தீவிரமடையும் நில அபகரிப்பு: திருமலையில் தமிழ், முஸ்லிம் மக்கள் அச்சுறுத்தல்
.
அமெரிக்காவை தளமாகக் கொண்டு, பிரதானமாக காணி உரிமைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஓக்லேன்ட் நிலையம் (The Oakland Institute), இலங்கையின் கிழக்கு மாவட்டமான திருகோணமலையில், வளம் மிகுந்த விளை நிலங்கள் அபகரிக்கப்படுவது வேகமெடுத்துள்ளது என தனது புதிய அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
பல தசாப்தங்களாக சிங்கள மக்களின் வலிந்த குடியேற்றம் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தின் குடிபரம்பல் கணிசமாக மாறியுள்ளது எனவும், நில உடமையில் பாரிய சமமின்மை நிலவுகிறது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
முன்னதாக ஜேர்மனியில் அரச ஊடகமான டோய்ச்சு வெலெவிற்கு (Deutsche Welle) அளித்த செவ்வி ஒன்றில் அமைச்சர் அலி சப்ரி, நாட்டின் வடக்கு பகுதியில் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலங்களில் 90% நியாயமான உரிமையாளர்களின் திருப்பி அளிக்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்தார்.
ஆனால் அந்த தகவல் தவறு என இலங்கை தமிழரசுக் கட்சியின், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அதை மறுத்திருந்தார்.
எனினும், கிழக்கில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் கிட்டத்தட்ட ஒரே விகிதார அளவில் வாழ்கின்ற சூழலில், அங்குள்ள நிலவரம் குறித்து அமைச்சர் வாய் திறக்கவில்லை.
திருகோணமலை இலங்கைக்கு கேந்திர ரீதியாக மிகவும் முக்கியமானதொரு பகுதியாகும். மேலும் அங்குள்ள இயற்கை துறைமுகம் பெருமதிப்பு வாய்ந்த நிலையில்-அங்கு தான் நில அபகரிப்பு நடைபெறுகிறது என அந்த அறிக்கை கூறுகிறது.
“யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவ ஆட்சியின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது ” என ஓக்லேன்ட் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அனுராதா மிட்டல் தெரிவித்துள்ளார்.
” வடக்கு- கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களின் சரித்திரம் மற்றும் கலாசாரம் ஆகியவற்றை அழிப்பதை இந்த நில அபகரிப்பு முன்னெடுப்புக்கள் இலக்குவைக்கின்றன” என மிட்டல் மேலும் தெரிவித்தார்.
இந்த நில அபகரிப்புக்கள் காரணமாக, திருகோணமலை மாவட்டத்தில் தற்போது 27 சத வீதமாக இருக்கும் சிங்கள மக்கள் அந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பின் 36 சதவீதத்தை தம்வசம் வைத்துள்ளனர். 50 சதவீதத்துக்கும் அதிகமான நிலப்பரப்பு (41,164 ஏக்கர்) அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த 10 வருடங்களில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு மோசமான நில அபகரிப்பை சந்தித்துள்ளது என அனுராதா மிட்டல் மேலும் தெரிவித்துள்ளார்.
”நீர்ப்பாசன திட்டங்கள், துறைமுக நவீனமயமாக்கல், வலு உற்பத்தி மற்றும் உல்லாசப்பயண மேம்படுத்தல் ஆகியவை உட்பட “அபிவிருத்தி” என்ற போர்வையின் ஒரு பகுதியாக தமிழ், மற்றும் சிங்கள மக்களின் நிலங்களை அபகரிக்கும் “சிங்களமயமாக்கல்” என அழைக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நில அபகரிப்பு நடைபெற்று வருகின்றது.
தொல்லியல் திணைக்களம், வனவள திணைக்களம், மகாவலி அதிகாரசபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை ஆகியவை உட்பட பல்வேறு அரச நிறுவனங்கள் இந்த சிங்களமயமாக்கல் நடவடிக்கையில் சம்பந்தப்பட்டுள்ள.”
குச்சவெளி பிரேதேச செயலாளர் பிரிவில் அபிவிருத்தி என்ற போர்வையில் தீய எண்ணத்துடன் கேந்திர ரீதியாக வளமான நிலங்கள் எப்படி அபகரிக்கப்படுகின்றன என்பது குறித்தும் ஓக்லேன்ட் நிலையம் மேலும் விளக்கமாக கூறுகிறது.
இதில் அபிவிருத்தி என கூறப்படுகின்ற’ திட்டங்களில் பெரும்பாலானவை புதிய பௌத்த விகாரைகள் கட்டுவதற்கோ அல்லது இருக்கும் விகாரைகளை மேலும் விரிவாக்கவோ முன்னெடுக்கப்படுகின்றன.
”அந்த பகுதியில் அபகரிக்கப்பட்ட 3,887 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தது 26 விகாரைகள் கட்டப்பட்டுள்ளன. வளமான விவசாய மற்றும் கடற்கரை ஓரமாக இருக்கும் நிலங்கள் பெருமளவில் அபகரிக்கப்பட்டதன் விளைவாக, பாரம்பரிய தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாழ்வாதாரங்கள் இழக்கப்பட்டுள்ளன.
அந்த நிலங்களை மீட்கும் முயற்சிகளுக்கு அங்கு நிலைகொண்டிருக்கும் பெருமளவிலான இராணுவ பிரசன்னத்தின் காரணமாக தடைபட்டுள்ளது.”
இதன் நோக்கம் என்பது கிழக்குப் பகுதியில் குடிப்பரம்பலை மாற்றி அதன் மூலம் அங்கு நிலவும் சமூக மற்றும் கலாச்சார ஒற்றுமையை குலைப்பதாகும் எனவும் அந்த அறிக்கை குற்றஞ்சாட்டுகிறது.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதானது பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும் குடித்தொகை பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தமிழ்மற்றும் முஸ்லிம் மக்களின் கலாசார சின்னங்களை அழிப்பதற்கும் வழி செய்கின்றது எனவும் அந்த அறிக்கை மேலும் குற்றஞ்சாட்டுகிறது.
மிகப்பெரும் அளவில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மக்களிடம் இருந்து நிலம் அபகரிக்கப்பட்டுள்ளமை ஆயிரக்கணக்கான மக்களை பாதித்துள்ளது. வளம்மிக்க விவசாய மற்றும் கடலோர நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரம் இல்லாமல் போயுள்ளது.
தமது பகுதிகளுக்கு மீண்டும் திரும்பி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலையில், தமது நிலங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு முயற்சி செய்யும் மக்கள் பல்வேறு சட்ட தடங்கல்களையும் மற்றும் குடியேற்றப்பட்ட மக்களிடம் இருந்து அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்.
நாட்டின் வடக்கு கிழக்கு மாகாணங்களை பூகோள ரீதியாக இணைக்கும் திருகோணமலையின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிலேயே மிகவும் மோசமான வகையில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகப்படியான நிலங்களை இழந்துள்ளது எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.
நாடு விடுதலையடைந்ததிலிருந்து தொடர்ச்சியாக சிங்கள ஆக்கிரமிப்பும் குடியேறமும், வளர்ச்சி என்ற போர்வையில் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், அது 2009ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பிற்கு தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த அரசுகளால், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை மேலும் பலவீனப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது எனவும் அந்த புதிய அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
கொழும்பு அரசாங்கத்தால் அபிரிவிருத்தி என்ற பெயரில் நிலங்கள் அபகரிக்கப்பட்டாலும், அவற்றில் பெரும்பாலான திட்டங்கள் யதார்த்த ரீதியில் தொடங்கப்படவே இல்லை எனவும், அடிப்படையில் அது சிங்கள மக்களுக்கு மட்டுமே உதவியுள்ளது என தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நீண்டகாலமாகவே குற்றஞ்சாட்டுகின்றனர்.
கடந்த 2020இல், கிழக்கு மாகாணத்தில் தொல்லியல் பாரம்பரியத்தை பாதுகாத்து நிவகிக்க 11 பேர் அடங்கிய ஜனாதிபதி சிறப்பு செயலணி ஒன்று அமைக்கப்பட்டது. அதில் பெரும்பாலும் இராணுவத்தினர் மற்றும் பிக்குமார்களே இடம்பெற்றிருந்தனர். அந்த குழுவின் நோக்கமே அப்பகுதியிலுள்ள நிலங்களை அபகரிப்பதாகும் என்று ஒக்லேன்ட் நிலையம் கூறுகிறது.
மத ரீதியான நில அபகரிப்புகள் பற்றிய ஆவணப்படுத்தலின் பின்னர், 2023 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம், அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணைக்குழு (United States Commission on International Religious Freedom) மத சுதந்திர மீறல்களுக்காக இலங்கையை விசேட கண்காணிப்பில் சேர்க்குமாறு பரிந்துரை செய்திருந்தது.
” பௌத்த விகாரைகளை மற்றும் மடாலயங்களை கட்டுவதற்கும் விஸ்தரிப்பதற்கும் பௌத்த பிக்குகள் அனுமதிக்கப்படும் அதேவேளை இந்த பகுதிகளில் தமிழ் மக்களின் புராதன இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதுடன் அங்கு மக்கள் வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்படுகின்றது” என மிட்டல் மேலும் கூறியுள்ளார்.
ஓக்லேன்ட் நிலையம் முன்னர் வெளியிட்டுள்ள அறிக்கைகளும் சரி, தற்போது வந்துள்ள அறிக்கையும் சரி, இலங்கை அரசு தனது இராணுவ ஆக்கிரமிப்பின் மூலம், வடக்கு மற்று கிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அடக்கி தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளது.
”இந்த மாகாணங்களில் தொடர்ந்து இராணுவ பிரசன்னம் மிக அதிகளவில் உள்ளது. இங்கு தான் இலங்கை இராணுவத்தின் ஏழு பிராந்திய தலைமையகங்களில் ஐந்து உள்ளன. இப்படியான மிக அதிக இராணுவ பிரசன்ன இங்குள்ள நிலங்களை அபகரிக்கவும், பௌத்த விகாரைகளை அமைக்கவும், சிங்கள குடியேற்றவாசிகளை கொண்டு வரவும் வழி ஏற்படுத்தி கொடுக்கிறது.”
திருகோணமலை மாவட்டத்தில் நம்ப முடியாதளவில் வளமான நிலங்களும், கடலோரப் பகுதிகளும் வலிந்து ஆக்கிரமிக்கப்படுவதால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். பாரம்பரியமாக விவசாயம் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள தமிழர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. தமது நிலங்களை மீட்க முயல்பவர்கள் சட்டரீதியான தடைகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர் என உள்ளூர் தமிழர்கள் கூறுகின்றனர்.
“எமது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. நாம் விவசாயம் செய்யவும் முடியாது மீன் பிடிக்கவும் முடியாது. இந்த நிலைமை தொடருமானால், எமது வழித்தோன்றல்கள் இந்த கிராமத்தில் தொடர்ந்து வசிக்கும் சாத்தியம் இருக்காது” என குச்சவெளியை சேர்ந்த ஒரு மீனவர் கூறினார்.
சிங்கள அரசாங்கத்தின் அடக்குமுறையின் மத்தியிலும், துணிச்சலுடன் நீதிக்காக குரல் எழுப்பும் பாதிக்கப்பட்ட பொது மக்களின் வாக்குமூலங்களை “ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை” என்ற இந்த அறிக்கை உள்ளடக்கியிருக்கின்றது.
“உள்நாட்டு யுத்ததின் போதும் இன்றுவரையிலும் இலங்கை அரசு மேற்கொண்டுள்ள குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் பரிகாரம் ஆகியவற்றுக்கான எந்தவொரு சாத்தியத்தையும் இந்த அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ள தீவிரம் அடைந்துள்ள இலங்கையின் இனரீதியான நடவடிக்கைகள் (ethnocratic practices) இல்லாமல் செய்வதுடன் ஏற்கனவே இருக்கும் துன்பம், அநீதி, பகையுணர்வு ஆகியவற்றை மேலும் அதிகப்படுத்துகின்றன.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் நிலம் மற்றும் வாழ்வு ஆகியவற்றுக்கான அடிப்படை உரிமைகளை அரசாங்கம் மதித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை இராணுவமயமற்றதாக ஆக்க ஆரம்பித்தால் அன்றி, சமாதானமும் நல்லிணக்கமும் சாத்தியம் ஆகாது ” என மிட்டல் மேலும் குறிப்பிட்டார்.
உலகிலேயே இரண்டாவது சிறந்த இயற்கை துறைமுகம் திருகோணமலை துறைமுகம் எனவும் அங்கிருக்க கூடிய நிலம் மற்றும் கடற்பரப்பு கொழும்பு துறைமுகத்தைவிட 10 மடங்கு அதிகம் இலங்கை அரசின் துறைமுக அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.