இரவு விடுதிக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!
“இது வோட்கா லெமனேட், குடித்துப் பார்”-அறிமுகமில்லாத நபர் ஒருவர், அடையாளம் தெரியாத இரண்டு நச்சுப் பொருட்கள் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் - மருத்துவர்கள்
இரவு விடுதிக்குச் சென்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கதி!
ஐக்கிய ராஜ்யத்தில் தனது 18-வது பிறந்தநாளைக் கொண்டாட முதல்முறையாக இரவு விடுதிக்குச் சென்ற மில்லி டாப்லின் என்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட கதி, உலகையே அதிரவைத்துள்ளது. அங்கு அறிமுகமில்லாத நபர் ஒருவர், “இது வோட்கா லெமனேட், குடித்துப் பார்” என்று ஒரு காக்டெய்ல் பானத்தை மில்லியிடம் கொடுத்துள்ளார். அந்தப் பானத்தை ஒரு மிடறு குடித்த சில நொடிகளிலேயே மில்லியின் முகம் உணர்ச்சியற்றுப் போனது. அவரது விரல்கள் வினோதமான முறையில் கோணிக்கொள்ள, உடல் முழுவதும் மரக்கட்டை போல விறைத்துப் போனது.
உடல் முற்றிலும் செயலிழந்த நிலையிலும், மில்லி முழு சுயநினையுடனேயே இருந்தார். அவரது உடல் அசைய மறுத்தாலும், தான் ஆபத்தில் இருப்பதை உணர்ந்த அவரது மனம் உள்ளுக்குள் பயத்தில் கதறியது. ஒரு கூண்டுக்குள் அடைக்கப்பட்டது போன்ற அந்த நரக வேதனையில் அவரது உடல் துடித்தது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மில்லியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு அடையாளம் தெரியாத இரண்டு நச்சுப் பொருட்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
ஒன்று உடலை முடக்கவும் (Paralyze), மற்றொன்று மயக்கமடையச் செய்யவும் பயன்படுத்தப்படுபவை. ஆனால், அவை என்ன வகையான மருந்துகள் என்பதைச் சோதனைகளால் கூடக் கண்டறிய முடியவில்லை. இந்தக் கொடுமையான சம்பவத்தின் வீடியோவைப் பகிர்ந்த மில்லியின் தாய், மற்ற பெண்களுக்கு ஒரு எச்சரிக்கையாக விடுத்துள்ளார். “அறிமுகம் இல்லாதவர்கள் தரும் எந்தப் பானத்தையும் ஒருபோதும் வாங்கி அருந்தாதீர்கள்” என்று அவர் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஒரு சிறிய தவறு ஒருவரின் வாழ்க்கையையே எப்படி நிலைகுலைக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பாடமாக அமைந்துள்ளது.


