தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு - வைத்தியர் த. சத்தியமூர்த்தி
அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றும் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் செயற்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி, தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாகக் கூறி அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் நிறுவனருக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். வைத்தியசாலை வளாகத்திற்குள் விநியோகிக்கப்பட்ட அரசியல் துண்டுப் பிரசுரங்கள் இந்த சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளன.
கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ். போதனா வைத்தியசாலைக்குள் விநியோகிக்கப்பட்ட தினசரிப் பத்திரிகைகளுக்குள், அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் பெயரிலான துண்டுப் பிரசுரங்களும் வைத்து விநியோகிக்கப்பட்டுள்ளன. குறித்த துண்டுப் பிரசுரத்தில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தொடர்பாகக் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு கருத்து, அவரது கௌரவத்திற்கும் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.இது குறித்து உரிய விசாரணை நடத்தி, தனது நற்பெயரைப் பாதுகாக்குமாறு அவர் காவல்துறையினரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசியல் ரீதியான பிரசாரங்கள் அல்லது தனிநபர் விமர்சனங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வைத்தியசாலை போன்ற பொது சேவை மையங்களுக்குள் விநியோகிக்கப்படுவதை நிர்வாகம் பொதுவாக அனுமதிப்பதில்லை. இந்தப் பின்னணியில், பத்திரிகை விநியோகஸ்தர்கள் ஊடாக இவை எவ்வாறு உள்ளே வந்தன என்பது குறித்தும் காவல்துறையினா் ஆராய்ந்து வருகின்றனர். வைத்தியசாலைக்குள் திட்டமிட்டு விநியோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் துண்டுப் பிரசுரங்கள் இந்தப் பிரச்சினையின் மையப்புள்ளியாகும்.
அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சி யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்டு செயற்படும் ஒரு புதிய அரசியல் கட்சியாகும். இதன் நிறுவனராகவும், முக்கிய செயற்பாட்டாளராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (MP Ramanathan Archchuna) அறியப்படுகிறார். அண்மைக்காலமாக யாழ். போதனா வைத்தியசாலையின் நிர்வாகம் மற்றும் பணிப்பாளர் சத்தியமூர்த்தியின் செயற்பாடுகள் தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனா பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார்.
துண்டுப் பிரசுரத்தில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி அவர்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் வைத்தியசாலை நிர்வாகத்தை விமர்சிக்கும் வகையில் “ஆதாரமற்ற மற்றும் தரக்குறைவான” கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தினசரி பத்திரிகைகளின் உள்ளே வைத்து இவை விநியோகிக்கப்பட்டதன் மூலம், பொதுமக்களிடையே திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தண்டனைச் சட்டக்கோவையின் கீழ், ஒரு அரச அதிகாரியின் கடமைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் அவதூறு பரப்புதல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினா் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலான இந்த மோதல் கடந்த சில மாதங்களாகவே தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


