ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் எவரும் சம்பளம் பெறமாட்டோம்
.
தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் சம்பளம் பெறப் போவதில்லை என கடற்றொழில் மற்றும் நீரியல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரினதும் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அக்மெய்மாமன பிரதேசத்தில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு பிரதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
எங்கள் 159 பேருக்கும் சம்பளம் கிடைக்கமாட்டாது. நமது அமைச்சர்களின் சம்பளம் பொது நிதியில் வரவு வைக்கப்படவுள்ளது. அந்த பொது நிதியில் இருந்து மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதை செய்வோம். அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு சலுகைகள் கிடையாது. மக்கள் சுமையாக இருக்காமல் உழைக்க வேண்டும் என்றார்.
இதே வேளை அமைச்சரவை மற்றும் பிரதி அமைச்சர்கள் முந்தைய அரசாங்கத்தில் அமைச்சர்கள் பயன்படுத்திய உத்தியோகபூர்வ வாகனங்களைப் பயன்படுத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் உத்தியோகபூர்வ சொகுசு அல்லாத, எரிபொருள் திறன் கொண்ட வாகனம் வழங்கப்படும் என்று அரசாங்கம் மீண்டும் அறிவித்துள்ளது
இதன்படி, அனைத்து அரச பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் (159)ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு அதிகார பூர்வ வாகனம் இருக்கும். அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள், தமது அமைச்சுக்களை மேற்பார்வையிட்ட முன்னைய அமைச்சர்களுக்கு அந்தந்த அமைச்சுகளால் ஒதுக்கப்பட்ட வாகனங்களைப் பயன்படுத்துவார்கள்.
அந்தவகையில், 344 அரச வாகனங்களை அடையாளம் கண்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்தநிலையில், v8s போன்ற சொகுசு வாகனங்கள் மற்றும் அதிக செலவில் பழுதுபார்ப்பு தேவைப்படும் வாகனங்கள் மற்றும் அரசு பராமரிப்பதற்கு செலவு அதிகமாகக் கருதப்படும் வாகனங்களை பகிரங்கமாக ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் தொகையை அமைச்சர்களாக இல்லாத அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை கொள்வனவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.