ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: விறுவிறு வாக்குப்பதிவு!
,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (பிப்.5) நடைபெறும் நிலையில், வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளில் பரபரப்பாக காணப்படுகிறது. இன்று நடைபெறும் தேர்தலுக்கு பிப்.8ஆம் தேதி வாக்குஎண்ணிக்கை நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம்
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அடங்கிய 33 வார்டுகளில் உள்ள 53 வாக்குப்பதிவு மையங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16,760 பெண் வாக்காளர்களும், 37 மூன்றாம் பாலினத்தவர்களும் என 2,26,433 வாக்காளர்கள் உள்ளனர். இந்த இடைத்தேர்தல் களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேட்சைகள் என மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஈரோடு இடைத்தேர்தலில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
அதேபோல, டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி, எதிர்கட்சியான பா.ஜ.க, காங்கிரஸ் ஆகியன களம் காண்கின்றன. மும்முனை போட்டி என்றாலும், சுயேச்சை வேட்பாளர்களை சேர்த்து மொத்தம் 699 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். 3-வது முறையாக தலைநகரைத் தக்கவைக்க ஆம் ஆத்மி கட்சியும், பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் டெல்லியை தங்கள் வசப்படுத்த மும்முரத்தில் உள்ளனர்.
தற்போது, நாட்டின் தலைநகரில் இன்று நடைபெறும் தேர்தலில் வாக்களிப்பதற்காக, 83 லட்சத்து 76 ஆயிரத்து 173 ஆண்களும் (83,76,173), 72 லட்சத்து 36 ஆயிரத்து 560 பெண்களும் (72,36,560), 1,267 பிற பாலினத்தவரும் என மொத்தம் ஒரு கோடியே 56 லட்சத்து 14 ஆயிரம் (1,56,14,000) வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.98% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடும் பனிப் பொழிவு நிலவி வந்த நிலையில் வாக்காளர்கள் ஈரோடு ரயில்வே காலனி மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில், வாக்காளர்கள் கடும் பனிப் பொழிவிலும் வாக்காளர்கள் அடையாள அட்டையைக் காண்பித்து தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர். ஈரோடு ரயில்வே காலனியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி உள்ளே வாக்காளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுக்க வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கருதி மத்திய ரிசர்வ் படை மற்றும் உள்ளூர் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குச்சாவடி மையங்களாகச் செயல்படும் 53 அரசு மற்றும் தனியார் மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.