சிறையில் அடைக்கப்படுவாரா ரணில்..! வெளிக்கிளம்பும் மறைக்கப்பட்ட இரகசியங்கள்.
சபுகஸ்கந்த படலந்த சித்திரவதை முகாமானது, அதாவது யூரியா உர தொழிற்சாலை அக்காலப்பகுதியில் 'குட்டி இங்கிலாந்து' .

அண்மையில் இடம்பெற்ற அல்ஜசீரா நேர்காணலிற்கு பின்னர், படலந்த வதைமுகாம் தொடர்பான விடயங்கள் சூடு பிடித்திருக்கின்றன.
அந்தவகையில், குறித்த வதைமுகாமுடன் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இருந்த தொடர்புகள் குறித்த பல்வேறு உண்மைகளும் சாட்சியங்களும், வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இது ரணில் விக்ரமசிங்கவிற்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நிலையில், படலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் முன்னெடுக்கப்படுமா என்ற கேள்வியும் பலதரப்புகளில் இருந்து எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், படலந்த விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு துணையாக நின்று, நடவடிக்கைகளை முன்னெடுத்த முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் வழங்கியுள்ள சத்தியக்கடதாசி தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குட்டி இங்கிலாந்து
லங்காசிறியின் நேர்காணலில் கலந்து கொண்ட இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் இது தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, படலந்த வதைமுகாமை தேர்தலுக்கான ஒரு கருவியாகவே பயன்படுத்தி வந்துள்ளார். இதனால் தான் அக்காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக அவர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இளம் ஊடகவியலாளர் சங்க செயலாளர் பசீர் குறிப்பிட்டுள்ளார்.
படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான ஆதாரங்களும் சாட்சியங்களும் ஏராளமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் இருக்கக் கூடிய படலந்த சித்திரவதை முகாமானது, அதாவது யூரியா உர தொழிற்சாலையாக இருந்த குறித்த பகுதி அக்காலப்பகுதியில் 'குட்டி இங்கிலாந்து' என அழைக்கப்பட்டிருக்கின்றது.
சிறப்பு பொலிஸ் பிரிவு
காரணம், அந்த உர தொழிற்சாலையின் இயங்குநிலையை பராமரிப்பதற்காக இங்கிலாந்தை சேர்ந்த நபர்கள் அங்கு குடியமர்த்தப்பட்டார்கள். எனவே, அவர்களுக்காக மிகவும் சொகுசு வாய்ந்த குடியிருப்பு தொகுதிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.
1988 - 1989களில், அதாவது ஜேவிபி குழப்பம் என சொல்லப்படும் அந்த காலப்பகுதியில், இலங்கை முழுவதும் 'புரட்சிகர காவற்படையை அடக்குவதற்கான பிரிவு' என்ற ஒரு சிறப்பு பொலிஸ் பிரிவு, ஐக்கிய தேசியகட்சி ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, பேலியகொட வலையத்தின் குறித்த சிறப்பு பொலிஸ் பிரிவிற்கு தலைமை தாங்கிய முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ், இந்த படலந்த வதைமுகாமின் முக்கிய சாட்சியாளர் அல்லது சந்தேகநபராக இருக்கலாம் என்று இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சந்திரிக்காவின் ஆட்சிக்காலத்தில் படலந்த வதை முகாம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்க ஒரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருந்தது.
அந்த ஆணைக்குழுவின் அறிக்கையின் படி, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அனைத்து விடயங்கள் மற்றும் அங்கு கொல்லப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆவார்.
யூரியா கைத்தொழிற்சாலை
ரணில் விக்ரமசிங்க, அவரின் முந்தைய ஆட்சிக்காலத்தில், குறித்த யூரியா கைத்தொழிற்சாலை பகுதிகளை தேர்தல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பான சாட்சியங்கள் ஏராளமாக இருப்பதாக தெரிவித்த பசீர், இக்குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய பாதுகாப்பு தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு அப்பகுதியில் வீடுகள் வழங்கப்பட்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்குள்ளே பல்வேறு சித்திரவதைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டிருக்கின்றன.
படலந்த சித்திரவதை முகாமில் பொலிஸாரின் இரகசிய பகுதி மற்றும் இராணுவத்தின் முகாம் என்பன மூலம் நடத்தப்பட்ட முக்கிய சித்திரவதைகள் தொடர்பான அனைத்து சாட்சியங்களும் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெளிவாக இருப்பது அனைவரும் அறிந்ததே.
உதவி பொலிஸ் அத்தியட்சகர்
இருப்பினும், குறித்த அறிக்கையையும் தாண்டி ஒரு முக்கிய சாட்சியமாகவே முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் வழங்கியுள்ள சத்தியக்கடதாசி உள்ளதாக பசீர் குறிப்பிட்டார்.
அதாவது, படலந்த விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்கவிற்கு துணையாக நின்று, முன்னாள் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டக்ளஸ் பீரிஸ் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
இதன்காரணமாக, சந்திரிக்கா ஜனாதிபதியான காலப்பகுதியில் ரணில் விக்ரமசிங்க, முக்கிய சாட்சியான டக்ளஸ் பீரிஸை நாட்டை விட்டு தப்பியோட செய்துள்ளார்.
இருப்பினும், முன்னதாக ரணில் அவரின் முக்கிய சாட்சியங்களை இல்லாது செய்தமை அனைத்தையும் அறிந்த டக்ளஸ் பீரிஸ், அவருக்கு பயந்து இந்தியாவிலிருந்து இலங்கை வந்துள்ளார்.
இருப்பினும், இலங்கையில் விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரிடம் சிக்கியதையடுத்து குற்றபுலனாய்வு பிரிவின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நிலையில், தனக்கு தெரிந்த உண்மைகளை வெளிப்படுத்துவதாக கம்பஹா நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
முக்கிய சாட்சியங்கள்
இதனை தொடர்ந்து நீதிமன்றின் அனுமதியுடன், அவர் குறித்த சத்தியக்கடதாசியை வழங்கியதாகவும், இதன் காரணமாக விசாரணைகளை மேற்கொள்வதில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் இலங்கையின் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளர் பசீர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ரணிலின் பங்களா பராமரிப்பாளராகப் பணியாற்றிய வின்சென்ட் பெர்னாண்டோ, ஆணையகத்தில் சாட்சியமளிக்க சில நாட்களுக்கு முன்னர், மர்மமான முறையில் இறந்தார்.
இது மாத்திரமன்றி, இவ்விடயம் தொடர்பில் சாட்சியங்கள் தெரிந்த வேறு சிலரும் உயிரிழந்ததாகவும், உயிரை மாய்த்துக் கொண்டதாகவும், ஆணைக்குழுவின் அறிக்கை தெரிவிக்கின்றது.
அந்தவகையில், தற்போது வெளிவந்த அல்ஜசீரா நேர்காணலிற்கு பின்னர், குறித்த படலந்த வதைமுகாம் தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த பிண்ணனியில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக திரும்பியுள்ள படலந்த விவகாரம் தொடர்பில் மீள் விசாரணைகள் ஆரம்பிக்கப்படுமா என்பதுடன் அது குறித்த உண்மைகள் அரசாங்கத்தால் வெளிக்கொணரப்படுமா என பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.