சூடுபிடிக்கும் கரூர் வழக்கு - விஜய் நாளை ஆஜராக சிபிஐ மீண்டும் சம்மன்!
தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த வேலைகளில் தவெக தீவிரம் காட்டி வரும் நிலையிலும். குறிப்பாக, தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜய் நாளை நேர்காணலை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையிலும் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
கரூர் சம்பவம் குறித்த விசாரணைக்காக தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 10) மீண்டும் ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து முதலில் தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு சில நாட்கள் விசாரணை நடைபெற்றது. ஆனால், உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த வேலுச்சாமிபுரத்தில் தொடங்கி தவெக முக்கிய நிர்வாகிகளான என். ஆனந்த், டி. நிர்மல்குமார் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவர்களையடுத்து, தவெக தலைவர் விஜயும் விசாரணைக்கு டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், ஜனவரி 12 ஆம் தேதி முதலில் ஆஜரானார். அன்று சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் அவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.
அடுத்த நாளும் விசாரணையை தொடர வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்த நிலையில், பொங்கல் பண்டிகையை வருவதால் மற்றொரு நாளில் விசாரணை நடத்துமாறு விஜய் தரப்பில் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு சிபிஐ தரப்பு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது. அடுத்து முதற்கட்ட விசாரணையில் இரண்டாம் நாளாக ஜனவரி 19 ஆம் தேதி ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியது.
அதனை ஏற்று, டெல்லி சென்று விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினார் விஜய். அப்போது சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் அவரிடம் அடுக்கடுக்கான பல்வேறு கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டதாக தகவல்கள் வெளியாகின. முதல் இரண்டுகட்ட விசாரணைகளையும் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோவாகவும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.
விசாரணைக்கு மறுநாள், அடுத்தகட்ட விசாரணை குறித்து தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் எதுவும் வழங்கவில்லை என்றும், மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் அக் கட்சி நிர்வாகி நிர்மல் குமார் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கரூர் விவகாரம் குறித்து விஜய்யிடம் மீண்டும் விசாரணை நடத்த நாளை (மார்ச் 10) ஆஜராகும்படி சிபிஐ இன்று சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே 2 நாட்கள் விசாரணை நடத்தி முடித்திருந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பி இருக்கிறது. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் குறித்த வேலைகளில் தவெக தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக, தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் விஜய் நாளை நேர்காணலை தொடங்க திட்டமிட்டிருந்த நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ சம்மன் அனுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.


