ஒற்றுமையின்மையால் எமது மக்களையும் மண்ணையும் நாம் இழந்துவிடக்கூடாது –
.
தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது. எமது ஒற்றுமை இன்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட ரெலோ கட்சியின் தலைவர் தங்கதுரை, தளபதி குட்டிமணி, முன்னாள் போராளி ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் 41வது நினைவேந்தல் நிகழ்வு நேற்று சனிக்கிழமை (27) மாலை 6 மணியளவில் மன்னாரில் உள்ள தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் போராளிகளுக்கு அஞ்சலி செலுத்திய பின் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஓர் இன அழிப்பின் ஆரம்ப இடம் வெலிக்கடை சிறைச்சாலை. ஓர் இனத்தின் மீது வன்முறைகள் ஆரம்பிக்கப்படுவது தான் இலங்கை வரலாற்றில் கூறப்படுகின்ற மிக மோசமான வன்முறையாக உள்ளது.
இந்த நாட்டில் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளது. தன்னைக் கொலை செய்வதன் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் இணைவார்கள் என தலைவர் கூறிய தீர்க்கதரிசனம் 1983ஆம் ஆண்டு இளைஞர் யுவதிகள் தமது உயிரை எமது தேசத்திற்காக தியாகம் செய்துள்ளனர்.
ஆயுதப் போராட்டமாக மாறி தற்போது ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டு, மீண்டும் அகிம்சை ரீதியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு எமது இனத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டு வரும் கால கட்டத்தில் இருக்கிறோம்.
எமது மக்களின் நிலங்கள், கடல் வளம், மண் அபகரிக்கப்படுகின்றன. நாங்கள் ஒரு காலத்திலே தமிழர்கள் பூர்வீகமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்தார்கள் என்கிற வரலாற்றை சிதைக்கும் வகையில் இன்றைக்கு தென்னிலங்கை திட்டமிட்டு பல விடயங்களை அரங்கேற்றி வருகிறது.
தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர்களையும் போராளிகளையும் இழந்த இயக்கமாக தொடர்ச்சியாக செயல்பட்டு வந்தாலும் கூட தலைவர்களின் சிந்தனையின் அடிப்படையில் எல்லா போராளிகளையும் அரவணைத்து செல்ல வேண்டும் என்பதன் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியுள்ள போதும் ஏனைய ஐந்து கட்சிகளுடன் போராட்ட கட்சியான ஜனநாயக போராளிகள் கட்சியையும் இணைத்து செயல்பட்டு வருகிறோம்.
இன்று நாங்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகிறோம். நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் எமது மக்களை காப்பாற்ற முடியாது.
தென்னிலங்கையில் உள்ளவர்கள் வடக்கு, கிழக்கில் ஆட்சி நடத்தக்கூடிய அல்லது அவர்களின் செயல்பாட்டை இங்கே திறம்பட செய்யக்கூடிய வாய்ப்பை எமது ஒற்று இன்மையால் காவு கொடுக்கிற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்துவிடுவோம்.
எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து மக்களின் விடுதலைக்காக செயல்பட்டு மக்கள் விரும்புகின்ற ஒற்றுமையை பேணி எமது மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது மண்ணை மீட்டெடுக்கும் தார்மிக செயற்பாட்டை முன்னெடுக்க இன்றைய நாளில் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
எமது ஒற்றுமையின்மை காரணமாக எமது மக்களையும் மண்ணையும் நாங்கள் இழந்துவிடக்கூடாது என்பதையும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.