பகிடிவதை காரணமாக பல்கலைக்கழகக் கல்வியையே கைவிடும் மாணவிகள் - மகளிர் தின நிகழ்வில் பேராசிரியர்கள் சுட்டிக்காட்டு
பல பெண்கள், பல்கலைக்கழகம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என கருதுகின்றார்கள்.

பாடசாலையில் உயர்தரத்தை நிறைவு செய்துவிட்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்படும் சில மாணவிகள் பகிடிவதை காரணமாக தங்கள் பல்கலைக்கழகக் கல்வியையே கைவிட்டுவிடக்கூடிய நிலைமை காணப்படுவதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பாலின சமத்துவ மையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு செவ்வாய்க்கிழமை (11) ஆணைக்குழுவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழகத்தில் மாணவிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.
ஆரம்ப நிகழ்வாக தேசிய கீதம் இசைக்கப்பட்டு, சிறப்பு விருந்தினர்களால் விளக்கேற்றி வைக்கப்பட்டது.
அடுத்ததாக பாலின சமத்துவ மையத்தின் இயக்குனரான பேராசிரியர் பிரபா மனுரத்னவினால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.
உரையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஏன் ஒவ்வொரு வருடமும் மகளிர் தினத்தைக் கொண்டாடுகிறோம் என்று பலர் கேட்கிறார்கள்? ஆண்களுக்கான தினம் எங்கே? என எப்போதும் என்னிடம் கேள்விகள் எழுப்புவார்கள். எனவே நான் அதற்கான சிறு விளக்கம் கூறுகிறேன். ஆண்கள் ஒவ்வொரு நாளும் மிக எளிதாக வரவேற்கப்படுகிறார்கள், மேலும் ஆண்கள் பல வருகைகளிலும் வியாபித்து காணப்படுகின்றார்கள்.
இந்த நாள் தான் உலகம் முழுவதும் பெண்களை வரவேற்பதற்காக கொண்டாடப்படுகின்ற ஒரு நாளாக காணப்படுகிறது. நமது பல்கலைக்கழக கல்வி முறையில், பெண்களே முதலில் பெரும்பான்மையாக உள்ளனர்.
எனவே பெண்கள் தினத்தை கொண்டாடுவது சரிதான். எங்களால் கடந்த வருடங்களில் மாற்றங்கள் சில இடம்பெற்றுள்ளன. பாலின சமத்துவ மையத்தின் இயக்குனரான எனக்கு பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கடந்த ஆண்டு கிடைத்தது.
நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால், நாம் அபிவிருத்தி திட்டத்தை மேற்கொள்ளவது தான். விசேடமாக மாணவர்களின் மலசலகூடங்கள் மிகவும் அழகானதாகவும் சுத்தமானதாகவும் இருந்தது. மாணவர்களின் வரவேற்பை உணரக் கூடியதாக இருந்தது.
நாங்கள் மாணவர்களை சுமையாக உணரவில்லை. இடைநிலை வேலை திட்டம், நாம் செய்யும் செயல்களுக்கு மதிப்பளிக்கப்படுகின்றதே தவிர அவற்றில் பாலினம், இனம், மொழி எதையும் கருதுவதில்லை என்றார்.
மேலும் விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர் குழுவினால் வயலின் , மேளம் , புல்லாங்குழல் , தபேலா, ஓகன் போன்ற இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன.
அடுத்ததாக, இந்த ஆண்டுக்கான பாலின விருதுகள் வழங்கப்பட்டு பாராட்டு விழா நடைபெற்றதுடன் பவ்கலைகை்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்ட குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பின்னர், பல்கலைக்கழக பேராசியர்களால் குழு விவாதம் நடைபெற்றது, குறித்த குழு விவாதத்தில்,
பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாவது குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், பல்கலைக்கழகங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பகிடிவதை குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும் பல பெண்கள், பல்கலைக்கழகம் என்பது பெண்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை என கருதுகின்றார்கள். இதற்கு காரணம் பகிடிவதையே ஆகும். இதனால் தங்கள் உயர் கல்வியை முடித்து பல்கலைக்கழகம் தெரிவான பெண்கள் பகிடிவதையினால் தங்கள் பல்கலைக்கழக கல்வியை கைவிடுகின்றார்கள். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழு விவாதத்தில் கலந்துரையாடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் துணைச் செயலாளரும், பெண்களுக்கு எதிரான வன்முறை குறித்த சிறப்பு அறிக்கையாளருமான தேசமான்ய டாக்டர் ராதிகா குமாரசாமி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டதுடன் பல்கலைக்கழக பேராசியர்கள் பலர் இவ் விழாவில் பங்குபற்றினர்.