மனித கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது: கனடாவில் வேலை வாய்ப்புகள் பெற்றுத்தருவதாக கூறி மோசடி
.
மனித கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் தேசிய புலனாய்வு முகமையால் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கைப் பிரஜையான சீனி அபுல்கான் என்ற நபர் கடந்த மூன்று ஆண்டுகளாக தலைமறைவாகியிருந்தார்.
2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மங்களூரு பொலிஸார் 13 இலங்கை பிரஜைகளை கடத்தற்காரர்களிடமிருந்து மீட்டதன் பின்னர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
அபுல்கான் தனது நண்பர்களுடன் இணைந்து படகினூடாக மங்களூருவுக்கு மனித கடத்தலை மேற்கொண்டுள்ளமை விசாாணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் 38 இலங்கை பிரஜைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
கனடாவில் வேலை வாய்ப்புகள் பெற்றுத்தருவதுடன் நாட்டிற்கு குடிபெயர்வதற்கான முறையான ஆவணங்களைப் பெற்றுத் தருவதாகவும் கூறி மோசடி செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.
2021 ஆம் ஆண்டு மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கிடையில் 10 பேருக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பு குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
மேலும் மூவர் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.