தமிழ் பொது வேட்பாளர்; பொது வாக்கெடுப்பை கோரும் கருவியாக பயன்படுத்தப்பட வேண்டும்!
ஈழத்தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்பதனை அடிப்படையாக கொண்டு தமிழர் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை வரவேற்கின்றோம்.
தமிழர் தேசத்துக்கான அரசியல் தீர்வினை மக்களே தீர்மானிக்க வேண்டும்!
இலங்கை ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி தமிழர் பொதுக்கட்டமைப்பினால் முன்னிறுத்தப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயத்தில், தமிழர் தேசத்துக்கான அரசியல் தீர்வினை மக்களே தீர்மானிக்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு வகையான தீர்வுத்திட்டங்களை நிலைப்பாடாக கொண்டிருக்கலாம். ஆனால் தேசமாக மக்களே தாம் எந்த அரசியல் ஏற்பாட்டக்குள் வாழ வேண்டும் என்பதனை தீர்மானிப்பவர்கள்.
அந்தவகையில் பொதுவாக்கெடுப்பு எனும் ஜனநாயகப் பொறிமுறையூடாக மக்கள் அதனை தீர்மானிக்கின்ற வகையில் அரசியல் தீர்வுக்கான செயல்வழிப்பாதையினை தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் தமிழர் பொதுக்கட்டமைப்பு முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது சர்வதேசத்தினால் அங்கீகரிக்ப்படப்ட மனித உரிமையாகும் எனவும் குறித்துரைத்துள்ளார்.
ஈழத்தமிழர்கள் ஓர் தேசிய இனம் என்பதனை அடிப்படையாக கொண்டு, தமிழர்களுடைய திரட்சியை, தனித்துவத்தினை, தமிழர்களுடைய சுயநிர்ணய உரிமையினை, தமிழர்களுடைய ஆட்புநிலப்பரப்பினை உலகிற்கு எடுத்துக் காட்டுகின்ற ஓர் விடயமாக தமிழர் பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை வரவேற்கின்றோம்.
தமிழர் தேசத்தனை பிரதிபலிக்கின்ற வகையில் தமிழர் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதனால், சிங்கள தேசத்தின் தென்னிலங்கை வேட்பாளர்கள் எவரும் தேர்தலின் முதற்சுற்றில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில்லை.
எனவே அவர்கள் இரண்டாவது சுற்றுக்கு தள்ளப்படுவார்கள். இவ்வேளை தமிழர்களின் சம்மதத்துடனோ அல்லது பங்களிப்புடனோ அல்லாமல் சிங்கள நலன்சார்ந்து உருவாக்கப்பட்ட இலங்கையின் அரசியலமைப்பு சட்டமானது, தமிழர்களை கட்டுப்படுத்தாது என்ற செய்தியினையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், தமிழர்கள் 2ஆம் சுற்றுத் தேர்தலை புறக்கணிப்பதும் பொருத்தமானதாக இருக்கும்.
இதேவேளை, தமிழர் பொது வேட்பாளரை முன்னிறுத்துவதனால் தென்னிலங்கை தரப்புடன் பேரம்பேச முடியும் என்ற கருத்து தமிழ் அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கூறுகின்றனர். ஆனால் ஈழத் தமிழர் விவகாரத்தில் தென்னிலங்கை தரப்பினர் எழுத்திலோ, அல்லது வாக்குறுதியாகவோ எதுவாயினும் அவர்களால் நடைமுறைப்படுத்த முடியாது.
காரணம் சிங்கள தேசத்தின் யதார்த்தம் என்பது சிங்கள பேரினவாதத்தினால் இனநாயகப்படுத்தப்பட்ட அரசியல் கலாச்சாரம் அதற்கு அனுமதிக்காது என்பது வரலாறாகவுள்ளது.
தமிழர் தரப்பு பலமாக இருந்த அக்காலத்தில் 2004ம் ஆண்டு இலங்கையின் தேர்தல் களத்தில் தமிழ் தேசியக் கூட்டடைமப்பினை களமிறக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள், அத்தேர்தலை ஒரு கருவியாக கையாண்டனரே அன்றி, சிங்கள தரப்புடன் பேரம் பேசுவது நோக்கமாக இருக்கவில்லை என்பதனையும் நினைவிற் கொள்ள வேண்டும்.
ஆக்கிரமிப்பு உள்ளாகியுள்ள தமிழர் தேசத்தில் இத்தேர்தலை, தமிழர்கள் ஒரு கருவியாகவும் ஓர் களமாகவும் பாவித்து நீதிக்கும் அரசியல் இறைமைக்குமான செயற்பாட்டை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்துவதற்கு தமிழர் பொதுவேட்பாளரை பயன்படுத்த வேண்டும்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியினை நீக்கம் செய்யும் நோக்கில், நல்லாட்சி அரசாங்கம் என்ற பெயரில் மைத்திரியை ஆட்சிக் கதிரைக்கு கொண்டுவருவதற்கு, சர்வதேச சக்திகள் தமது நலன்களுக்காக தமிழர்களின் வாக்குகளை கருவியாக பயன்படுத்திக் கொண்டதனையும் நம் நினைவிற் கொள்ள வேண்டும்.
சர்வதேச சக்திகள் தமது பூகோள புவிசார் நலன்களுக்காக தமிழர்களை பாவிக்கின்றார்களே அன்றி, தமிழர்களை ஓர் தரப்பாக ஏற்றுக் நடப்பதில்லை.
1977ம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தினை அடிப்படையாக கொண்டு தமிழர்கள் ஓர் தேசமாக மக்கள் கொடுத்த ஆணைக்கு மாறாக செயற்பட முடியாது.
அந்தகையில் எந்த அரசியல் ஏற்பாட்டுக்குள் வாழ வேண்டும் என்பதனை தேசமாக மக்களே தீர்மானிக்கின்ற வகையில், பொது வாக்கெடுப்பினை முன்னிறுத்தி இலங்கையின் இன்றைய ஜனாதிபதி தேர்தல் களத்தினை தமிழர் தரப்பு கையாள வேண்டும்.
அதேவேளை இத்தேர்தல் காலத்தில் ஜெனீவாவில் கூடவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் வரவிருக்கின்ற தீர்மானத்தில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்துகின்ற வகையில் ஜெனீவாக் களத்தினையும் தமிழர் தரப்பு கையாள வேண்டும் எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.