Breaking News
பிரிகேடியர் சொர்ணம்....
.
பிரிகேடியர் சொர்ணம்....
2005 ஆம் ஆண்டு நான் தமிழீழத்தில் நின்றுகொண்டிருந்த வேளையில் ஒருநாள் சமாதான செயக போராளி செல்விக்கு திருமணம். கிளிநொச்சி, தூயவன் அரசறிவியல் கல்லூரியில் ஒரு காலை வேளையில் நடைபெற்றது. அத் திருமணத்திற்கு எனக்கும் அழைப்பு.... அப்போது தமிழீழக் காவல் துறைப் பொறுப்பாளராக இருந்த அண்ணன் பா.நடேசன் அவர்கள் தான் திருமணத்தை பதிவு செய்து நடத்திவைத்தார்கள். அண்ணி மதிவதனி அவர்கள், தமிழீழ அரசியல்த் துறைப் பொறுப்பாளர் அண்ணன் சு.ப. தமிழ்ச் செல்வன் அவர்கள் போன்ற முக்கியமானவர்கள், பொறுப்பாளர்கள், தளபதிகள் கலந்து கொண்டார்கள். திருமணம் முடிந்து மணமக்களை வாழ்த்திவிட்டு, அவ்வளாகத்தில் உள்ள புளிய மரத்தடியில், அக்கா மதிவதனி அவர்கள் காத்திருப்பதாக என்னை தமிழ்ச் செல்வன் அழைத்தார்.
அண்ணி அவர்கள் என்னிடம் நலம் விசாரித்து, சிறிது நேரம் கதைத்து விட்டு விடைபெற்றுச் சென்றார். அப்போது எங்களுக்கருகில் ஓரிருவரே நின்றுகொண்டிருந்தனர். வேறு யாரும் எளிதில் நெருங்க முடியாது.... பாதுகாப்பு பிரட்சினை...
அண்ணி மதிவதனி அவர்கள் விடைபெற்றுச் சென்றவுடன், தமிழ்ச் செல்வன் அவர்கள், அருகில் நின்றவரிடம் என்னை அறிமுகப்படுத்தி, என்னிடம் இவர் சொர்ணம் என்றவுடன் அதிர்ந்து மகிழ்ந்து வணக்கம் தெரிவித்தேன். அவரும் வணக்கம் தெரிவித்து கைக்குலுக்கினார்.... அவர் குறித்து நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்போதுதான் சந்திக்கின்ற வாய்ப்பு... அக்காலகட்டத்தில் திருக்கோணமலைக்கு தளபதியாக இருந்தார். அதனால் மற்றவர்களைப்போல அவரைச் சந்திப்பது முடியவில்லை... அதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் அமைதி ஒப்பந்தத்தில் உள்ளபடி, திருக்கோணமலைக்கு தளபதி சொர்ணம் அவர்களையும், மட்டகளப்பு தளபதி பானு அவர்களையும், இலங்கை இராணுவ ஹெலிகாப்டரில் அமைதி கண்காணிப்புக் குழு, கிளிநொச்சியில் கொண்டுவந்து விட்டுச் சென்றனர். தளபதி பானு அடுத்த நாளே என்னைச் சந்தித்தார்... தளபதி சொர்ணம் அவர்களை அன்றுதான் சந்தித்தேன்... மிக அமைதியான அதே நேரத்தில் உறுதியானவர்... சில நிமிடங்கள் சந்திப்புதான்... ஆனால் என் வாழ்வில் மறக்க முடியாத சந்திப்பு......
அவருக்கு என் வீரவணக்கம்....
ஓவியர் புகழேந்தி.