ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்
.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் நேற்று (17) கொல்லப்பட்டதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் தலைவர் இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். யாஹ்யா சின்வாரை அவர் ‘படுகொலை மற்றும் அட்டூழியங்களுக்குப் பின்னால் இருந்த மூளை’ என்று வர்ணித்துள்ளார்.
மேலும் “இது இஸ்ரேலுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இராணுவ மற்றும் தார்மீக சாதனை. ஈரான் தலைமையிலான தீவிர இஸ்லாத்தின் தீய அச்சுக்கு எதிராக முழு சுதந்திர உலகிற்கும் கிடைத்த வெற்றி,” என்றார் காட்ஸ்.
“சின்வாரைக் கொன்றது பணயக்கைதிகளை உடனடியாக விடுவிக்கும் வாய்ப்பைத் திறக்கிறது. இது காஸாவில் ஹமாஸ், மற்றும் இரானின் கட்டுப்பாடு இல்லாத ஒரு புதிய மாற்று யதார்த்தத்திற்கு வழி வகுக்கும்,” என்றார்.
முன்னதாக, ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் காஸாவில் கொல்லப்பட்டாரா என்பதற்கான ‘சாத்தியக்கூறுகளைச் சரிபார்த்து வருவதாக’ இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருந்தது.
இது ஹமாஸ் ஆயுதக்குழுவுக்கு மிகப்பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்ட பிறகு 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், சின்வார் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.