பசில் விரைவில் நாடு திரும்புவார்; கட்சித் தகவல்கள் உறுதி
.
தீர்மானமிக்க தேர்தலுக்கு மத்தியில் நேற்று (20) காலை வெளிநாடு சென்ற முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, கட்சியின் பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வெகு விரைவில் மீண்டும் இலங்கைக்கு வருகைத் தரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மொட்டுக் கட்சி எனப்படும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச வெளிநாடு சென்றதாக வெளியாகியிருந்த செய்திகளுக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர்,
” பசில் ராஜபக்சவுக்கு அவரது வைத்திய பரிசோதனை காரணமாக வெளிநாடு செல்ல வேண்டிய நிலை சில வாரங்களுக்கு முன்னர் உருவாகியிருந்தது.
எனினும், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக இறுதி நேரம் வரையில் இரவு பகல் பாராது வேலை செய்தார்.
அவர் வெளிநாடு செல்வதாக கட்சிக்கு அறிவித்திருந்தார்.
வைத்திய பரிசோதனைகளின் பின்னர் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக பசில் ராஜபக்ச வெகு விரைவில் இலங்கைக்கு வருகைத் தருவார்.” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் இரு பிள்ளைகள், மாமியார் மற்றும் மாமனார் வெளிநாடு சென்றுவிட்டதாக சமூக வலைத்தளங்களில் மற்றும் ஊடகங்களில் பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என சாகர காரியவசம் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்ச தனது குடும்பத்தினருடன் நேற்று (20) கதிர்காமம் கிரிவெஹரை விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்டிருந்ததாக அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.