இந்தியாவில் மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு!
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வந்த மோதல் நிறுத்தப்பட்டதை அடுத்து இந்தியாவில் மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்ததை தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த 32 விமான நிலையங்கள் விமான சேவைக்காக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பெஹல்காமில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் 'ஆப்ரேஷன் சிந்தூர்' என பெயரில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லை மாநிலங்களில் ட்ரோன்கள், ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்த முயற்சி செய்தது.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு துரிதமாக செயல்பட்டு பாகிஸ்தானின் ட்ரோன்களை வானிலே இடைமறித்து தாக்கி அழித்தது. மேலும், இந்தியா மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக வடக்கு மற்றும் மேற்கு இந்தியா முழுவதும் உள்ள 32 விமான நிலையங்கள் மே 9 முதல் மே 15 வரை மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இதனால் 32 விமான நிலையங்களில் இருந்தும் விமான சேவைகள் தற்காலிகமான நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது இந்தியா - பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டு ராணுவ மோதல்கள் நிறுத்தப்பட்டதால் எல்லை பகுதிகளில், இயல்பு நிலை திரும்பியுள்ளது. இதனால் மூடப்பட்ட 32 விமான நிலையங்களை மீண்டும் திறக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் 32 விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான சேவைகள் உடனடியாக தொடங்கப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணையம் இன்று அறிவித்துள்ளது. மேலும், பயணிகள் வழக்கம் போல தாங்கள் பயணிக்க உள்ள விமான நிறுவனங்களின் வலைத்தளங்களை பயணம் மற்றும் டிக்கெட் தொடர்பான விவரங்களுக்கு கண்காணித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.