"சின்னவரின் நினைவுகளில்…." நூல் விமர்சனம்,
இந்த நூலில் குறிப்பிடப்படுபவர்களின் தத்துணிவுமிக்க செயற்பாடுகள் கற்பனைக்கு எட்டாதவை.
“சின்னவரின் நினைவுகளில்….“ நூல் விமர்சனம்
இந்நூலின் தொடக்கமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பின்தளமாகவும், கருப்பையாகவும் இருந்த தமிழக ஆதரவு 1991ல் இழக்கப்பட்டதை அடுத்து தாயகத்திற்கான வழங்கள் நடவடிக்கை அறுந்து போனதிலிருந்து ஆரம்பமாகிறது. ஈழப் போராட்டம் விரும்பியோ விரும்பாமலோ ஒரு நெருக்கடியை சந்திக்கப் போவதை அந்தத் தொடக்கம் கட்டியங்குரியதாக அமைகிறது. ஆயினும் ஈழத் தமிழர்கள் தங்கள் கொள்ளளவுக்கு மிஞ்சிய தியாகங்களைச் செய்து தயாராகிறார்கள் என்பதை சின்னவர் கே.பியுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் வெளிப்படுத்துகிறது.
" கடற்கரையில் எமது காலை தொடும் ஒரு பேரலைக்கு பின்னான 7வது அலைதான் மீண்டும் காலை தொடுவதாக இருக்கும்". அதேபோல வங்கக் கடலில் ஏற்படும் பேரலைகளின் இரண்டின் உச்சிகளுக்கு இடையிலான தூரம் 50 அடியாகத்தான் இருக்கும். ஆகவே 50 அடி நீளமான வேகப்படகுகளினால் இந்த அலைகளில் நடுவே வேகமாக பயணிக்க முடியும் எனக் குறிப்பிடுகிறார். இந்த இயற்கை நியதியை வெல்லக்கூடிய வகையில் பின்னாளில் 28 அடி நீளமான அதிவேகப் படகுகள் சின்னவரால் தயாரிக்கப்பட்டு அதிவேக இயந்திரங்கள் பூட்டப்பட்டு தாயகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டமை பற்றி 12ம் பக்கத்தில் குறுவதிலிருந்து கடற்கல தொழில்நுட்பத்தில் சின்னவரின் திறமை வெளிப்படுத்தப்படுகிறது. அந்த அதிவக படகுகளை 4 அதிவேக இயந்திரங்களால் இயக்கப்படு ஓடுகின்றபோது அவை இரண்டு பேரலை உச்சிகளையும் தொட்டு பாய்ந்து செல்வதை கடலின் பக்கப்பாட்டிலிருந்து பார்க்கின்றபோது தெளிவாக தெரியும். இது கடற்பலிகளின் சாகசமாக அன்றைய காலத்தில் விதந்து பேசப்பட்டதை ஞாபகத்திற்கு கொண்டு வருகிறது.
இந்த நூலில் குறிப்பிடப்படும் கப்டன் சின்னவர், கப்டன் ஜெயச்சந்திரன்(ஏழு விரலார்), கப்டன் சிறீபாலன் குட்டி சத்தியமூர்த்தி மகேந்திரன் , கப்டன் தங்கத்துரை பாலா ஜெயச்சந்திரன், கப்டன் ஜெய், கப்டன் BEE, RV, SR, Sara, Mike கப்டன் கெங்கா, ZP, மயில், கலஞ்சென்ற கப்டன் பிறசூடி (டேவிட் ), ராமு, புஸபா, கிருஷ்ணா, சேரன், கவுசி, மேகலன், காாதர் போன்றவர்களுடைய தமிழீழ தேச நிர்மானத்திற்கான அர்ப்பணிப்பும், தத்துணிவுமிக்க செயற்பாடுகளும் கற்பனைக்கு எட்டாதவை. தமிழிலக்கிய வரலாற்று நவீனங்களாக வந்த கடல் புறா, ஜலதீபம், பார்த்திபன் கனவு போன்ற பலட்சம் வாசகர்களுடைய உள்ளத்தை கொள்ளை கொண்ட கற்பனை நாவல்களுக்கு செயல் வடிவம் கொடுத்தது நிஜ வாழ்க்கை நடைமுறைகளில் இவர்கள் இந்துசமுத்திரத்தில் செய்த கடலாடு காதை ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈழத்திழர்களுடைய மனவலிமையையும் அர்ப்பணிப்பையும் பறைசாற்றுகிறது.
இந்நுாலின் 18ம், 19ம் பக்கங்களில் இந்து சமுத்திரத்தில் ஈழப்போராட்டத்திற்கான பிரதான வழங்கள் பணியில் ஈடுபட்டிருந்த சோவாமாறு கப்பல் பற்றியும், அது வாங்கப்பட்ட நடைமுறைகள் பற்றியும், அந்தக்கப்பல் ஆற்றிய கடல் நடவடிக்கை பற்றி குறிப்பிடுகின்றபோது கடல்புறா நவீனத்தில் வருகின்ற சோழர்களின் போர்க்கப்பலான கடல்புறா கப்பல் நினைவுக்கு வந்து செல்கிறது.
22ம் பக்கத்தில் விடுதலைப் புலிகளின் படையணிகளுக்கான வரிப்புலி சீருடை வாங்கும் நடவடிக்கையும் அது தாயகத்துக்கு அனுப்பப்பட்ட விதமும் குறிப்பிடப்பட்டு, முப்படைகளுக்கான சீருடைகளும் போராளிகள் அணிந்து முடுக்குடன் வலம் வந்த காட்சிகளை தான் நினைக்கின்ற போது இன்றும் மெய் சிலிர்க்கின்றது என்று அவர் குறிப்பிடுவது எங்கள் தேசத்தின் விடுதலையும், தேசம்சார்ந்த ஆழமான பற்றுருதியையும் வாசகனுக்கு ஊட்டுவதாக அமைகிறது.
கப்பல்கள் திருத்த வேலைக்காக இயந்திரங்கள் நிறுத்தப்பட்டு மிதக்க விடப்படும் கடல் தளம் AA யின் ஆல்கூறு குறிப்பிடுகின்ற இடம் இன்று உலகளாவிய ஆளுகைப் போட்டியில் முக்கித்துவம் பெறும் டீயாகோ காசியா தீவின் மேற்குப்புறமாக உள்ளது. அந்தப் பிரதேசத்தை American water என்று இன்று அழைக்கப்படுகிறது. அங்கு திருத்த வேலைக்காக தரித்து நின்ற கப்பல்கள் 1997ல் தாக்கி அழிக்கப்பட்டமை பற்றிய தரவுகள் குறிப்பிடப்படுகின்றது. இவற்றின் திகதிகள் மற்றும் கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கப்டன் சிறீபாலன், குட்டி ஆகியோருடன் சென்ற பெரிய வள்ளம்(ரெங்நேவா) இந்திய ரோந்து படகுகளால் கைப்பற்றப்பட்டமையும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் அவர்கள் நிரபராதிகள் என விடுதலை செய்தமை பற்றியும் குறிப்பிடப்படுகின்ற 24ம் பக்கத்தில் சிறீபாலனது தாயாரும், மனைவியும் திருச்சியில் தங்கியிருந்த வீட்டிலிருந்து காணாமல் போனமையும், இன்றுவரை அவர்களுடைய எந்த விவரமும் அறிய முடியாமல் இருப்பதும் பற்றியதான தகவல் மிக வேதனையானதுதான்.
கப்டன் BEE எமரால்டு கப்பலில் மத்திய தரைக்கடல் நாடென்றில் 15 தொன்னடையுள்ள ஆயுத தளபடங்களை ஏற்றிக்கொண்டு தாயகம் நோக்கி மத்திய கடலில் இருந்து சுவஸ் கால்வாய் வழியை தவிர்த்து ஆபிரிக்கக் கண்டத்தை சுற்றி நெடுந்தூரம் பன்னீராயிரம் மைல்கள் பயணம் செய்தமை வாஸ்கோடகாமா இந்தியாவுக்கு பயணப்பட்ட பாதை வழியே நினைவுபடுத்துகிறது. ஆயினும் இந்தப் பயணத்தின்போது அந்நிய நாட்டு ஆயுதம் பூட்டப்பட்ட ரோந்துக் கப்பல ஒன்றை அன்பளிப்பாக தருவதாகவும் போரம்பேசப்பட்டபோது அதனை வாங்க மறுத்து தட்டிக் கழித்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு வாங்கியிருந்தால் உலகின் முக்கிய அரசுகளின் புலனாய்வு அமைப்புக்களுக்கு தெரியவந்து எமது போராட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அன்று அவர்கள் முன்னுணர்ந்து முடிவெடுத்தது என்பது சர்வதேச அரசியல் ராஜதந்திரத்தில் அவர்களுக்குள்ள அனுபவத்தையும் அறிவையும் வெளிப்படுத்தி நிற்கிறது. இது ஒரு வரலாற்று நூல் என்ற அடிப்படையில் குறித்த விடயம் பற்றிய முழுமையான விவரத்தை அடுத்த சந்ததிக்கு தெரியப்படுத்துவதற்காக பதியப்படவேண்டும்.
கேனல் கிட்டுவின் தாயகம் நோக்கிய பயணம் பற்றி 42, 43, 44ம் பக்கங்களின் குறிப்பில் கிட்டு அவர்கள் சின்னவரின் ஜீப் வண்டியில் ஏறும்போது சின்னவர் இயல்பாக வண்டியில் ஒவ்வொரு நாளும் மலர்மாலை ஒன்றை வாங்கி அதன் கண்ணாடியில் போடுவது வழக்கம். அன்று கிட்டு ஜீப்பில் ஏறும்போது அவருடைய கையில் அகப்பட்டு அந்த மாலை அறுந்துவிட்டது. அந்த மாலையை கிட்டு தன் கையாலே மீண்டும் தொடுத்து கண்ணாடியில் போட்டுவிட்டார். அப்போது சின்னவர் தன்னுடைய எண்ணத்தை “இது என்ன சகுனம்“ என்று மனம் நொந்ததையும் பதிவிடுகிறார். அத்தோடு கிட்ட அண்ணாவின் மரணத்தின் பின்னரும் அந்த மாலை அப்படியே தன்னுடைய ஜீப்பிலிருந்ததை பின்னாளில் கருகியமாலை தொங்கியதை அவதானித்த கேபிதான் அதை எடுத்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
போராட்டப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது இரகசியக் காப்பிற்காக தங்களுடைய பிள்ளைகளுக்கு பிள்ளைகளுக்கு கூட இவர்கள் பற்றிய எந்த விபரங்களையும் சொல்லாமல் வளர்த்தது பற்றி குறிப்பிடுகின்ற போது “நாட்டிலேயே பிள்ளைகளுக்கு போராட்டம் விடுதலை விபத்தி ஊட்டி வளர்க்கப்படுகின்றன ஆனால் எங்களது பிள்ளைகளுக்கு நாட்டில் பிரச்சனையால் இடம் பெயர்ந்து இங்கு வாழ்கிறோம்“ என்று மட்டுமே சொல்லி வளர்த்தோம் என்பதனை அவர் மிக மனவேதனையோடு பக்கம் 47ல் பதிவு செய்வது நெஞ்சை கனக்கவைக்கும் உண்மையின் பக்கமே.
பக்கம் 56ல் சுவேணி கப்பலில் ஏற்றப்பட்ட சுடும் துப்பாக்கிகள் தாயகத்துக்குச் சென்ற வரலாறும் 1995 ஏப்ரல் 28, 29ம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசின் இரண்டு குருவிகள் சுட்டு வீழ்த்தப்பட்ட வீழ்த்தப்பட்ட விபரங்கள் குறிப்பிடப்படுவதும் கவனிக்கத்தக்கது. அவ்வாறே 61ம் பக்கத்தில் முல்லைத்தீவு இராணுவ முகாம் தாக்குதலுக்கான தடவாடங்கள் கொண்டு சேர்க்கப்பட்டமை பற்றிய விபரங்கள் தரப்படுவதோடு அந்த சண்டையின் வெற்றிக்கு பின்னர் முல்லைத்தீவின் இருமருங்களும் தங்கு தடையின்றிய ஒரு கடல் கட்டுப்பாட்டு பிரதேசம் புலிகளின் கையில் வந்ததை இந்நூல் பதிவு செய்கிறது.
பக்கம் 63ல் Orient கப்பல் 350 தொன் ஆயுதங்களுடன் சடுதியாக வெடித்துச் சிதறியது பற்றி குறிப்பிடுகிறார் அதில் எங்கள் தேசத்திற்கான பெரும்பணியாற்றிய சாந்தமூர்த்தி, மகேந்திரன் ஆகியோரோடு எட்டு போராளிகளின் வீரமரண நினைவுகளை மனவேதனைகளோடு பதிவு செய்கிறார்.
தமிழிழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்ட பாச்சலை ஏற்படுத்திய ஆட்லரி பீரங்கிகள் கொள்வனவு, கடல்வழிப் பயணம், அவற்றை ஏற்றி இறக்குவதற்கான சிரமங்கள் அனைத்தையும் தமிழீழ கடலோடிகளும், கடப்புலிகளும் அப்படி சாத்தியப்படுத்தினார்கள் என்ற அசாத்தியமான சாதனைகள் பற்றி குறிப்பிடப்படுகிறது தமிழீழ கடல் மாலுமிகளின் தன்னிகரற்ற தியாகங்களும் செயல் திறன்களும், அவர்கள் பட்ட துன்ப, துயரங்கள் இந்நுாலின் 67, 68ம் பக்கங்களை வாசிக்க கண்களை குளமாக்கம்.
தமிழீழ விடுதலைக்காக இந்து சமுத்திரத்திலும், அத்திலாந்திக் சமுத்திரத்திலும், பசுபிக் சமுத்திரத்திலும் பயணித்த தமிழிழத்தின் 25 கப்பல்கள் பற்றிய பட்டியல் முழுமையான தரப்பட்டுள்ளது. அவ்வாறே பக்கம் 74 தொடக்கம் 81 வரை பதிவிடப்படுகின்ற புகைப்படங்களும், தோராய வரைபடங்களும், ஆள்கூட்டு தளங்களும் தரப்பட்டுள்ளன. இத்தகைய துல்லியமான தரவுகளும் வரைபடங்களும் தொழில் சார் நிபுணத்துவத்தில் சின்னவரின் பங்கையும் பாத்திரத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.
1995ல் எமரால்டு கப்பல் இயங்க முடியாத நிலை ஏற்பட்ட போது அதனை உடைப்பதற்கு பதிலாக அதில் சிமெந்தும் யூரியாவும் ஏற்றப்பட்டு முல்லைத்தீவுக்கு ஓட்டிச் செல்லப்பட்டு தரைதட்டி விடப்பட்டது. அதிலிருந்து பொருட்களை இரவோடு இரவாக கடற்புலிகள் இறக்கிய பின்னர் அந்தக் கப்பலை இலங்கை விமானப்படை தாக்கி அளித்ததாக செய்தி வந்தது. அந்தக் கப்பல் வேண்டுமென்றே பல நோக்கங்களின் அடிப்படையில் அந்தப் பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டதாக இந்த நூல் பதிவு செய்கிறது. தகர்க்கப்பட்ட கப்பலின் இரும்புப் பாளங்கள் கடற் புலிகளின் படகு உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிடப்படுவதில் இருந்து ஒரு யுத்த சூழலில் எத்தகைய தந்திரங்களை எல்லாம் தமிழிழ மாலுமிகள் செய்தார்கள் என்பது பக்கம் 85ல் பதிவாகிறது.
இந்நுாலின் 88, 89ம் பக்கங்களில் 2001க்கு பின்னர் சர்வதேச கடல் நடவடிக்கைகளை கஸ்ரோ பொறுப்பெடுத்த பின்னர் பெருமளவில் போராளிகளே கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை பதிவு செய்கிறார். அதற்கு முன்னையகால கடல் சார் நடவடிக்கைகளில் முக்கிய துணாக விளங்கிய சின்னவர் தென்கிழக்காசிய நாடுகளில் ஒருபோதும் தாங்கள் ஆயுதக் கொள்வனவில் ஈடுபடவில்லை என்பதையும் ஆணித்தரமாக பதிவு செய்திருக்கிறார். அத்தோடு தாங்களது ஆயுதக் கொள்வனவு அனைத்தும் மத்திய தரைக்கடல் நாடுகளை அண்டிய பகுதிகளிலேயே மேற்கொள்ளப்பட்டதை அவர் உறுதிப்படுத்தியும் இருக்கிறார்.
ஆனால் 2000 ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் தென்கிழக்காசிய கிழக்காசிய நாடுகளில் ஆயுதக் கொள்வனவு இடம் பெற்றதற்கான ஆதாரங்கள் பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்திருக்கின்றன என்ற அடிப்படையில் பிற்பட்டகால கடல் சார்ந்த நடவடிக்கைகள் இலங்கை அரசாலும் பலம்வாய்ந்த அரசுகளாலும் அழிக்கப்பட்டமைக்கான காரணங்களில் சீன, வடகொரிய ஆயுதக்கொள்வனவுகள் புவிசார் அரசியலுக்கு விரோதமாக இருந்துள்ளது என்பதை பிற்பட்ட கால நிகழ்வுகள் எமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.
““2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17ம் திகதி அதிகாலை (இலங்கை நேரப்படி 04:20) அழைப்பு ஒன்று வருகிறது, போனை எடுத்தவுடன் மறுபக்கத்தில் யார் என்பது தெரிந்தது, அழைத்தது தளபதி சூசை அவர்கள், "தலைவர் வீரமரணம்" என்று சொல்கிறார், இலங்கை நேரப்படி அதிகாலை 03:45 இற்கும் 4:00 மணிக்கும் இடையில் நடைபெற்றது என்றும், இது நிச்சயம் உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும், போனுக்கு காசு முடிகிறது, நிரப்ப வேண்டும்". என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டார். இடிந்துபோய் இருந்து விட்டேன், யாருடனும் கதைக்க முடியாத நிலை. என்னுடனே புதைத்துக் கொண்டேன். ஓம் என்றார்கள், இல்லை என்றார்கள் பல ஆண்டுகள் ஓடிவிட்டது.““
என்று 95ம் பக்கத்தில் தேசியத் தலைவரின் மரணம் பற்றி சின்னவருடன் தளபதி சூசை பேசியதை தனது வாக்குமூலமாக இந்த நூலாசிரியர் கேப்டன் ப.விஜயகுமார் பதிவுசெய்துமுள்ளார். இது முற்றிலும் நம்பகரமானதும், முதன்நிலை சாட்சியமாகவும், முக்கியமான வாக்கு மூலமும், வரலாற்று ஆதாரமுமாகும். இதனை எந்த அடிப்படையிலும் நிராகரிக்க முடியாதது. ஈழத்தமிழர் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.
2009 இல் ஈழப் போராட்டம் அமைதியாக்கப்பட்ட பின்னர் இலங்கை தீவிலும் சர்வதேச அரசியலிலும் ஏற்பட்ட மாற்றங்கள் ஈழப் போராட்டம் சார்ந்து இந்தியா கொண்டிருந்த நிலைப்பாட்டில் அதற்கு மாற்றம் தேவை என்பதை இந்தியா உணர்கிறது என்பதை குறிப்பிட்டு இருக்கிறார். இது இன்றைய பூகோளம் தழுவிய அரசியலிலும், பன்னாட்டு அரசியலிலும், புவிசார் அரசியலிலும் சின்னவரின் உணர்திறனை வெளிக்காட்டுகிறது. நூலின் இறுதியில் பழைய வீரப்பிரதாபங்களை பேசி, மற்றவர்களை வசைபாடுவதை விடுத்து நீங்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நல்லதொரு முடிவை எடுத்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். “நம்பிக்கைதான் வாழ்க்கை“ என்று தமிழ் இனத்திற்கே உரித்தான தன்னம்பிக்கையோடு இந்த நூலை நிறைவு செய்கிறார். ஆம் உண்மையில் இந்த நூலை எழுதிய சின்னவர் இச்சிறுநூலில் மிகப் பிரமாண்டமான பெரிய விடயங்களை பல இடங்களில் ஒரு வரியில் சொல்லி முடித்திருக்கிறார். என்று பார்க்கின்றபோது இந்த நுாலில் மனத்தைரியமும், கடலியல்சார் அறிவும், சர்வதேச அரசியல் நுணுக்க அனுகல்கள் வெளிப்படுத்துகிறது.
ஆயினும் இந்நூல் அடிப்படையில் நூலுருவாக்க முறைமை கடைப்பிடிக்கப்படவில்லை. நூல்பற்றிய தகவல்களில் வெளியீட்டாளர், பதிப்பித்த அச்சகம், அளவுப்பரிமானம், பதிப்புத் திகதி போன்ற அடிப்படைத் தகவல்கள் பதிவிடப்படவில்லை. முக்கியமாக சர்வதேச நூல்த் தர சுட்டிலக்கம் எனப்படும் ISBN (International Standard Book Number) பதிவிடப்படாமை இதனுடைய முக்கிய குறைபாடாக உள்ளது. ISBN இல்லாவிடத்து நூலை மேற்குலக நூலகங்களிளோ, ஆவண காப்பகங்களிளோ சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். இந்நுால் ஒரு வரலாற்று ஆவணம் என்ற அடிப்படையில் ISBN இணைக்கப்பட வேண்டியது மிக மிக அவசியமானது.
யுத்தகாலத்திலும்கூட வன்னியில் வெளியிடப்பட்ட அனைத்த நுால்களிலும் ISBN பதிப்பித்திருந்தனர். ஆனால் தற்போது மேற்குலகிற்கு புலம்பெயர்ந்த போராளிகளினாலும், போராட்டம் சார்ந்து எழுதப்பட்டு வெளியிடப்படுகின்ற பெரும்பாலான நுால்களில் ISBN பதிவிடப்படுவதில்லை. இது உலகளாவிய கல்விசார் தொழிநுற்ப முறைமைகள் பின்பற்ப்படாமை என்பது இப்போதும் நம்மவர் நுாற்றாண்டு் பின்நோக்கி இருப்பதாகவே தோன்றுகிறது. எனவே இந்தவிடயம் திருத்தப்படவேண்டும்.
கடல்சார் நடவடிக்கைகளின்போது சின்னவர் என்று அழைக்கப்பட்டதனால் அவர் இந்த நூலை சின்னவரின் நினைவுகளில்...... என்ற பெயருடனே எழுதியிருக்கிறார். இந்த சின்னவர் விமான ஒட்டியாகவும், கப்பலோட்டியாகவும், இருப்பதோடு விடுதலைப்போராட்டத்தின் தாங்குதூணாகவும் இருந்திருக்கிறார் என்பதிலிருந்து அவர் மிகப் பெரியவர்தான். தொழில்சார் கல்வித் திறமையும் புலமையுமுடைய ஒருவர் வங்கக் கடலின் ராட்சதப் பேரலைகளுக்கு நடுவே உயிரைப் பணயம்வைத்து பல்லாண்டுகள் அவர் நடாத்திய கடலாடு காதை ஈழப்போராட்ட வரலாற்றில் ஓர் அத்தியாயம்.
தமிழர்களின் கடல் பயணங்களில் ஆயிரம் ஆண்டுகள் முந்தைய சோழப் பேரரசின் "கங்கைகொண்டான் கடாரம் கொண்டான்" என்று தமிழ் இலக்கியங்களே விதது போற்றப்படும் தமிழர்களின் கடல் கடந்த பேரரச விஸ்தரிப்புப் படையெடுப்புக் காதைகளின் வீரப் பெருமைகளுக்கு பின்னே 1000 ஆண்டுகள் கழித்து நவீன உலகில் அதே கடாாரம் என்ற அழைக்கப்படுகின்ற தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, கம்போடியா பகுதிகளில் ஈழத் தமிழர்கள் சிலபேர் மட்டும் தனித்து நின்று தமிழிி விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கிய அளப்பரிய சேவையையும், அவர்களுடைய தன்னலமற்ற தியாகங்களை கப்டன் பஞ்சலிங்கம் விஜயகுமார் எழுதிய “சின்னவரின் நினைவுகள்…“ என்ற இந்நூல் ஊடாக தரிசிக்க முடியும். இந்த அடிப்படையில் தமிழிழ விடுலைப்போராட்ட வரலாற்றை அறியவும், ஆய்வு செய்யவும், தொடர்ந்து விடுதலைப் போரட்டத்தில் பயணிப்பவர்களும் இந்த நுாலை படிப்பது மிக அவசியம் என துணிந்து செல்லலாம்.
தி.திபாகரன்,M.A.


