துணைவேந்தர் ரவீந்திரநாத் அவர்கள் "Triploli Platoon-பிள்ளையான்" கூட்டு கும்பலால் கடத்தி காணாமலாக்கப்பட்டார்.
பிள்ளையானை பயன்படுத்தி வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை கூர்மைப்படுத்த இராணுவ புலனாய்வு கட்டமைப்புகள் மேற்கொண்ட முயற்சியே பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் காணாமலாக்கியது.

துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்கள் மார்கழி 15, 2006 அன்று "Triploli Platoon-பிள்ளையான்" கூட்டு கும்பலால் கடத்தி காணாமலாக்கப்பட்டார்.
புரட்டாதி 20, 2006 முதல் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பல்வேறு வழிகளில் உயிர் அச்சுறுத்தலை எதிர்கொண்டார். யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கிழக்கு பல்கலை கழக துணைவேந்தராக இருக்க முடியாது என்கின்ற தோரணையில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது.
தொலைபேசி வழியில் தொடங்கிய அச்சுறுத்தல்கள் ஒரு கட்டத்தில் கலைப் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி பால சுகுமாரை கடத்திச் சென்று பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் துணைவேந்தர் பதவியை ராஜினாமா செய்தால், கலாநிதி பால சுகுமாரை விடுவிப்போம் என கட்டாயப்படுத்த்துமளவிற்கு எல்லை மீறியது.
இராணுவம் மற்றும் பொலிஸ் கண் முன்னே அவர்கள் வேடிக்கை பார்க்க இவை நடந்தேறின,
இவ்வாறான நெருக்கடிகளால் பாதுகாப்புமின்றி பணியாற்ற முடியாத சூழலில் துணைவேந்தர் ஐப்பசி 1, 2006 அன்று இரவு மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இடம்பெயர்ந்தார். மறுநாள், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் 30.10.2006 திகதியிட்டு தனது ராஜினாமாவையும் சமர்ப்பித்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக அவரை கொழும்பிலிருந்து பணியாற்றுமாறு பணித்தது. துணைவேந்தர் ஒருவரின் ராஜினாமாவை தங்களால் ஏற்று கொள்ள முடியாது என வாதிட்டது.
இந்த நெருக்கடிகள் குறித்து பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பொலிசில் மேற்கொண்ட முறைப்பாடுகளும் தட்டி கழிக்கப்பட்டன, பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களை பாதுகாக்க கோட்டாபய ராஜபக்சவின் தாளத்திற்கு ஆடிக்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்சே ஆட்சியாளர்களும் முயற்சிக்க வில்லை. மாறாக இராணுவ புலனாய்வாளர்களும் ஒட்டுக்குழுக்களும் தாங்கள் நினைத்ததை செய்ய கூடிய சுதந்திரத்தை வழங்கியிருந்தார்கள்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பங்குபற்றிய Sri Lanka Association for the Advancement of Science யின் Conference சில் கொழும்பிற்கு இடம்பெயர்ந்த பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் பங்குபற்றினர். கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த Vidya Mawatha (பௌத்தலோக மாவத்தைக்கு அருகில்), கொழும்பு 7 இல், இவ் Conference நடைபெற்றது. அன்று 8.30 மணிக்குஇ பேராசிரியர் ரவீந்திரநாத் அவர்களை அவரது மகளின் தெஹிவளை அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து Conference இற்கு பல்கலை கழக காரில் சென்றிருந்தார்
மதியம் 12.25 மணிக்குஇ பேராசிரியர் ரவீந்திரநாத் தனது சாரதிக்கு தொலைபேசியில் பேசியிருந்தார். பழுதுபார்க்கும் பணி இன்னும் நடந்து கொண்டிருப்பதால், உடனடியாக வர முடியாமல் இருக்கின்றது என சாரதி துணைவேந்தருக்கு பதிலளித்திருக்கின்றார். இதை தொடர்ந்து துணைவேந்தர் தனது சாரதியை மதியம் 2.00 மணிக்கு தன்னை அழைத்து செல்ல வருமாறு அறிவுறுத்தியிருக்கின்றார். இதற்கு பின் Conference மண்டபத்திலிருந்து மற்றுமொரு தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்க வெளியேறிய சில நிமிடங்களில் அவர் கடத்தப்பட்டார் என சொல்லப்படுகின்றது
இவ்வாறு கடத்தப்பட்ட அவர் அங்கிருந்து 300 KM தொலைவில் இராணுவ முகாம்களுக்கு மத்தியிலிருந்த தீவுசேனை பிள்ளையான் முகாமிற்கு கொண்டு வரப்பட்டார். இருதநோயாளியான அவரை தனக்குரிய மருந்துகளை கூட எடுக்க அனுமதிக்காமல் பங்கர் ஒன்றில் 3 நாட்கள் பிள்ளையான் தடுத்து வைத்திருந்ததாக சொல்லப்படுகின்றது. இலங்கை இராணுவத்தின் Triploli Platoon பிள்ளையனோடு சேர்ந்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றியிருந்தார்கள்.
கோத்தபாயா ராஜபக்சேஇ மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, பிரிகேடியர் அமல் கருணாசேன உட்பட புலனாய்வு கட்டமைப்பின் ஒத்துழைப்பு வழங்க உயர் பாதுகாப்பு வலயத்தில் கடத்தப்பட்ட துணைவேந்தரை எவ்வித தடையுமின்றி 300 KM தொலைவிற்கு Triploli Platoon - பிள்ளையான் கூட்டு கொண்டு சென்றது.
இந்த சம்பவத்தில் மேஜர் பிரபாத் புலத்வத்தே மற்றும் கேணல் சாமி குணரத்தின கீழ் இயங்கிய Triploli Platoon யின் தொடர்பை பிள்ளையான் கூட்டாளி அஸாத் மௌலானா உறுதி செய்கின்றார். அதே போல அக் காலப்பகுதியில் பிள்ளையான் குழுவிற்கு பொறுப்பாகவிருந்து பிள்ளையானை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே வழிநடாத்தியதாக அஸாத் மௌலானா பதிவு செய்கின்றார்.
பேராசிரியர் ரவீந்திரநாத்தின் குடும்பத்தினர் அவரது விடுதலையைப் பெற மேற்கொண்ட நடவடிக்கைகள் தோல்வியடையவும் இச் சம்பவத்தின் பின்னணியிலிருந்து மேற்படி இராணுவ தொடர்புகளே காரணமாக இருந்தது. மஹிந்த ராஜபக்சே அவர்களை நேரில் சந்தித்து முறையிட்டார்கள். கோட்டாபய ராஜபக்சே அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள். கருணா -பிள்ளையான் குழுவுடன் நேரடியாகப் பேசினர்கள்.
மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்பு சபை UN High Commissioner for Human Rights, புகழ்பெற்ற சர்வதேச கல்வியாளர்கள் உட்பட என சகல தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆரம்பத்தில் துணைவேந்தரின் ராஜினாமாவை ஏற்று கொள்ள மறுத்த பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அவர் கடத்தப்பட்ட பின்னர் 19 தை 2007 யன்று அவர் இராஜினாமாவை ஏற்று கொண்ட போதும் அவரை காப்பாற்ற முடியவில்லை .
பிள்ளையானை பயன்படுத்தி வடக்கு கிழக்கு பிரதேசவாதத்தை கூர்மைப்படுத்த இராணுவ புலனாய்வு கட்டமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களை காணாமலாக்கியது. இப்போது 18 ஆண்டுகளுக்கு பின்னர் இச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவரான பிள்ளையான் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
ஆனால் பிள்ளையானை இயக்கிய கோத்தபாயா ராஜபக்சே அடங்கலான புலனாய்வு வலையமைப்பை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்தால் மட்டுமே சம்பவத்தின் முழு பின்னணியையும் கண்டறிந்து குற்றச்செயலை உறுதிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு பெற்று கொடுக்க முடியும். முடியுமா? சிங்கள அதிகாரம் இடம் கொடுக்குமா?