வடக்கு, கிழக்கில் கலந்தாய்வு நடத்தும் இந்தியா: ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் யாரை ஆதரிக்க வேண்டும்?
.
ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தரப்புகளின் நிலைப்பாடுகள் தொடர்பில் அறிந்துகொள்ளும் நோக்கில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா பல்வேறு சந்திப்புகளில் ஈடுபட்டு வருகிறார்.
அதன் முதல் கட்டமாக கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்றத்துக்குத் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
தமிழ் பொது வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் இந்தியா கவலையான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதனை நேரடியாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இந்திய தரப்பு எடுத்துரைத்துள்ளது.
அதனால் இலங்கை தமிழரசுக் கட்சி பொறுத்தமான ஒரு தீர்மானத்தை எடுக்கும் சூழ்நிலையை உருவாக்கும் முயற்சிகளில் சந்தோஷ் ஜா, ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
அதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினரை சந்தோஷ் ஜா, சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இந்தச் சந்திப்பின்போது சமகால அரசியல், ஜனாதிபதித் தேர்தல், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சினைகள், அரசியல் சம்பந்தமான பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் யாரை ஆதரிக்க வேண்டுமென சூட்சமான முறையில் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தாக தெரியவருகிறது.