ஆதிநிலத்தை மூவின் தாய்நிலம் (Land of Mu). மாயன் நாகரீகம்!
.
ஆதிநிலத்தை மூவின் தாய்நிலம் (Land of Mu)
அவரது பெயர் சார்ல்ஸ் எதியன் பிரேசர் தி போபோர்.
அவர் ஒரு துறவி, ஓர் எழுத்தாளர், ஓர் அகழ்வாராய்ச்சியாளர் கூடவே அவர் ஓர் இனவியலாளர். மத்திய அமெரிக்காவில் ஒருகாலத்தில் வாழ்ந்த மாயன்களைப் பற்றி இவர் அளவுக்குத் தெரிந்தவர்கள் வேறு யாருமில்லை.
மாயன்களைப் பற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம். மத்திய அமெரிக்காவில் ஒருகாலத்தில் கொடிகட்டிப்பறந்த நாகரீகம் மாயன் நாகரீகம். மாயன்கள், எகிப்தியர்கள் மாதிரியே பிரமிடுகளைக் கட்டியவர்கள். துல்லியமான நாள்காட்டியை உருவாக்கியவர்கள்.
இந்த மாயன்கள் யார்? அவர்கள் எங்கே இருந்து மத்திய அமெரிக்காவுக்கு வந்தார்கள் என்கிற மர்மம் இன்று வரை நீடிக்கிறது.
சரி. நம்ம சார்ல்ஸ் எதியன் பிரேசர் தி போபோர் இதுபற்றி என்ன சொல்கிறார்?
இவரது கூற்றுப்படி, மாயன் மக்கள் தங்களது ஆதிநிலமாகக் கருதிய இடம் பசிபிக் கடலில் இருந்த ஒரு கண்டம். அந்த கண்டம் கடலில் மூழ்கியபோது மாயன்கள் அங்கிருந்து தப்பி மத்திய அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்கள்.
அந்த ஆதிநிலத்தை மூவின் தாய்நிலம் (Land of Mu) என்று மாயன்கள் அழைத்திருக்கிறார்கள்.
இந்த மூ என்ற கண்டம் எங்கே இருந்தது என்று கேட்டால், இது இன்றைய ஆஸ்திரேலியா, இந்தோனேசியா பகுதியில் இருந்ததாக சார்ல்ஸ் எதியன் பிரேசர் தி போபோர் சொல்கிறார்.
பதினான்காயிரம் ஆண்டுகளுக்கு முன், பசிபிக் கடலின் நீர்மட்டம் 140 மீட்டர் உயர்ந்தபோது மூ கண்டத்தின் பல பகுதிகள் நீரில் மூழ்கி இருக்கின்றன. அப்போது மாயன்களின் முன்னோர்கள் அங்கிருந்து படகுகள் மூலம் மத்திய அமெரிக்காவுக்கு தப்பியோடியிருக்கிறார்கள். (இப்போதுள்ள ஆஸ்திரேலியாவும், இந்தோனேசியாவும், மூ கண்டத்தின் எஞ்சிய நிலப்பகுதிகளாகக் கருதப்படுகின்றன)
கென்னத் எம். ஆல்சன் என்ற தாவரவியல் அறிஞரும் இதை உறுதி செய்கிறார்.
சுண்டாலாந்து என அழைக்கப்படும் மூ பகுதியைச் சேர்ந்த மக்களே பிற்காலத்தில் பனாமா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளில் கொலம்பசின் காலத்துக்கு முன்பு குடியேறியிருக்கிறார்கள் என்று ஆல்சன் சொல்கிறார்.
இதற்கு உயிருள்ள ஆதாரமாக இருப்பது தென்னை மரமும், தேங்காய்களும்தான். மத்திய அமெரிக்காவில் உள்ள பனாமா உள்பட பல இடங்களில் உள்ள தென்னை மரங்கள், சுண்டாலாந்து பகுதியில் இருந்தே பரவியிருக்க வேண்டும் என்பது கென்னத் எம். ஆல்சனுடைய கருத்து.
தேங்காய்கள் மற்ற தாவரங்களின் விதைகளைப் போல இயற்கையாக எங்கேயும் இடம்மாறிச் செல்வதில்லை. மனிதர்களின் உதவியில்லாமல் தேங்காய்கள் பெருங்கடலில் மிதந்து பரவ முடியாது. மனிதர்கள் மூலமாக மட்டும்தான் தென்னை இடம்விட்டு இடம் சென்று பயிரிடப்பட்டிருக்கிறது.
தேங்காய்கள் கடலில் மிதந்து சென்றாலும் கட்டுமரம் அல்லது படகின் வேகத்துக்குச் செல்ல முடியாது. தேங்காயின் கண்கள் மெல்ல மெல்ல கடல்நீரில் ஊறி பொதும்பிப் போய்விடும். அதன் உள்ளே கடல்நீர் புகுந்து விடும்.
தவிர கடலில் மிதக்கும் உணவுப்பண்டம் எதுவாக இருந்தாலும் அதை உண்டு ருசி பார்க்கும் உயிர்கள் கடலில் அதிகம். அதிலும், தேங்காய் மாதிரியான சுவையுள்ள உண்ணக் கூடிய ஒரு பொருள் கடலில் மிதந்தபடி வெகு தொலைவுக்குப் போக முடியாது.
அந்த வகையில் சுண்டாலாந்து பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் ஆதிநாளில் கொலம்பசுக்கு முன்பு அமெரிக்காவில் குடியேறி தென்னையை அங்கே பயிரிட்டிருக்கிறார்கள் என்கிறார் ஆல்சன்.
சரி. விடயத்துக்கு வருவோம்.
‘தென்னை, பசிபிக் கடலில் உள்ள ஏதோ ஒரு தீவில் இருந்து தமிழகத்துக்கு வந்த தாவரம்’ என்று ஒரு கருத்து உண்டு. ‘தென் பகுதியில் இருந்து வந்த தாவரம் என்பதால்தான் அது ‘தென்’னை எனப் பெயர் பெற்றது’ என்று கருதப்படுகிறது. ஆனால், அது சரியானதாகத் தெரியவில்லை.
தமிழகத்துத் தென்கடல் பரதவர்கள், நீளமான கோலை கடலுக்குள் குத்தி, படகைச் செலுத்துவதை தென்னுவது என்பார்கள். தென்னுதல் என்பதற்கு வளைத்தல், திருப்புதல், நெம்புதல், கிளம்புதல் என்ற பல பொருள்கள் உள்ளன. தென்னை வளைந்து நிற்கும் மரம் என்பதால்தான் அதற்கு தென்னை என்ற பெயர் வந்திருக்க வேண்டும். (தவிர, தென்னையைக் குறிக்க தெங்கு என்ற பெயரும் தமிழ்மொழியில் உண்டு.)
சார்ல்ஸ் எதியன் பிரேசர் தி போபோர் குறிப்பிடும் மூவின் தாய்நிலம் என்று கருதப்படும் பழங்கால கண்டம், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா பகுதிகளில் இருந்த கண்டம். அது தமிழர்களின் கண்டமான குமரிக்கண்டத்தில் இருந்து அப்படி ஒன்றும் வெகு தொலைவில் இல்லை.
தவிர, மூ என்பது கூட தமிழ்ச்சொல்தான். தமிழில் முன்னோர்களை ‘மூ’தாதை என்கிறோம். வயது முதிர்ந்த பெண்ணை ‘மூ’தாட்டி என்கிறோம். தொன்மைச் சிறப்பு வாய்ந்த பழமை நிறைந்த மதுரை போன்ற ஊர்களை நாம் ‘மூ’தூர் என்கிறோம்.
ஆக, நமது குமரிக்கண்டம்தான் மூவின் தாய்நிலம் என அழைக்கப்பட்டிருக்கிறது. குமரிக் கண்டம் என்று சொல்ல சிலருக்குக் கூச்சமாக இருந்திருக்கும் என்பதால் மூவின் தாய்நிலம் என்று அதற்குப் பெயர் சூட்டியிருக்கிறார்கள் போலிருக்கிறது.
மாயன் நாகரீகத்து மன்னர்களின் தலைக்கு மேலே வெண்கொற்றக்குடை பிடிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. போர்களில் சங்கு ஊதும் பழக்கம் இருந்திருக்கிறது. மதுரை மாதிரியான இடங்களில் இருப்பது போன்ற ஆயிரம்கால் மண்டபம், மாயன்களின் சீச்சென் இட்ஸா நகரத்திலும் இருக்கிறது.
ஆகவே, தமிழ் நாகர்கள்தான் பிற்காலத்தில் மாயன்களாக உருவெடுத்திருக்க வேண்டும். மாயன், மாயோன் என்ற பெயர்கள் கூட நமக்குப் பரிச்சயமான பெயர்கள்தானே?
எனவே மாயன்கள், கடல்கொண்ட தென்னாடான குமரிக்கண்டத்தில் இருந்து சென்ற பழந்தமிழர்களாகவே இருக்க வேண்டும் என்றுகூறி பதிவை நிறைவு செய்வோம்.
……………….‘
மோகன ரூபன் முகநூல் பதிவு 15.09.2024