சஜித்தை ஆதரிக்கும் தமிழரசுக் கட்சியின் முடிவு: பின்புலத்தில் இந்தியா?
.
இலங்கை தமிழரசுக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
என்றாலும், இந்த முடிவு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் தனிப்பட்ட தீர்மானத்தில் எடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதுடன், அக்கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான சிவஞானம் சீறிதரன், இத்தீர்மானத்துக்கு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் இந்த தீர்மானத்தின் பின்னால் இந்தியா இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பதென தடுமாற்றத்தில் இருந்த தமிழரசுக் கட்சி, அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்திருந்தது.
இந்தச் சந்திப்பில் தமிழ் மக்கள் யாரை ஆதரிப்பது பொறுத்தமாக இருக்குமென்பதை அஜித் தோவல் மறைமுகமாக தெளிவுப்படுத்தியுள்ளார். இதன் பின்னரே சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை தமிழரசுக் கட்சி எடுத்தது.
ஆனால், இத்தீர்மானம் குறித்து கட்சியில் பல்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்ந்து நிலவி வருகிறது. குறிப்பாக தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதே பொறுத்தமாக அமையும் என சீறிதரன் உள்ளிட்ட சிலர் கூறிவருகின்றனர்.
என்றாலும், இத்தேர்தலில் தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதால் தமிழரசுக் கட்சியின் முடிவு சாணக்கியமானது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
பல்வேறு கருத்து மாறுபாடுகளுக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுக்க இந்தியாவின் அழுத்தம் கடுமையாக இருந்துள்ளதுடன், சஜித்தை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இருந்து சில அழைப்புகள் சென்றுள்ளதாகவும் தெரியவருகிறது.