பலதும் பத்தும். 27.03.2026 - அமெரிக்க NATO மீது குற்றச்சாட்டு !
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
அமெரிக்க NATO மீது குற்றச்சாட்டு!
அமெரிக்க அதிபர், NATO கூட்டாளிகள் தன் சோதனையில் தோல்வியடைந்துவிட்டதாக டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற அமைச்சரவை அதிகாரிகளுடனான ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
" நான் NATO மீது நம்பி ஏமாற்றமடைந்துள்ளேன். நீங்கள் எங்களுக்கு உதவலாம் அல்லது உதவ வேண்டிய கட்டாயம் இல்லை, ஆனால் நீங்கள் உதவவில்லை என்றால், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் அதை மறக்க மாட்டோம்" "சில மாதங்கள் கழித்து எனது இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் ஒரு சிறந்த சொல்லாக்கம் இருக்கிறது ஒருபோதும் மறக்காதே என்பது"
குறிப்பாக NATO க்கு பல ஆண்டுகளாக நாங்கள் பில்லியன் டிரில்லியன் டொலர்கள் செலவழித்திருக்கிறோம். நான் கேட்ட ஹோர்மூஸ் நீரிணை விடயத்தில் எங்களுக்கு கொஞ்சம் உதவி செய்ய முடியுமா? சில படைகளை அனுப்ப முடியுமா?’ — ஆனால் அவர்கள் இதில் கலந்து கொள்ள விரும்பவில்லை. எனவே அது அவர்களுக்கு மிகவும் பெரிய இழப்பாக மாறும் என்று நான் நம்புகிறேன் என்றார் அமெரிக்க அதிபர்.
நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு!
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (26) ரத்து செய்துள்ளது.
அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே, நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் Pontault-Combault நகரில் ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக பதவி ஏற்பு!
பிரான்ஸ் நாட்டின் Pontault-Combault நகரில் நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.
நடைபெற்ற நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, இலங்கை பூர்வீகத்தைக்கொண்ட ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை திங்கட்கிழமை ( 23 ) அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டார்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்த இவரின் இந்த வளர்ச்சி, வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கு பெருமையை ஏற்படுத்தும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் கொண்ட ஆதித்யா ஆனந்தராசா, 19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டு தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர், தொடர்ந்து பொதுச் சேவையில் ஈடுபட்டு, மக்களுடன் நெருக்கமாக செயல்பட்டதன் பலனாக தனது 25 ஆவது வயதில் துணை மேயர் பதவியை அடைந்துள்ளார்.
பொலிஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்ட யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (27) ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் நடைபெற்று வருகிறது.
அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும், காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாவட்ட செயலக சுற்று வட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அவரது இந்த முன்னேற்றம், இளம் தலைமுறையினருக்கு அரசியல் மற்றும் பொதுச் சேவையில் ஈடுபட ஊக்கமளிக்கும் சிறந்த முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. மேலும், பல்துறை சமூகத்துடன் இணைந்து செயல்படுவதிலும், உள்ளூர் நிர்வாகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் அவர் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழில் இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!
யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் நேற்று (26) மாலை இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பண்ணை வீதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த குறித்த இளைஞரை, இரண்டுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாத வன்முறைக் கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
படுகாயமடைந்த இளைஞர் பண்ணை கடல்பகுதியில் விழுந்த நிலையில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர்கள் தப்பிச்சென்ற நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


