”நான் இசை தெய்வம் இல்லை, சாதாரண மனிதன் தான்” - சிம்பொனி நிகழ்ச்சிக்கு பிறகு சென்னை வந்த இளையராஜா பேட்டி!
அரசு மரியாதையுடன் வரவேற்ற முதல்வருக்கு எனது நன்றிகள்.

ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கிறார்கள், நான் சாதாரண மனிதர் தான் என லண்டனில் சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்து சென்னை திரும்பிய இளையராஜா கூறியுள்ளார்.
நிசப்தமான நேரத்தில் அனைவரும் ஒரே ஸ்வரத்தை வாசிக்கும் போது, கேட்கும் ரசிகர்கள் மூச்சுவிட மறந்துவிட்டு, ரசித்துக் கொண்டிருந்தனர்.
இசைஞானி இளையராஜா தான் இசைத் தெய்வம் இல்லை, ஒரு சாதாரண மனிதன் என கூறியுள்ளார். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா லண்டனில் உள்ள ’eventim apollo’ என்ற அரங்கத்தில் தனது வேலியண்ட் (Valiant) என்ற சிம்பொனி இசையை கடந்த சனிக்கிழமை நள்ளிரவு இந்திய நேரப்படி 12.30 மணிக்கு அரங்கேற்றம் செய்தார். ராயல் பிலார்மோனிக் என்ற இசைக்குழுவுடன் தனது சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று (மார்ச்.10) காலை சென்னை விமான நிலையம் வந்த இசைஞானி இளையராஜாவை தமிழ்நாடு அரசு சார்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உற்சாக வரவேற்பு அளித்தார். பின்னர் செய்தியாளரை சந்தித்த இளையராஜா, “அரசு மரியாதையுடன் வரவேற்ற முதல்வருக்கு எனது நன்றிகள். அரசு மரியாதையுடன் வரவேற்றது மனம் நெகிழச் செய்தது. மிகவும் மலர்ந்த முகத்துடன் நீங்கள் என்னை வழியனுப்பி வைத்ததே இறைவன் இந்த நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்த அருள்புரிந்தார்.
சிம்பொனி அரங்கேற்றம் குறித்து இளையராஜா பேச்சு: இது சாதாரண நிகழ்வல்ல, இசையை எழுதிவிடலாம், வாசித்துவிடலாம். ஆனால் ஓவ்வொருவரும் வித்தியாசமாக வாசித்தால் என்னவாகும். நான் சென்றவுடன் சிம்பொனியின் ஒத்திகையில் கலந்து கொள்ளத் தான் நேரம் இருந்தது. அதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், அரங்கேற்றத்தின் போது, விதிமுறைகளை மீறி வாசிக்கக் கூடாது. அந்த நிசப்தமான நேரத்தில் அனைவரும் ஒரே ஸ்வரத்தை வாசிக்கும் போது, கேட்கும் ரசிகர்கள் மூச்சுவிட மறந்துவிட்டு, ரசித்துக் கொண்டிருந்தனர்.
மொத்த சிம்பொனியும் சேர்த்து 4 பகுதிகளை கொண்டது. ஒவ்வொரு பகுதி முடியும் போதும் கைதட்ட கூடாது, ஆனாலும் அனைவரும் கைதட்டி ரசித்தனர். அனைத்து இசை வல்லுநர்களும் சிம்பொனியை பாராட்டினர். தமிழ்நாடு மக்கள் அனைவரும் வாழ்த்திக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்த சிம்பொனி இசையை நீங்கள் டவுன்லோடு செய்து, கேட்கக் கூடாது.
இந்த சிம்பொனி இசை 80 வாத்தியக் கருவிகளில் ஒரே நேரத்தில் வாசிக்கப்பட்டது. இதனை நேரடியாக கேட்க வேண்டும். சிம்பொனி இசையில் இரண்டாவது பகுதியில் நமது சினிமாப் பாடலை அவர்களை வாசிக்க வைத்து, நானும் பாடினேன். அவர்களோடு பாடியது எனக்கு கடினமாக இருந்தது. அதற்கும் மக்கள் கைதட்டி நல்ல வரவேற்பு கொடுத்தார்கள்.
தொடர்ந்து 13 நாடுகளில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. துபாய், பாரிஸ் உள்ளிட்ட 13 நாடுகளில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழர்கள் இல்லாத பகுதிகளில் இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்னை கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் நேரடியாக இந்த சிம்பொனி இசையை கேட்க வேண்டும்.நான் இசை தெய்வம் அல்ல: ரசிகர்கள் என்னை இசை தெய்வம் என அழைக்கிறார்கள், நான் சாதாரண மனிதர் தான். இளையராஜா அளவிற்கு கடவுளை கீழே இறக்கிவிட்டீர்கள். இந்த இசை உலகம் செல்லப் போகிறது. 82 வயது ஆகிவிட்டது, இனி நான் என்ன செய்யப் போகிறேன் என நினைக்க வேண்டாம். இனிமேல் தான் ஆரம்பிக்கப் போகிறேன். பண்ணையப்புரத்திலிருந்து இன்று வரை எனது வெறும் கால்களில் நடந்து, எனது சொந்த கால்களில் தான் நிற்கிறேன். இளைஞர்கள் என்னை முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, அவர்கள் துறையில் மென்மேலும் வளர்ந்து இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என இளையராஜா தெரிவித்தார்.