பசறை, பதுளை, லுணுகலை ஆகிய பிரதேச சபைகளில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாற இருக்கின்றோம்.- தங்கையா பிரதீபன்
"இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு உங்களுக்கு தெரியும் எங்களின் பிரதிநிதிகள் எங்கு சென்றாலும் வாய் திறந்து பேச முடியாமல் இருக்கிறது"

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பதுளை தேர்தல் தொகுதிகளில் எங்களது பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்வதற்கான ஒரு செயற்பாட்டை நாம் மேற்கொண்டு வருகின்றோம் .
இன்று உங்களுக்கு தெரியும் எங்களது நேரடி வேட்பாளர்களும் பட்டியல் வேட்பாளர்களும் தோட்ட புறத்திலே லயத்து வாழ்க்கையை சுவாசிக்க கூடிய இளைஞர் யுவதிகள் அரசியல் துறையை சார்ந்தவர்கள் தொழிற்சங்க வாதிகள் தோட்ட தொழிலாளர்கள் என பல்வேறுபட்ட சமூகத்தில் நற்பிரஜைகளுக்கான வாய்ப்பினை வழங்கியுள்ளோம்"என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பசறை தொகுதி அமைப்பாளரும் தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பில் பசறை பிரதேச சபைக்கு டோச் லைட் சின்னத்தில் போட்டியிடும் தங்கையா பிரதீபன் தொழிலாளர் தேசிய சங்க காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இன்று தமிழ் முற்போக்கு கூட்டணியை விமர்சனம் செய்து கொண்டிருக்கும் நபர்கள் உங்களுக்கு தெரியும் கடந்த காலங்களில் பிரதேச சபையின் ஊடாக என்னென்ன வேலைத்திட்டங்கள் செய்திருக்கிறார்கள் என்று.
இன்றுதான் அவர்கள் தோட்டபுறங்களுக்கு காலடி எடுத்து வைத்து கொண்டும் இருக்கின்றார்கள். இருப்பினும் அவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிப்பதற்கு மக்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.
எங்களுடைய நோக்கம் இந்த விம்பத்தை உடைத்து எறிந்து மடக்கும்பரை லயத்து வாழ்க்கையில் இருந்து நாடாளுமன்றம் சென்றவர் தான் எங்களுடைய தலைவர் பழனி திகாம்பரம். அதைப் போன்று தான் எங்கள் கட்சியில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் லயத்தில் இருந்து சென்றவர்கள் தான்.
அவர்களை சபைக்கு கொண்டு வருவதற்காகவே மக்கள் தயாராகி கொண்டு இருக்கின்றார்கள்.
ஆனால் எங்களை விமர்சனம் செய்து கொண்டு இருக்கிறார்கள் . நாங்கள் வாக்குகளை சிதறடிக்கிறோம் என்று இதற்கான தகுந்த பதிலடியை எதிர்வரும் 6 ம் திகதி பசறை, பதுளை, லுணுகலை பகுதிகளில் வாழும் மக்கள் சரியான பாடத்தை காட்டுவார்கள் .
பசறை, பதுளை, லுணுகலை ஆகிய பிரதேச சபைகளில் தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாற இருக்கின்றோம்.
எனவே டோச் லைட் சின்னத்திற்கு உங்களது வாக்குகளை உங்களை போல் லயத்து வாழ்க்கை வாழ்கின்ற இளைஞர்களுக்கு அரசியலில் ஒரு களம் அமைத்து தருமாறு உங்களுக்கு கோரிக்கை விடுக்கின்றோம். அதே போல உங்களுக்கு தெரியும் உங்களது அரசாங்கத்திலே பாரதத்தின் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்த போது பாரத பிரதமர் எங்கள் தலைவர்களை சந்தித்தார்.எங்களது தலைவர்கள் மலையக மக்களது பிரச்சினைகளை பாரத பிரதமருக்கு எடுத்து கூறியும் இருந்தார்கள்.
ஆனால் இம்முறை அரசாங்கத்தில் இருக்கின்ற எந்த ஒரு மலையக பிரதிநிதிகளையும் பாரத பிரதமர் சந்திக்கவில்லை.
கடந்த காலத்திலே பதுளை மாவட்டத்தில் பெயருக்கு சரி இரண்டு அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் இருந்தனர். ஆனால் தற்போது இருப்பவர்கள் வாய் மூடி பேச முடியாமல் இருக்கின்றார்கள். பதுளை மாவட்டத்திற்கு கிடைக்கவிருந்த இரண்டு பிரதி அமைச்சு பதவிகளும் இல்லாமல் போயிருக்கின்றது. மலையகத்திற்கான உட்கட்டமைப்பு அமைச்சும் இன்று பிரதி அமைச்சாக மாறி இருக்கிறது.
எனவே இந்த அரசாங்கத்தின் நிலைப்பாடு உங்களுக்கு தெரியும் எங்களின் பிரதிநிதிகள் எங்கு சென்றாலும் வாய் திறந்து பேச முடியாமல் இருக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார்.