இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளரை நாடு கடத்தத் தீர்மானம்
"சொந்த நாட்டில் பிரச்சினைகள் இருந்ததால் நான் கனடாவுக்கு வந்தேன். நான் திரும்பிச் சென்றால், மீண்டும் அதே பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமோ என அஞ்சுகிறேன்,"
எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவுக்குச் சென்ற தாம் நாடு கடத்தப்பட்டால் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள நேரிடுமென குறிப்பிடுகின்றனர்.
இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மோதலில் உயிர் தப்பிய நூற்றுக்கணக்கான தமிழ் புகலிட கோரிக்கையாளர்களுடன் சென்று, கனடாவில் கடந்த 15 வருடங்களாக வசித்து வரும் குமார் துரைசிங்கம் என்ற நபரே இந்த அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.
குமார் துரைசிங்கம் ஒரு புகலிடக் கோரிக்கையாளர் மாத்திரமல்ல, பல ஆண்டுகளாகத் தமிழ் அகதிகளுக்காகப் பிரச்சாரம் செய்தவராவார். கனடா எல்லை சேவைகள் அதிகாரசபை (CBSA), இவரை நாடுகடத்தத் திட்டமிட்டுள்ளதோடு, இவர் இந்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடலைக் கடந்து பல மாதங்கள் நீடித்த அபாயகரமான பயணத்திற்குப் பின்னர் 2010ஆம் ஆண்டு ஒரு பழுதடைந்த கப்பலில் கனடாவை அடைந்தவர்களில் குமார் துரைசிங்கமும் ஒருவராவார்.
எம்.வி. சன் சீ (MV Sun Sea) என அறியப்படும் அந்தக் கப்பல் வான்கூவர் தீவில் நங்கூரமிட்ட அன்றே அவர் தஞ்சம் கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும் 15 ஆண்டுகள் கழிந்தும், துரைசிங்கத்திற்கு இன்னும் குடியுரிமை கிடைக்கவில்லை. அவரது நாடு கடத்தலைத் தடுக்கக்கூடிய அமைச்சர், அவரது அவலநிலையை ஆச்சரியத்தக்க வகையில் நன்கு அறிந்திருக்கிறார்.
இலங்கையிலிருந்து அகதியாக கனடாவுக்குச் சென்று, இன்று நாடு கடத்தல்கள் குறித்து இறுதித் தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கொண்ட அந்நாட்டின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் கெரி ஆனந்தசங்கரி, சக தமிழ் புகலிடக் கோரிக்கையாளரை பாதுகாக்க எவ்வித தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என, குமார் துரைசிங்கத்தின் சட்டத்தரணி குற்றஞ்சாட்டுகின்றார்.
அவரை நாடு கடத்துவதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், அவரை கனடாவிலிருந்து வெளியேற்றுவதை நியாயப்படுத்த, அதிகாரிகள் அவரது பயண ஆவணங்களில் வேண்டுமென்றே பிழைகளைச் சேர்த்ததாக அவர் குற்றம் சாட்டுகிறார். அவர் 2010-இல் எம்.வி. சன் சீ கப்பலில் வந்திறங்கினார் என்பதைப் பல நீதிமன்ற ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், அவரை நாடு கடத்தும் முயற்சியில் கனடா அரசாங்கம் இலங்கைக்குப் பயண ஆவணங்களை வழங்கியபோது, அதில் இருந்த ஒரு ஆவணத்தில் அவர் 2018-இல் கனடாவுக்கு வந்ததாக பிழையாக குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
எம்.வி. சன் சீ கப்பலில் கனடாவுக்குச் சென்ற தாம் நாடு கடத்தப்பட்டால் கடுமையான ஆபத்தை எதிர்கொள்ள நேரிடுமென குறிப்பிடுகின்றனர். "சொந்த நாட்டில் பிரச்சினைகள் இருந்ததால் நான் கனடாவுக்கு வந்தேன். நான் திரும்பிச் சென்றால், மீண்டும் அதே பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடுமோ என அஞ்சுகிறேன்," என குமார் துரைசிங்கம் கனேடிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழர்கள் தொடர்ச்சியாக சித்திரவதைகளை அனுபவிப்பதாக தகவல்கள் வெளியாகின்றபோதிலும் எம்.வி. சன் சீ கப்பலின் பயணிகளை நாடு கடத்தும் முயற்சியை கனடா அரசாங்கம் கைவிடவில்லை என அகதிகள் நலன் தொடர்பில் கனடாவில் செயற்படும் செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். தாய்லாந்திலிருந்து புறப்பட்டு, மூன்று மாதக் கடல் பயணத்திற்குப் பின்னர், ஓகஸ்ட் 12, 2010 அன்று கனேடியப் போர்க்கப்பல்களால் இடைமறிக்கப்பட்டு, ஓகஸ்ட் 13, 2010 அன்று கப்பல் கரை சேர்ந்தது. கப்பலில் 492 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இருந்ததோடு, அவர்களில் 49 சிறுவர்கள் மற்றும் பெண்கள் அடங்குவர்.
- சண் பார்தீபன்


