பட்டம் வென்று சென்னை திரும்பிய ஜூனியர் செஸ் சாம்பியன் பிரணவ் வெங்கடேஷ் நெகிழ்ச்சி பேட்டி!
11 சுற்றில் 7இல் வெற்றியும் 4இல் டிரா செய்து 9.0 புள்ளி பெற்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

மாண்டெனோகுரோவில் நடைபெற்ற ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டியில் பட்டம் வென்று தமிழ்நாடு திரும்பிய பிரணவ் வெங்கடேஷூக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாண்டெனோகுரோ (Montenegro) நாட்டில் 20 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்றது. உலகம் முழுவதும் இருந்து 157 பேர் பங்கேற்ற இந்த போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு வீரர் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். அதன் மூலம் உலக ஜூனியர் சாம்பியன் பட்டம் வெல்லும் நான்காவது இந்தியர் என்ற பெருமையும் பிரணவ் வெங்கடேஷ் பெற்றுள்ளார்.
தொடக்கம் முதலே புள்ளி மதிப்பில் முதலிடத்தில் நீடித்திருந்த அவர், இறுதிச் சுற்றான 11-வது சுற்றில் குரோஷியாவின் மாடிக் லாவ்ரென்சிக்கை வெள்ளை நிற காய்களுடன் எதிர்த்து விளையாடினார். முந்தைய சுற்றில் 8.5 புள்ளிகளுடன் இருந்ததால் கடைசி சுற்று ஆட்டத்தை டிரா செய்தாலே வெற்றி பெறலாம் என்ற நிலையில், விளையாடிய பிரணவ் வெங்கடேஷ், போட்டியின் 18-வது நகர்த்தலில் 'டிரா' செய்து வெற்றியை தன் வசப்படுத்தினார்.
தொடரில் நடைபெற்ற 11 சுற்றில் 7இல் வெற்றியும் 4இல் டிரா செய்து 9.0 புள்ளி பெற்று முதலிடம் பிடித்து, சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார். இதுவரை நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன் தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்த், ஹரிகிருஷ்ணா, அபிஜீத் குப்தா ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றிருந்தனர்.
தற்போது 17 ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாடு வீரர் பிரணவ் வெங்கடேஷ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இந்நிலையில் நேற்று (மார்ச் 8) விமான மூலம் சென்னை வந்தடைந்த அவருக்குத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த பிரணவ் வெங்கடேஷ், “உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றதில் பெருமை கொள்கிறேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. அடுத்து உலகக் கோப்பை தகுதிச்சுற்று இந்தியாவில் நடைபெற உள்ளது. எனது அடுத்த குறிக்கோள் உலகக் கோப்பை வெல்வது தான். அதில் கவனம் செலுத்த உள்ளேன்.
இந்த முறை நான் கடினமாக பயிற்சி எடுத்து வெற்றி பெற்றுள்ளேன். இந்த போட்டியில் அனைத்து சுற்றும் எளிதாக இருந்தது. அரசு சார்பில் அனைத்து உதவிகளும் எனக்கு கிடைக்கிறது. சென்னையில் செஸ் தொடர் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மிகுந்த நன்றி.
சென்னையில் இருந்து அதிகப்படியான வீரர்கள் செஸ் போட்டியில் சாதனை படைத்து வருகின்றனர். எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து பல திறமையான செஸ் வீரர்கள் உருவாகி இந்தியாவைப் பெருமைப்படுத்த வேண்டும்,” என்றார். இதையடுத்து வீடு திரும்பிய பிரணவ் வெங்கடேஷுக்கு, அப்பகுதி மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.