சாதனைகள் பலவற்றின் பின்னால் கேணல் ராயு. பாகம் - 02
கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டது.
சாதனைகள் பலவற்றின் பின்னால் கேணல் ராயு. பாகம் - 02
கடலிலே முதலாவது கடற்கரும்புலித் தாக்குதல் நடத்துவதற்கான திட்டம் தலைவர் அவர்களால் போடப்பட்டு அதற்கான பணிகள் ராயு அண்ணையிடமும் அப்போதைய கடற்புறா (கடற்புலிகள் என்று பெயர் பெறுவதற்கு முன் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் கடல் நடவடிக்கை அணி) தளபதியிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. முன்னெப்போதும் நடத்தப்படாத ஒரு புதியவகைத் தாக்குதலாக அப்போது அந்தக் கடற்கரும்புலித் தாக்குதல் இருந்தது. வெடிபொருள் தொகுதியை எவ்வாறு படகில் பொருத்துவது, எந்த வடிவில் பொருத்துவது என்பன தெரியாமல் இருந்த விடயங்கள். ஆயினும் ராயு அண்ணை அவற்றைச் செய்து முடித்தார்.
பலகட்டப் பரிசோதனைகளைச் செய்து அவற்றிலிருந்து ஒரு வடிவத்தினைச் செய்து உருவாக்கியிருந்தார். ராயு அண்ணை இதனை திறம்பட முடித்துவிடுவார் என்ற தலைவரின் நம்பிக்கையை நிரூபித்துக் காட்டினார். அன்றிலிருந்து தன்னுடைய இறுதிக் காலம்வரை கடற்கரும்புலிகளின் தாக்குதற் படகுகளிற்கான வெடிமருந்துத் தொகுதியினை மேம்படுத்துவதற்காக அயராது உழைத்துக் கொண்டிருந்தார்.
தொடக்க காலத்திலிருந்து மோட்டார் மற்றும் எறிகணைகளின் செயற்பாடுகளைக் கற்றறிந்து புலிகளின் சுயதயாரிப்பான “பசிலன்” எனும் எறிகணைச் செலுத்தியின் தயாரிப்புக்கு அடித்தளமிட்டுக் கொடுத்தார். இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே புலிகளின் பசிலன் பீரங்கிகள் சிறிலங்கா இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக அமைந்திருந்தன. யாழ்.கோட்டை, மாங்குளம் போன்ற முகாம்கள் கைப்பற்றப்பட்ட தாக்குதல்களில் இப்பீரங்கிகளின் பங்கு அளப்பரியன.
1996 ம் ஆண்டு “ஓயாத அலைகள்-01” இராணுவ நடவடிக்கை மூலம் புலிகள் முல்லைத்தீவு இராணுவ முகாமைக் கைப்பற்றியபோது இரண்டு ஆட்லறிகள் புலிகள்வசம் வீழ்ந்தன. இயக்கத்தைப் பொறுத்தவரை அவை அப்போது பரிச்சயமற்ற பொருட்களாகவே இருந்தன. இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட மட்டுப்படுத்தப்பட்டளவிலான கையேடுகள் மற்றும் இதர அறிவியல் ஏடுகள் என்பவற்றின் உதவியுடன் அவ்விரு ஆட்லறிகளையும் பரிச்சயமிக்க போராயுதங்களாக மாற்றியதில் ராயு அண்ணையின் பங்கே முதன்மையானது.
முதன்மையானது என்பதைவிட முழுமையானது என்பதே பொருத்தமாக இருக்கும். அக்காலப் பகுதியில் அவர் இரவில் நித்திரை கொள்வதே அரிதான விடயம். பொதுவாக ஆட்லறிகளுக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதிகள் (Fire Control) அவ் ஆட்லறிகளின் தயாரிப்பு நிறுவனங்களினால் வழங்கப்பட்டவையாகவே இருக்கும். முல்லைத்தீவில் கைப்பற்றப்பட்ட சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியும் அவ்வாறானதொன்றே. நிறைவான ஆட்லறிச் சூட்டுக்கு அவற்றின் செயற்பாடு போதுமானதாகவே இருக்கும்.
ஆயினும் ராயு அண்ணை அதனோடு திருப்திப்பட்டு விடவில்லை. சுயமாக ஆட்லறிக்கான சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியினை உருவாக்கும் பணியில் போராளிகளை ஈடுபடுத்தினார். சாதாரண சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதியைவிட மேம்பட்ட பல வசதிகளோடு சூடுகளை வேகமாகவும் மேலும் துல்லியமாகவும் வழங்கக்கூடியவாறு பல்வேறுபட்ட வசதிகளுடன் புதிய சூட்டுக்கட்டுப்பாட்டுத் தொகுதி அவரின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்டது. சிறிலங்கா படையதிகாரிகளாலேயே விடுதலைப் புலிகளின் ஆட்லறி சுடுதிறன் வியப்பாகப் பார்க்கப்படும் அளவுக்கு அதை வளர்த்தெடுத்த பெருமை ராயு அண்ணையையே சாரும். வேகமான செயற்பாடு மற்றும் துல்லியமான சூடு என்பவற்றினூடாக பீரங்கிப் படையணியின் நம்பகத்தன்மை போராளிகளிடமும் வளர்ந்திருந்தது.
ஜெயசிக்குறு எதிர்ச்சமர், ஓயாத அலைகள் என்ற குறியீட்டுப் பெயரிலமைந்த தொடர் நடவடிக்கைகள், ஆனையிறவுக்கான சமர் போன்றவற்றில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப் படையணியின் செயற்பாடு முக்கியமான பங்கினைப் பெற்றிருந்தது. சிறிலங்கா அரசினை சமாதானம் நோக்கி இழுத்துவந்த சமரான தீச்சுவாலை முறியடிப்புச் சமரில் எதிரியின் தீச்சுவாலையை எதிரியை நோக்கியே திருப்பிவிட்டதில் ஒருபுறத்தில் ராயு அண்ணையின் கட்டளையில் செயற்பட்ட பீரங்கிப்படை பெரும் பங்காற்றியது எனில் மறுபுறத்தில் ராயு அண்ணையின் சிந்தனையில் உருவான கவச எதிர்ப்புக் கண்ணிகள் தம் பங்கினையும் ஆற்றின.
அப்போதிருந்த சூழலில் கண்ணிவெடிகளை உருவாக்குவதற்குத் தேவையான பொருட்களை உடனடியாகப் தருவிக்கமுடியாத நிலை. ராயு அண்ணையின் சிந்தனையோ கண்ணிவெடி தயாரிப்பதற்கு என்ன பொருட்கள் தேவையென்ற நிலையிலில்லாமல், இருக்கும் பொருட்களைக்கொண்டு எவ்வாறு கண்ணிவெடி தயாரிக்கலாம் என்பதாக இருந்தது. பல்வேறு காரணங்களால் வெடிக்காத நிலையில் மீட்கப்பட்ட எதிரியின் எறிகணைகள் எதிரிகளின் கவசங்களையே குறிவைக்கும் கண்ணிவெடிகளாக உருவெடுத்தன. ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எதிரியின் கனவு அப்போது தகர்க்கப்பட்டது.
1992 ம் ஆண்டின் நடுப்பகுதி. யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த பிரிவுகளுக்குரிய போராளிகள் சிலர் சிறுத்தைப் படையணியின் பயிற்சிக்குச் செல்வதற்காக மாவட்டத் தலைமைச் செயலகத்திற்கு அனுப்பப்பட்டிருந்தோம். அங்குதான் சிறுத்தைப் படையணியின் முதலாவது ஆண்கள் அணிப் போராளிகளுக்கான தெரிவு நடைபெற்றது. சிறுத்தைப் படையணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த ராயு அண்ணையே படையணிக்கான போராளிகளைத் தெரிவு செய்வதற்கு வந்திருந்தார். அன்று ராயு அண்ணையின் மூலம் தெரிவாகி, சிறுத்தைப் படையணி, பின்னர் பொறியியற்றுறை ஆகியவற்றில் அவரின் கீழ் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தந்தையாய், சகோதரனாய் அவர் போராளிகளை வழிநடாத்தினார்.
ஒவ்வொரு விடயங்களைக் கவனித்துக்கொள்வதற்கும் அவர் பொறுப்பாளர்களை நியமித்திருந்த போதிலும், போராளிகளுக்கான உணவு, உடை என்று அனைத்து விடயங்களிலும் கவனமெடுத்து நடந்துகொண்டார். போராளிகள் தமக்குள் கதைக்கும் போது அவரை “அப்பா” என்றே விழிப்பது வழமை. அந்தளவிற்கு அவர் ஒரு தந்தையாக போராளிகள் மனதில் இடம்பிடித்திருந்தார். அவருக்குத் தலைவரால் வழங்கப்பட்டிருந்த பல்வேறுபட்ட பணிகளுக்கு மத்தியில் தன்னால் வளர்த்தெடுக்கப்படும் போராளிகள் என்ற கரிசனையோடு எம்மை உருவாக்கிய விதம் என்றுமே நெஞ்சை விட்டகலா நினைவுகள்.
1993 ம் ஆண்டின் இறுதிப்பகுதி. தென்மராட்சியில் ஓரிடத்தில் எமக்கான சிறப்புப் பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. திசைகாட்டி நகர்வுப் பயிற்சிகளை நாம் முகாமிற்கு வெளியேதான் மேற்கொள்வதுண்டு. தென்மராட்சி மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் காணப்படும் சதுப்புநிலக் காடுகளே இவ்வாறான நகர்வுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. நகர்வுகளுக்கான தொடக்க மற்றும் முடிவுப் புள்ளிகளாக இப்பகுதிகளில் அமைந்திருக்கும் சிறிய கோவில்களே தெரிவுசெய்யப்படும்.
அனைத்து அணிகளதும் நகர்வுகளை தானே நேரில் வந்து கண்காணிப்பதுடன் அந்தந்த இடங்களிலேயே நகர்வு உத்திகளைக் கற்றுத்தருவார். நகர்வில் ஈடுபடும் போராளிகளுக்கான உணவுப் பொருட்களை தானே எடுத்துவருவார். இருந்தபோதிலும், போராளிகளைக் கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கவும் தண்டிக்க வேண்டிய இடத்தில் தண்டிக்கவும் அவர் தவறுவதில்லை. ஒருமுறை எமது நகர்வு புத்தூரிலிருந்து தென்மராட்சியின் வரணிப் பகுதி நோக்கி இருந்தது. இவ்விரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட சதுப்புநிலக் காடுகளே நகர்வுப் பகுதியாக பயிற்சி ஆசிரியரால் தேர்வுசெய்யப்பட்டிருந்தது. எமது நகர்வுக்காக ஒவ்வோர் அணிக்கும் குறிப்பிட்டளவு குடிநீரே தரப்படும். மேலதிகத் தண்ணீரை நாம் எங்கும் பெறக்கூடாது என்பது கட்டளை.
அன்று எமது நகர்வுகளைக் கண்காணிப்பதற்காக வந்த ராயு அண்ணையின் வாகனம் சேற்றில் புதைந்துவிட எமது அணியினரே அதனை வெளியெடுக்கும் பணியினையும் செய்யவேண்டியதாகிவிட்டது. அந்தக் களைப்பின் காரணமாக எமக்கு வழங்கப்பட்ட தண்ணீரையும் குடித்து முடித்துவிட்டோம்.
ஆனால் போக வேண்டிய மீதித் தூரமோ இன்னும் அதிகமிருந்தது. இடையிலிருந்த கோவில் கிணறு ஒன்றில் மேலதிக தண்ணீரை நிரப்பிவிட்டோம். பயிற்சி ஆசிரியர் தண்டனை வழங்கினாலும் ராயு அண்ணை காப்பாற்றிவிடுவார் என்று எமக்கு நாமே சமாதானமும் சொல்லிக்கொண்டோம்.
பயிற்சி ஆசிரியருக்கும் விடயம் போய்விட்டது. நாம் காரணத்தைக்கூறி தண்டனையிலிருந்து தப்பலாம் என முயற்சித்தோம். ஆனால் ராயு அண்ணையின் பதில் எம்மால் நிராகரிக்க முடியாததாக இருந்தது. அவர் கூறியது இதுதான். “நீங்கள் சிறப்புப் படையணிப் போராளிகள். நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும் இடங்களில் போதியளவு வளங்கள் கிடைக்குமென்று எதிர்பார்க்க முடியாது.
நீங்கள் நடவடிக்கையில் ஈடுபடும்போது திட்டமிடப்படாத எதிர்பாராத பணிகள் காத்திருக்கலாம். அதற்கெல்லாம் உங்களை நீங்கள் தயார்ப்படுத்த வேண்டுமாயின் நீங்கள் இவ்வாறான சாக்குப்போக்குகள் சொல்ல முடியாது”. இதன்பிறகும் எம்மால் அவருடன் எதைக் கதைக்க முடியும்? தண்டனை உறுதி. எமதணிக்கான அடுத்துவந்த நகர்வு குடிநீரின்றி முடிந்தது.