புழல் சிறை கைதியின் 'தாடி' வழக்கு; சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு..!
.
கைதிகள் சிறையில் நீண்ட தாடி வளர்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்துவ மதப்படி நீண்ட தாடி வளர்த்து வரும் சிறை கைதியை புழல் சிறை அதிகாரிகள் தாடியை வெட்ட வேண்டும் என கூறி வந்த நிலையில், அதனை எதிர்த்து நீதிமன்றம் சென்ற கைதிக்கு சாதகமான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
சென்னை, புழல் சிறையில் இருக்கும் கைதி டேனியிரல் ராஜா, சிறைக்குள் தாடி வளர்க்க அனுமதிக்கி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், '' நான் புழல் சிறையில் பல ஆண்டுகளாக உள்ளேன். நான் கிறிஸ்துவ மதப்படி நீண்ட தாடி வளர்த்து வருகிறேன். தன்னுடைய மத நம்பிக்கைகளின் படி நீண்ட தாடி வைப்பது தவறில்லை.
ஆனால், புழல் சிறை அதிகாரிகள் சிறையில் எனது தாடியை வெட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இது குறித்து உயர் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம, ஜோதிராமன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முனியப்பராஜ், சிறையில் கைதிகள் நீண்ட தாடி வைக்க கூடாது என விதிகள் உள்ளது. தாடி வைப்பதாக இருந்தால் உரிய மருத்துவ சான்றிதழ் பெற வேண்டும். தாடியை நீளதாக வளர்ப்பதற்கு பதிலாக குறைவாக வைத்துக்கொள்ள சிறை விதியில் உள்ளது என வாதிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் டேனியல் ராஜாவின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சிறைத் துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், கைதிகள் சிறையில் நீண்ட தாடி வளர்க்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் முடிவு செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.