“தமிழரசுக் கட்சியை புறந்தள்ளுங்கள்“: தமிழ் கட்சிகள் தன்னுடன் இணையுமாறு பிள்ளையான் அழைப்பு
.
கிழக்கு மாகாணத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியை புறந்தள்ளி அனைத்து தமிழ் கட்சிகளும் தன்னுடன் இணைந்து செயற்படமுன்வருவமாறு இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையான் அழைப்பு விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு கூழாவடியில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவினை ஆதரிக்கும் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த சந்திரகாந்தன்,
தமிழரசுக்கட்சிக்குக்குள் ஏற்பட்ட குத்துவெட்டுகளும் பதவி மோதல்களுமே, வடக்கில் பல்வேறு இழப்புகளை சந்தித்து பெற்றுக்கொண்ட மாகாணசபை இல்லாமற்போனதற்கு காரணம்.
இவர்கள் எல்லாம் சஜித் பிரேமதாசவுக்கு பின்பாக நிற்பதால் இவர்களின் கோரிக்கைகளை கிழக்கு மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
நாங்கள் ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்தின் அதிகாரத்தினையும் கைப்பற்றி, ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி அவரைக்கொண்டு கிழக்கு மாகாணசபையினை நாங்கள் கைப்பற்ற வேண்டும். நாடாளுமன்ற தேர்தலிலும் நாங்கள் பெரும் கூட்டணி அமைக்கவேண்டும்.
முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன்,ஈபிடிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சங்கர் மற்றும் சில மாகாணசபை உறுப்பினர்கள் இவர்களையெல்லாம் இணைத்து ஒரு கூட்டணி அமைக்கலாமா என்று சிந்திக்கின்றோம்” என அவர் கூறினார்.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்தகட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.