கொழும்பு துறைமுகத்தில் வெளிப்பட்ட பாரிய மனித புதைகுழி: காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டனரா?
.
உயர் பாதுகாப்பு வலையத்தில் பாரிய மனித புதைகுழி!
கொழும்பு பெருநகரின் உயர் பாதுகாப்பு வலையத்தில் பாரிய மனித புதைகுழி ஒன்று வெளிப்பட்டுள்ளதாக பிபிசி சிங்கள செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இங்குருகொட சந்தியில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகளுக்காக கடந்த ஜுலை மாதம் 13ஆம் திகதி மண் தோண்டும் போது மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதனையடுத்து, புதுக்கடை நீதவான் முன்னிலையில், கடந்த ஐந்தாம் திகதி புதைகுழி தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
புதைகுழியின் வயது குறித்து தகவல் இல்லை
அண்மையில் இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட பாரிய புதைகுழிகளை அகழ்வாராய்ச்சி செய்த தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவா இந்த பாரிய புதைகுழியில் அகழ்வாராய்ச்சி பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
எவ்வாறாயினும், குறித்த மனித புதைகுழியின் வயது குறித்து இதுவரை எதுவும் ஊகிக்க முடியாது என பேராசிரியர் ராஜ் சோமதேவா சுட்டிக்காட்டியுள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாம் இன்னும் எலும்புக்கூடு நிலையை அடையவில்லை, நாங்கள் மேலே இருந்து கீழ் நோக்கிச் செல்கிறோம். எலும்பு வார்ப்புரு நிலையை அடைய இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தகவல்படி, இது நாட்டில் தோராயமாக கண்டுபிடிக்கப்பட்ட 22வது பாரிய மனித புதைகுழி ஆகும்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் புதைக்கப்பட்டுள்ளனரா?
1988 மற்றும் 89 காலப்பகுதிகளில் காணாமல் போனவர்கள் அங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என காணாமல் போனவர்களின் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளதாகவும் பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்ப சங்கத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ பிபிசி சிங்களத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை, ஏனெனில் உண்மையைக் கண்டறியும் விருப்பம் அரசாங்கங்களுக்கு இல்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
இதனிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் இலங்கை முழுவதும் பரந்து கிடக்கும் பாரிய புதைகுழிகள் பற்றிய விரிவான அறிக்கையை ஐந்து உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வெளியிட்டன.
அத்துடன், மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD) “இலங்கையில் வெகுஜன புதைகுழிகள் மற்றும் தோல்வியுற்ற அகழ்வாராய்ச்சிகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், 20 பாரிய புதைகுழிகளின் விரிவான தகவல்கள் மற்றும் வரைபடங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.