ரஷ்யா அணுஆயுத மிரட்டல்: யுக்ரேனின் ஏவுகணை கோரிக்கை பற்றி அமெரிக்கா – பிரிட்டன் முடிவு என்ன?
.
சமீபத்தில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு ரஷ்யாவிற்குள் ஊடுருவி அதன் உள்புற இலக்குகளைத் தாக்குவதற்கு நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த யுக்ரேனை அனுமதிப்பது குறித்து சர் கியர் ஸ்டார்மர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை.
யுக்ரேன் குறித்து ஒரு உத்தியில் கவனம் செலுத்துவது குறித்து இருவரும் ஆக்கப்பூர்வமாக கலந்துரையாடியதாக சர் கியர் ஸ்டாமர் கூறினார்.
“இரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்குவது குறித்து ஆழ்ந்த கவலையை” வெளிப்படுத்துவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இரானில் தயாரிக்கப்பட்ட 70க்கும் மேற்பட்ட டிரோன்களைப் பயன்படுத்தி யுக்ரேன் முழுவதும் இரவோடு இரவாக ரஷ்யா தாக்கியது என்றும், தனது நாட்டு மக்களை பாதுகாக்க யுக்ரேனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் தேவை என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) அன்று தெரிவித்தார்.
“இதற்காக நாங்கள் அனைத்து நட்பு நாடுகளுடனும் ஆலோசித்து வருகிறோம்”, என்று அவர் கூறியிருந்தார்.
வெள்ளை மாளிகையில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முன்பாக, ரஷ்யா மீது யுக்ரேன் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க அனுமதிக்க வேண்டாம் என்று மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இத்தகைய நடவடிக்கைகள் ரஷ்யா – யுக்ரேன் போரில் நேட்டோ நாடுகளின் “நேரடி பங்கேற்பை” குறிக்கும் விதமாக இருக்கும் என்று புதின் கூறினார்.
“புதினின் அச்சுறுத்தல்களை மீறி ரஷ்யாவில் நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க யுக்ரேனுக்கு நேட்டோ நாடுகள் அனுமதி அளிக்க வேண்டும்.
வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டும் நடத்துவது ரஷ்ய அதிபருக்கு நன்மை பயப்பதாக இருக்கின்றது” என்று பிரிட்டனின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் சர் பென் வாலஸ் பிபிசி ரேடியோ 4-இன் டுடே நிகழ்ச்சியில் கூறினார்.
“இது மற்றொரு விஷயம் சார்ந்த இன்னொரு இழுபறியாக இருப்பதால் நான் ஏமாற்றமடைகிறேன்”, என்று மேலும் அவர் தெரிவித்தார். சர் பென் வாலஸ், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. ஆவார்.
மேற்கத்திய நாடுகளின் நடவடிக்கைகளை தடுக்கவே புதின் இவ்வாறு எச்சரிக்கை விடுப்பதாக யுக்ரேன் பேச்சுவார்த்தைகளுக்கான முன்னாள் அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி கர்ட் வோல்கர் கூறினார்.
“இதுகுறித்து நாங்கள் நடவடிக்கை எடுப்பதை தடுக்கவே புதின் இவ்வாறு கருத்து தெரிவித்து வருகிறார். அவர் உண்மையில் என்ன செய்யப் போகிறார் அல்லது என்ன செய்ய நினைக்கிறார் என்பது இதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை”, என்று அவர் டுடே நிகழ்ச்சியில் கூறினார்.
வெள்ளை மாளிகையில் பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமரை சந்திப்பதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “விளாதிமிர் புதினைப் பற்றி நான் அதிகம் நினைப்பதில்லை”, என்று கூறினார்.
ரஷ்யாவிற்குள் உள்ள இலக்குகளை நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு தாக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரு நாடுகளும் இன்று வரை யுக்ரேனுக்கு அனுமதி வழங்கவில்லை.
ஆனால், ரஷ்யா- யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழி இதுதான் என்றும், இதற்காக இந்த ஏவுகணைகளை பயன்படுத்த யுக்ரேனுக்கு அனுமதி வழங்குமாறும் மேற்கத்திய நட்பு நாடுகளிடம் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீண்ட தூர ஏவுகணை
2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் யுக்ரேன் மீது ரஷ்யா முழு வீச்சில் படையெடுப்பைத் தொடங்கியதில் இருந்து, யுக்ரேன் மீது ரஷ்யா தினசரி குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தி வருகிறது.
யுக்ரேனின் இராணுவ நிலைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், எரிசக்தி வசதிகள் மற்றும் மருத்துவமனைகளைத் தாக்கும் பல ஏவுகணைகள் மற்றும் குண்டுகள் ரஷ்யாவால் ஏவப்படுகின்றன.
இந்தத் தாக்குதல்களை நடத்த ரஷ்யா பயன்படுத்தும் தளங்களைத் தாக்க தங்களை அனுமதிக்காதது தங்களது தற்காப்புத் திறனைத் தடுக்கிறது என்று யுக்ரேன் கூறுகின்றது.
கடந்த மாதம் யுக்ரேன் படைகள் ரஷ்ய எல்லையைத் தாண்டி திடீர் தாக்குதலை மேற்கொண்டன. இதனை தொடர்ந்து பிரிட்டன் வழங்கிய ஆயுதங்களை யுக்ரேன் ‘தற்காப்புக்காக’ பயன்படுத்த முழு உரிமை அந்நாட்டிற்கு இருப்பதாகவும், ‘ரஷ்யாவிற்குள் இதனை பயன்படுத்தினால் தடுக்க மாட்டோம்’ என்றும் பிரிட்டன் கூறியது.
அமெரிக்கா இந்த ஆண்டின் தொடக்கத்தில் யுக்ரேனுக்கு நீண்ட தூர ஏவுகணைகளை வழங்கியது, ஆனால் இவற்றின் மூலம் ரஷ்யாவின் உள்புற இலக்குகளைத் தாக்க அனுமதி வழங்கப்படவில்லை.
நேட்டோ நாடுகளுடன் நேரடி போர் ஏற்படும் சாத்தியம் உண்டாகும் என்ற ரஷ்ய அதிபர் புதினின் அச்சுறுத்தல்களால் அவர் பயமுறுத்தப்பட்டாரா என்று பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “யுக்ரேன் போரில் ‘விரைவான தீர்வுக்கான வழி’ என்பது ‘புதின் உண்மையில் என்ன செய்கிறார்’ என்பதில் தான் இருக்கிறது”, என்று கூறினார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடனான வெள்ளை மாளிகை சந்திப்பில் யுக்ரேன் குறித்து குறிப்பிட்ட படிநிலை அல்லது செயல்முறை பற்றி அல்லாமல் ஒரு உத்தி குறித்து விவாதிக்க ஒரு வாய்ப்பாக இருந்தது என்று சர் கியர் ஸ்டார்மர் கூறினார்.
இஸ்ரேல்-காஸா இடையே நீடிக்கும் போர் குறித்தும் மத்திய கிழக்கு நிலவரம் குறித்தும் இருவரும் பேசியதாக அவர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பிற்கு முன்னதாக, கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பேசுகையில், “ரஷ்ய பகுதிகளை தாக்குவதற்கு அமெரிக்க ஆயுதங்களை யுக்ரேன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரம்புகளில் எந்த மாற்றத்தை கொண்டு வர திட்டமிடவில்லை” என்றார்.
பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டாமர், அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வாஷிங்டனில் சந்தித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் 6 பேரை உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி ரஷ்யா வெளியேற்றியது.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” என்று பிரிட்டன் வெளியுறவுத் துறை அலுவலகம் நிராகரித்தது.
பிரிட்டனில் புதிதாக பதவி ஏற்ற தொழிலாளர் கட்சி அரசாங்கத்தையும், மாற இருக்கும் பைடனின் நிர்வாகத்தையும் சோதிப்பதற்காகவே புதின் இவ்வாறு செய்கிறார் என்று பிரிட்டன் பாதுகாப்பு ஆய்வாளர் ஜஸ்டின் க்ரம்ப் பிபிசி-க்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
“ரஷ்யா ஏற்கனவே பிரிட்டனின் எதிரிகளுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளது. நேட்டோ உறுப்பினர்களின் நலன்களுக்கு எதிராக நாசவேலை, உளவு, அழிவு மற்றும் தகவல்/சைபர் சார்ந்த நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டு வருகின்றது”.
“இவை அனைத்தும் விரைவுபடுத்தப்படலாம். யுக்ரேனை எதிர்த்து ரஷ்யா போரிடுவதை கருத்தில் கொண்டு பார்க்கும் போது நேட்டோ நாடுகளுக்கு எதிராக போராட்டத்தை தொடுப்பது ரஷ்யாவிற்கு சவாலானதாக இருக்கலாம்”, என்று அவர் கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, ரஷ்ய ஊடகமான RT-க்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்தது. இது “ரஷ்யாவின் உளவுத்துறை அமைப்புடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கிறது” என்று அமெரிக்கா குற்றம் சாட்டியது.
“ரஷ்ய ஊடகமான RT, அமெரிக்காவில் ஜனநாயகத்திற்கு குழிபறிக்க இரகசியமாக முயன்று வருகின்றது”, என்று உயர்மட்ட அமெரிக்க அதிகாரியான ஆண்டனி பிளிங்கன் கூறினார்.
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த RT செய்தி ஆசிரியர் மார்கரிட்டா சிமோன்யான், “RT ஊழியர்கள் பலரும் அமெரிக்காவில், அந்நாட்டின் உதவித்தொகை பெற்று படித்தவர்கள்” என்று கூறியுள்ளார். இவர் மீதும் அமெரிக்கா கடந்த வாரம் தடை விதித்துள்ளது.
ரஷ்யா மீது அடுத்தடுத்து பல தடைகளை அமெரிக்கா விதித்து வருவது குறித்துப் பேசிய ரஷ்ய வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மரியா ஸக்கரோவா, ரஷ்யா மீது தடைகளை விதிக்கும் நிபுணத்துவம் பெறும் புதிய வேலை அமெரிக்காவில் இருக்க வேண்டும் என்றார்.