தமிழக மீனவர் பிரச்சினை குறித்து மோடி கலந்துரையாடல்!
ஒரு உண்மையான அயல் நாடாக இலங்கையுடன் நின்றது பெருமையாகவுள்ளது?

தமிழக மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி இது தொடர்பாக குறிப்பிட்டார்.
இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், படகுகளை திருப்பி அனுப்பவும் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் குறித்தும் இலங்கை ஜனாதிபதியுடன் கலந்துரையாடிதாக தெரிவித்ததுடன், மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்தோடு அணுக இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
இலங்கையின் இக்கட்டான காலகட்டங்களில் குறிப்பாக, தீவிரவாத தாக்குதல், கொரோனா காலகட்டங்களில் இந்தியா, இலங்கைக்கு உதவியுள்ளது.
அதேநேரம் பொருளாதார நெருக்கடியில் இலங்கை தவித்தபோதும் இந்தியா துணை நின்றது.
ஒரு உண்மையான அயல் நாடாக இலங்கையுடன் நின்றது பெருமையாகவுள்ளது.
ஜனாதிபதி திசாநாயக்கவால் இன்றைய தினம் ‘இலங்கை மித்ர விபூஷண’ என்ற விருது எனக்கு வழங்கப்பட்டமை மகத்தான பெருமைக்குரிய விடயமாகும்.
இந்த உயரிய கௌரவம் எனக்கே மட்டும் உரித்தான ஒன்றல்ல, இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும் கிடைக்கப்பெற்ற உயர் மரியாதையாகும்.
அத்துடன் இந்திய – இலங்கை மக்களிடையிலான வரலாற்று ரீதியான உறவுகள் மற்றும் ஆழ வேரூன்றிக் காணப்படும் நட்புறவை இது குறித்து நிற்கின்றது.
இந்த கௌரவத்துக்காக இலங்கை ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என இந்திய பிரதமர் மோடி குறிப்பிட்டார்.