப்பிடிக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அமெரிக்கா-இரான் ஒப்பந்தம் 14 முக்கிய அம்சங்களை மையமாகக் கொண்டுள்ளது. இதில் ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறக்கப்படுதல், இரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்கக் கூடாது என்ற நிபந்தனை மற்றும் நாட்டின் "மறுசீரமைப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக" 300 பில்லியன் டாலர் நிதியை உருவாக்குவதற்கான உறுதிப்பாடு ஆகியவை அடங்கும்.


