22 மாதங்களுக்கு பிறகு திரௌபதி அம்மன் கோயில் திறப்பு; பலத்த பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் தரிசனம்!
விழுப்புரம் திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த, 22 மாதங்களுக்கு பிறகு அனைத்து தரப்பு பொதுமக்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

வளவனூர் அருகே உள்ள மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் வழிபட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று அதிகாலை முதல் கோயில் திறக்கப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனைத்து தரப்பு மக்களும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால், ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, பொதுமக்கள் உள்ளே சென்று வழிபாடு நடத்தும் வகையில் ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் கோயிலுக்குள் சென்று, பொதுமக்கள் வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டது. சுமார் 22 மாதங்களுக்குப் பிறகு திரௌபதி அம்மன் கோயில் இன்று திறக்கப்பட்டதால் பலத்த பாதுகாப்புடன் மக்கள் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும் வண்ணம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கோயிலில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேல்பாதி கிராமத்திற்குள் செல்லும் அனைத்து நுழைவு வாயில்களிலும் தடுப்புகளை அமைத்து, வெளியாட்களைக் கிராமத்திற்குள் நுழைய விடாமல் காவல்துறையினர் தடுத்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, கோயில் திறக்கப்பட்டதாகவும், கோயிலுக்குள் சென்று யார் வேண்டுமானாலும் வழிபாடு நடத்தலாம் என்றும் வருவாய்த் துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர்.
அதேசமயம், மேல்பாதி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக வந்து திரெளபதி அம்மனை தரிசனம் செய்தனர். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று முதல் முறையாகப் இம்மக்கள் வழிபட்டுள்ளனர். இது, அவர்களிடையே மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்து.
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு 7.30 மணிக்கு மூடப்படுவது வழக்கம். வெள்ளிக்கிழமை மட்டும் மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் திறக்கப்பட்டு மூடப்படும்.
இது வழக்கமான நடைமுறை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே இன்று காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு, 7:30 மணிக்கு மூடப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க , மொத்த கிராமமும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒரு தரப்பு மக்கள் எதிர்ப்பு
தற்போது, 22 மாதங்களுக்குப் பிறகு வழிபாட்டிற்காக திறக்கப்படும் கோயில், நல்ல நாள் பார்த்து திறக்காமல், ஏனோ தானோ என்று திடீரென வழிபாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அலுவலர்கள் மீது ஒருதரப்பினர் குற்றஞ்சாட்டினர். மேலும், தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாகக் கூறி, அவர்கள் இன்று வழிபாடு நடத்த வரவில்லை என்று கூறப்படுகிறது. தாங்கள் நாளைய தினம் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த உள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பட்டியலின மக்கள் கோயிலுக்குள்ளே செல்லக்கூடாது என மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
திரெளபதி அம்மன் கோயில் விவகாரம்
முன்னதாக, நூற்றாண்டு பழமையான திரெளபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக, இரு வேறு சமுதாய மக்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, மோதலாக மாறியது. இதனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறி, கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி தர்மராஜா திரெளபதி அம்மன் கோயிலை வருவாய் துறை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.
பூட்டி சீல் வைக்கப்பட்ட திரெளபதி அம்மன் கோயிலைத் திறந்து வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒரு தரப்பினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், திரெளபதி அம்மன் கோயிலை திறந்து, பொதுமக்கள் யாரையும் உள்ளே அனுமதிக்காமல் ஒரு கால பூஜை மட்டும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீலினை வருவாய்த் துறை அலுவலர்கள் அகற்றினர். பின்னர், கோயில் நடை திறக்கப்பட்டு, கோயிலுக்குள் பக்தர்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒரு கால பூஜை மட்டும் இதுநாள் வரை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த இருசமுதாய மக்களுக்கும் அனுமதியளித்து, அண்மையில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.