தங்கத்தை விட முக்கியம்.!10 லட்சம் டன் அளவுக்கு அரிய உலோகங்கள் மற்றும் தாதுகளின் படிவங்கள்!
கஜகஸ்தானுக்கு கிடைத்த புதையல்..

மத்திய ஆசியாவில் உள்ள கஜகஸ்தான் நாட்டிற்கு இப்போது மாபெரும் ஜாக்பாட் அடித்துள்ளது. உலகின் மற்ற நாடுகள் தங்கத்தை நோக்கி ஓடும் நிலையில், இங்கு அதை விட முக்கியமான உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தை வடிவமைக்கும் திறன் கொண்ட இந்த கண்டுபிடிப்பு கஜகஸ்தானுக்கு ஜாக்பாட்டாகவே அமைந்துள்ளது.
மத்திய ஆசியாவில் உள்ள நாடு கஜகஸ்தான். முன்பு சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்த கஜகஸ்தான், இப்போது தனி நாடாக இருக்கிறது. நாட்டிற்கு இப்போது மிகப் பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. அதாவது அங்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரியளவில் அரிய தாதுகளின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கஜகஸ்தான்
கஜகஸ்தான் நாட்டில் கரகண்டா பிராந்தியத்திற்குள் உள்ள குய்ரெக்டிகோல் என்ற பகுதியில் இந்த அரிய வகை தாது படிவங்கள் கண்டறியப்பட்டுள்ளது.. இதை அந்நாட்டின் தொழில் மற்றும் கட்டுமான அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இந்த பிராந்தியத்தில் சுமார் ஒரு மில்லியன் டன், அதாவது 10 லட்சம் டன் அளவுக்கு அரிய உலோகங்கள் மற்றும் தாதுகளின் படிவங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நவீன மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்க இந்த தாத்துகள் முக்கியமாகத் தேவைப்படுகிறது. இதனால் கஜகஸ்தானுக்கு இது ஒரு பெரிய ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.
உலோக குவியல்
அஸ்தானாவிலிருந்து தென்கிழக்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள குய்ரெக்டிகோல் என்ற இடத்தில் பல இடங்களில் இதுபோல அரிய தாதுகளின் படிவங்கள் இருக்கிறதாம். இந்த மண்டலங்களில் அரிய தனிமங்களின் படிவங்கள் 0.1%ஐ விட அதிகமாக இருக்கிறதாம். சில இடங்களில் 0.25% வரை கூட இருக்கிறதாம். முதற்கட்டமாக இர்கிஸ் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வில் சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் டன் அளவுக்கு அரிய உலோகங்களின் படிவங்கள், சராசரியாக 0.1%என்ற ரேஞ்சில் இருக்கிறது.
0.1% என்பது குறைவு போலத் தோன்றலாம். ஆனால், உண்மையில் அரிய தனிமங்களின் படிவங்களில் இது அதிகம். வழக்கமாக அரிய தனிமங்களின் படிவங்கள் என்பது 0.05 - 0.08% என்ற ரேஞ்சிலேயே இருக்கும். இதனால் 0.1% அல்லது 0.25% வரை இருந்தால் இது நிஜமாகவே கஜகஸ்தானுக்கு லக் தான். வெட்டி எடுக்கும்போது அதிக லாபத்தைப் பார்க்க முடியும்.
வேறு இடத்திலும் இருக்கிறது
குய்ரெக்டிகோல் மட்டுமின்றி பெரிய ஜானா கஜகஸ்தான் என்ற பகுதி சுற்றியுள்ள பகுதிகளில் 300 மீட்டர் ஆழத்தில் 20 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அரிய உலோகங்களின் படிவங்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர். அங்கு சீரியம், லந்தனம், நியோடைமியம் மற்றும் யட்ரியம் போன்ற அதிக மதிப்பு கொண்ட அரிய உலோகங்களின் படிவங்கள் இருக்கிறதாம். ஒரு டன்னுக்கு சராசரியாக 700 கிராம் என்ற ரேஞ்சில் இருக்கிறதாம். உலகின் மற்ற பகுதிகளில் இந்த ரேஞ்சில் அரிய உலோகங்கள் காணப்படுவது இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.
இந்த அரிய உலோகங்கள் மின்சார வாகனங்கள், காற்றாலை கருவிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற தொழில்நுட்பங்களுக்கு இன்றியமையாதவையாக உள்ளன. இதன் தேவை சர்வதச அளவில் அதிகரித்து வருகிறது. தற்போது சீனா மட்டுமே இதில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அதற்குப் போட்டியாக கஜகஸ்தானின் இந்த கண்டுபிடிப்பு இருக்கிறது.
சிக்கலும் இருக்கு
அதேநேரம் கஜகஸ்தானிடம் இந்த அரிய உலோகங்களை வெட்டி எடுக்கத் தேவையான தொழில்நுட்பம் இல்லை. மேலும், பிரித்தெடுத்தல் உள்ளிட்ட இதர பணிகளுக்கான உள்கட்டமைப்பும் இல்லை. இதனால் கஜகஸ்தான் அரசு வெளிநாட்டு முதலீட்டைக் கோரி வருகிறது. சரியான வெளிநாட்டு முதலீடு கிடைத்து அரிய தாதுகளை கஜகஸ்தான் வெற்றிகரமாக வெட்டி எடுத்தால் அது அரிய உலோகங்களின் முன்னணி சப்ளையராக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.