முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு.
.
முள்ளிவாய்க்கால் கஞ்சி ; அம்பாறையில் ஐவருக்கு நீதிமன்ற தடை உத்தரவு.
தற்போது மே-19 வரை முள்ளிவாய்க்கால் கஞ்சி வட கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், அம்பாறை மாவட்டத்தில் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்ய முயற்சிகளை மேற்கொள்வார்கள் என தெரிவித்து சமூக சேவகர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என ஐவருக்கு இவ்வாறு கல்முனை நீதிமன்ற நீதிபதியின் கையொப்பத்துடன் பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்கவினால் குறித்த நபர்களுக்கு தடையுத்தரவு பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் விநாயகம் விமலநாதன்ஆகிய ஐவருக்கே இவ்வாறு தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது.
மேலும், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரிய நீலாவணை பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.அத்துடன், நேற்று செவ்வாய்க்கிழமை (14) கல்முனை பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சம்பவமானது காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன், இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி ஆகியோருக்கு பொலிஸாரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டு குறித்த நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.
கல்முனை பாண்டிருப்பு அரசடி அம்மன் ஆலய முன்றலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் பொதுமக்களுடன் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறும் நிகழ்வினை முன்னெடுத்திருந்தது.
பின்னர் பொலிஸாரின் நடவடிக்கையை தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த மனித உரிமை செயற்பாட்டாளர் தாமோதரம் பிரதீவன் உள்ளிட்ட குழுவினரும் வலிந்து காணாமலாக்கப்பட்டஉறவுகளின் சங்கத தலைவி தம்பிராசா செல்வராணி மற்றும் சங்கத்தின் உபதலைவி செயலாளர் உள்ளிட்ட குழுவினரும் கல்முனை மனித உரிமை ஆணைக்குழுவிற்குச் சென்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடார்பில் முறைப்பாடுகளைப் பதிவு செய்திருந்தனர்.