வெடுக்குநாறி தொடர்பில் அரசாங்கம் தெளிவான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்!
,
வெடுக்குநாறிமலை தொடர்பில் சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றாரார்களா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.
"வவுனியா - நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் பௌத்தர்களுக்கு உரியது என புத்தசாசன அமைச்சர் சுனில் செனவி தெரிவித்திருந்தார். எனினும் இதனை அமைச்சர் சந்திரசேகர் மறுத்திருந்தார். இது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன?" என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
சிலர் வண்டுமுருகன் போல் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாங்கள் அவர்கள் போல் பதில் பேச முடியாது. ஒரு விடயம் தொடர்பிலே பேசும்போது தெளிவான கருத்துக்களைக் கூற வேண்டும். வெடுக்குநாறிமலையை சுவீகரிக்கப் போவதாக இந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் புத்தசாசன அமைச்சர் தமிழ் மக்களை நோக்கி இனவாத கருத்தை முன்வைத்திருக்கிறார்.
அதனை அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மற்றொரு அமைச்சரான சந்திரசேகர் மறுக்கின்றார். வெடுக்குநாறிமலையை இந்த அரசாங்கம் சுவீகரிக்கப் போகின்றதா இல்லையா என்பது தொடர்பில் வெளிப்படையாக கூறவேண்டும். குருந்தூர் மலையிலும் நீதிமன்ற கட்டளையை மீறி சட்டவிரோதமாக விகாரை கட்டப்பட்டது.
எனவே அமைச்சர்கள் கூறுபவை எல்லாம் இந்த நாட்டில் நடைபெறுகின்றனவா என்பதை அவர்கள் வெளிப்படையாகக் கூற வேண்டும். மக்களிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். அரசியல் செய்வதற்காக ஏமாற்றுக் கருத்துக்களை கூறக்கூடாது. அவர்களுக்கு மக்கள் விரைவிலே உரிய பதிலை வழங்குவார்கள் - என்றார்.


