ஏ.ஜே.எம்.முஸம்மில் சஜித்துக்கு ஆதரவு: பின்புலத்தில் இந்தியா?
.
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நடத்திய சந்திப்பின் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏ.ஜே.எம்.முஸம்மில் தமது ஊவா மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததுடன், சஜித் பிரேமாசவை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதாகவும் அறிவித்திருந்தார்.
இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த சில மணி நேரங்களில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் இவரது முடிவு வெளியானதால் இந்த முடிவின் பின்புலத்தில் இந்தியாவின் அழுத்தம் இருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளரும் 50 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற முடியாதென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துவரும் பின்புலத்தில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் சஜித்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமா செய்வதற்கு முன், இந்திய உயர் ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா ஹவுஸில் உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்த விடயம் தொடர்பில் உயர் ஸ்தானிகராலய அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாவது,
“இது அரசியல் உரையாடல் மற்றும் இருதரப்பு உறவுகள் பற்றிய வழக்கமான சந்திப்புகளில் ஒன்றாகும்,” ஏ.ஜே.எம்.முஸம்மில் இராஜினாமாவிற்கும் பிரேமதாசாவை ஆதரிப்பதாக அவர் தெரிவித்துள்ளமைக்கும் இந்தியாவுக்குவும் எந்த தொடர்பும் இல்லை என அவர் கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தேர்தல் களத்தில் சஜித் பிரேமதாசவுக்கான ஆதரவு அதிகரித்துவரும் பின்புலத்தில் ஏ.ஜே.எம்.முஸம்மிலின் ஆதரவு பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்திய தூதுவருடான சந்திப்பின் பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அடுத்துவரும் சில நாட்களில் இந்தியாவின் தலையீடு தேர்தலில் அதிகமாக இருக்கும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.