தமிழர் மனங்களை இதுவரை வெல்லத் தவறிய ஜனாதிபதிகள்
.
பங்களாதேஷ் பிரதமர் மக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது மொட்டுக் குழுவினருடன் அங்கு சென்று இடைக்கால அரசாங்கத்தை அமைத்து அங்கு உள்ளதையும் இல்லாமல் செய்துவிட்டு வரலாம் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது தயாசிறி ஜயசேகர கூறுகையில்,
30 வருட யுத்தத்தின் பின்னர் இந்த நாட்டில் பெரும் பிரிவினைகள் ஏற்படுத்தப்பட்டன. 2009 யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள, அவர்களின் வேதனைகளை பகிர்ந்துகொள்ள பாலத்தை அமைக்க எந்தவொரு ஜனாதிபதியும் நடவடிக்கை எடுக்கவில்லை. 2005இல் மகிந்த ராஜபக்ஷவுக்கு வடக்கில் வாக்குகள் கிடைக்கவில்லை. இதனால் அவர் தெற்கின் பெரும்பான்மையினத்தவர்களின் ஜனாதிபதியாக இருந்தார். 2015இல் மைத்திரிபால சிறிசேன தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை அதிகமாக பெற்றதுடன், தெற்கில் குறைவான வாக்குகளை பெற்றார். கோதாபய ராஜபக்ஷ தமிழ், முஸ்லிம் மக்களின் குறைந்த வாக்குகளையே பெற்றார். ஆனால் இனி அடுத்த ஜனாதிபதியாக வருபவர் நாடு முழுவதும் தமிழ், சிங்களம், முஸ்லிம் எனவும் வடக்கு, கிழக்கு, மலையகம், தெற்கு எனவும் அனைத்து இன மக்களின் வாக்குகளையும் பெற்றுக்கொள்ளும் தலைவராக சஜித் பிரேமதாச இருப்பார்.
இதன்படி நாங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்துகொண்டு நாங்கள் உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்கின்றோம். நாங்கள் மத்தியஸ்த சமூக ஜனநாயகத்திற்காக முன்னிருக்கின்றோம்.
இன்று வருமையான மக்களால் நிறைந்த நாட்டில் மொட்டுக் கட்சியின் திருடர்களால் நிறைந்ததாக ஜனாதிபதியின் தரப்பு இருக்கின்றது. அவரின் கடந்த 2 வருடங்களிலேயே மொட்டுக் கட்சியின் 44 பேர் ஊழல் மோசடி வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. இவர்களை சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் போடும் வேலைத்திட்டங்களை எமது சஜித் பிரேமதாச அரசாங்கத்தில் முன்னெடுக்க வேண்டும். நாங்களும் கடந்த கால வேலைகளை செய்தால் நீண்ட காலத்திற்கு இருக்க முடியாது போகும். மீண்டும் எங்களுக்கு தாக்குதல் நடத்தும் காலம் தொலைவில் இல்லை.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க இன்னும் சில வேலைகளை செய்ய வேண்டும். அதாவது தற்போது பங்களாதேஷில் பிரதமரை விரட்டியுள்ளனர். இன்னும் நான்கு வருடங்கள் உள்ளன. வேண்டுமென்றால் அவர்களுடன் இணைந்து மற்றும் மொட்டுக் குழுவினரை அழைத்துச் சென்று அங்கு திருட்டில் ஈடுபட்டவர்களுடன் இணைந்து தமது அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியும். எவ்வாறாயினும் செப்டம்பர் 21ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசவே இருப்பார் என்றார்.