வீரவன்சவிற்கு அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பதவி; ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கு ஆதரவு?
.
தேசிய பத்திரிகையொன்றின் செய்தியை மேற்கோள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் இருவர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க குறித்த இரு உறுப்பினர்களும் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாகவும் அதற்கு விமல் வீரவன்ச இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் நாடாளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட விமல் வீரவன்ச பின்னர் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி சுயேட்சையாக செயற்பட்டார்.
அரசாங்கத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அவர் வெளியேறியிருந்தார். எவ்வாறாயினும், அண்மையில் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் கூட்டணி ஒன்றையும் ஏற்படுத்தியிருந்தார்.
“சர்வசன அதிகாரம்” (Sarvajana Balaya) என்ற புதிய கூட்டணி கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதில் தேசிய சுதந்திர முன்னணி சார்பில் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணி சார்பில் டி.வி.டி.திலகசிறி, பிவித்துரு ஹெல உறுமய சார்பில் உதய கம்மன்பில, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜி.வீரசிங்க, யுதுகம தேசிய அமைப்பு சார்பில் கெவிந்து குமாரதுங்க ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.