என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன்
எத்தனை வருடங்கள் ஆனாலும் இசை சார்ந்த தேடுதல் இருக்குற ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன்.
என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன்
குழந்தையாகப் பார்த்துப் பழகிய முகத்தில் இப்போது கம்பீரம் கூடியிருக்கிறது. ஆனாலும் அந்த நேசம் மிக்க புன்னகை மட்டும் மாறவில்லை, லிடியன் நாதஸ்வரத்திடம். அடுத்து அடுத்து என இசையில் புதிய புதிய எல்லைகளை நோக்கி சிறகை விரித்துக்கொண்டே போகிறார் லிடியன். ஒருபக்கம் குறளிசைக் காவியம், இன்னொரு பக்கம் `குரோமேட்டிக் கிரமேடிக்’ ஜாஸ் ஆல்பம் என எல்லாக் களங்களிலும் கலந்துகட்டிக் கலக்கும் லிடியன், இப்போது தொட்டிருப்பது இன்னுமொரு உச்சம். `Symphony No.1 – New Beginnings’ என்ற ஒரிஜினல் சிம்பொனி இசையை உருவாக்கி லண்டன் சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வாசிக்க வைத்துப் பதிவுசெய்திருக்கிறார். ஜூன் 21-ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் இந்த இசைப் படைப்பின் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது. வாழ்த்துகளில் திளைத்துக்கொண்டிருந்த லிடியனிடம் கிடைத்த சிறு இடைவெளியில் உரையாடினோம்.
“லிடியன், ஒரு பியானோ பிராடிஜி என்று தெரியும்... சிம்பொனி கனவு எப்போது தோன்றியது?”
“9 வயதிலிருந்தே பியானோ வாசிக்கிறேன். பியானோ கலைஞர்களைப் பொறுத்தவரை வெஸ்டர்ன் கிளாசிக்கல் இசை ரொம்பப் பிரதானம். வெஸ்டர்ன் கிளாசிக்கல்ல பயணிக்கிற பெரும்பாலான இசைக் கலைஞர்களுக்கு ஒருநாள் சிம்பொனி உருவாக்கணும்ங்கிறது பெரிய கனவா இருக்கும். எனக்கும் அந்தக் கனவு இருந்துச்சு. ஜாஸ் ஆல்பம், குறளிசைக் காவியம் போன்ற படைப்புகள்ல கவனம் செலுத்துனதால சிம்பொனி வேலைகள் தள்ளிப்போய்க்கிட்டே இருந்துச்சு. திட்டமிட்ட எல்லா வேலைகளையும் முடிச்சுட்டு, சிம்பொனியைப் பிரதான வேலையா எடுத்துட்டேன். இப்போ அந்தக் கனவு கைகூடி வந்திருக்கு...”
“ ‘New Beginnings' பேரே மாஸா இருக்கு. ஏன் இந்தப் பேரைத் தேர்வு செஞ்சீங்க?”
“இது என் சிம்பொனி பயணத்துல முதல் அத்தியாயம். இன்னும் தொடவேண்டிய தூரம் நிறைய இருக்கு. அதனாலதான் ‘New Beginnings'-னு பேரு வெச்சேன். இதுல அடுத்தடுத்து செய்ய சில ஆண்டுகளுக்கான திட்டங்கள் கையில தயாரா இருக்கு. 2032 வரை வெளியிட வேண்டிய சிம்பொனிகளுக்கான கான்செப்ட்ஸையும் உருவாக்கி வெச்சுட்டேன். ஒவ்வொண்ணுக்கும் பேர்கூட முடிவு பண்ணியாச்சு."
“ ‘New Beginnings’-ல என்னல்லாம் ஸ்பெஷல்?”
“என்னுடைய முதல் சிம்பொனியில மேட் டங்கலி இசை நடத்துனரா இருந்தார். லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ டி மேக்கே ஆர்கெஸ்ட்ராவின் ஒருங்கிணைப்பாளரா இருந்தார். இந்த சிம்பொனியை லண்டன்லதான் பதிவுசெஞ்சோம். பதிவு முடிஞ்ச பிறகு அங்கிருந்த இசைக் கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லாரும் பாராட்டினாங்க. ஜூன் 21-ம் தேதி சென்னையில இந்த இசைப் படைப்போட ஆடியோவை வெளியிட்ட பிறகு, உலகம் முழுவதுமுள்ள முக்கிய இசை அரங்குகள்ல இதை நேரடியா அரங்கேற்று வதற்கான வேலைகளும் நடந்துக்கிட்டிருக்கு.”
“இந்தப் படைப்பை உருவாக்க எவ்வளவு காலம் தேவைப்பட்டுச்சு?”
“பொதுவா ஒரு சிம்பொனியில நான்கு பகுதிகள் இருக்கும். அதுல நான்காவது பகுதியை 2025, மார்ச் 11-ம் தேதி உருவாக்கத் தொடங்கினேன். மற்ற மூன்று பகுதிகளையும் மூன்று நாள்கள்ல உருவாக்கினேன். அதற்கிடையில ‘குறளிசைக் காவியம்’ வேலைகள்ல இறங்கிட்டேன். ஆனாலும் சிம்பொனி மனசுக்குள்ளயே இருந்துச்சு. 2026, மே 2-ம் தேதி திரும்பவும் சிம்பொனி பணிகளை கையில் எடுத்தேன். ஆர்கெஸ்ட்ரேஷன், புரோகிராமிங் செஞ்சு மே 17-ம் தேதி லண்டனுக்கு அனுப்பிட்டேன்”
“சிம்பொனி இசை, சராசரி இசை ரசிகர்களுக்கானது இல்லைன்னு ஒரு கருத்து இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க?”
"இசைங்கிறது உலகம் முழுவதுக்குமான ஒரு பொதுவான மொழி. அதைப் புரிஞ்சுக்க மொழியோ, பின்னணியோ தேவையில்லை. எந்த வகையான இசையா இருந்தாலும் தொடர்ந்து கேட்க ஆரம்பிச்சா நிச்சயம் பிடிக்கும். சிம்பொனி இசையைப் பத்தி நிறைய பேருக்குத் தவறான புரிதல் இருக்கு. அது ஒரு குறிப்பிட்ட தரப்பினருக்கான இசை இல்லை. எல்லாரும் ரசிக்கக்கூடிய இசைதான். முதல்ல அதைக் கேட்க ஆரம்பிக்கணும். அவ்வளவுதான்.’’
“The World’s Best ரியாலிட்டி ஷோ வெற்றிக்குப் பிறகு உங்க வாழ்க்கையில நடந்த முக்கிய மாற்றம் என்ன? ”
“உலகமே திரும்பிப் பார்த்த தருணம் அது. மொழி, நாடெல்லாம் கடந்து மக்களிடமிருந்து கிடைச்ச அன்பு அதிகம். அதுக்காக மக்களுக்கும், இசைக்கும் நான் கடமைப்பட்டிருக்கேன். அந்த வெற்றி கொடுத்த உற்சாகத்துலதான் தொடர்ந்து புதுப்புது ஜானர்கள்ல முயற்சி பண்ண ஆரம்பிச்சேன். ஜாஸ் ஆல்பம் வெளியிட்டேன். 18-வது வயசுல, திருக்குறளை இசை வடிவத்துல கொண்டு வரும் குறளிசைக் காவியத்துக்கான வேலையை நானும் என்னோட அக்காவும் தொடங்கினோம். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைப் பாட வெச்சோம். இன்னைக்கு நான் செய்யுற எல்லா வேலையும் The World’s Best ஷோவுலருந்து ஆரம்பிச்சதுதான்.’’
“இளையராஜா உங்கள் இசைப் பயணத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?”
“சின்ன வயசுலருந்தே இளையராஜா அங்கிளோட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கேன். வயசு கூடக்கூட, அந்த இசைக்குள் இருக்கும் நுணுக்கங்கள் புரிய ஆரம்பிச்சுது. அவரோட ஒவ்வொரு பாடலிலும் ஏதாவது ஒரு அழகு இருக்கும். குறிப்பா கொரோனா காலத்துல, ராஜா அங்கிளோட பல பாடல்களை டிகோட் செய்தும் ரீ-கிரியேட் செய்தும் பார்த்தேன். ஒவ்வொரு பாடலிலும் அவரின் மெனக்கெடல்கள் எனக்கு ஆச்சர்யமா இருந்துச்சு. அந்த இயல்புதான் அவர்கிட்ட இருந்து கற்றுக்கிட்ட மிகப்பெரிய பாடம்.”
“மேற்கத்திய இசைக்குழுக்களுடன் பணிபுரிகிற அனுபவம் எப்படி இருக்கிறது?”
“ஏற்கெனவே ஜாஸ் ஆல்பத்துல மேற்கத்திய இசைக் குழுக்களுடன் பணிபுரிந்த அனுபவம் இருக்கு. அவங்க பர்ஃபெக்ஷன், மற்றவர்களைப் பாராட்டுற குணம், வேலையில காட்டுற அர்ப்பணிப்பு எல்லாமே எனக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்கு. இந்த சிம்பொனிக்காக 92 இசைக் கலைஞர்கள், சவுண்ட் இன்ஜினீயர்கள், டெக்னீஷியன்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர் களுடன் சேர்ந்து வேலை செஞ்சேன். அவங்க எல்லாருமே அனுபவசாலிகள். ஆனாலும் என் எதிர்பார்ப்புகளுக்கு முழு மதிப்பு கொடுத்தாங்க. 'இன்னொரு டேக் வேணும்'னு கேட்டாலும் சலிக்காம வேலை பண்ணாங்க. பல இடங்கள்ல என்னைப் பாராட்டியும் ஊக்கப்படுத்தினாங்க. அந்த அனுபவம் முழுக்கவே எனக்குப் பெரிய உத்வேகமாக அமைஞ்சுது.”
“இன்னும் பத்து வருடங்கள் கழிச்சு லிடியனை நாங்க என்னவா பார்க்கலாம்?”
“எத்தனை வருடங்கள் ஆனாலும் இசை சார்ந்த தேடுதல் இருக்குற ஒருவனாகவே இருக்க விரும்புகிறேன். நிச்சயம் புதுப்புது முயற்சிகளில் ஈடுபடுவேன். மக்களோட அன்பு மட்டும் இருந்தா போதும்.”


