தலைவர்களை இழந்த தமிழ்த்தேசிய அரசியல்!
,

தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கட்சிகள் பதினைந்துக்கு மேல் உண்டு. ஆனாலும் தமிழ்த்தேசிய அரசியல் அரங்கிலே ஒரு வலிமையான – அடையாளம் காட்டக் கூடிய – தலைவர் என எவருமே இல்லை.
என்பதால்தான் தமிழ்த்தேசிய அரசியற் சக்திகளை ஒருங்கிணைக்கவும் முடியவில்லை. அதனைக் கோட்பாட்டு ரீதியாக வளர்த்தெடுக்கவும் முடியவில்லை. நடைமுறை ரீதியான பிரச்சினைகளுக்கு அதனால் முகம் கொடுக்கவும் முடியவில்லை. அதைப் பலமடையச் செய்யவும் முடியவில்லை. உள்நாட்டில் தமிழ்ச் சூழலிலும் சரி, இலங்கைக்குள்ளும் சரி, இலங்கைக்கு வெளியே சர்வதேச சமூகத்தோடும் சரி, புலம்பெயர்ந்த தமிழர்களிடத்திலேயும் சரி அதனால் சரியான முறையில் உரையாடலும் தொடர்பாடலைப் பேணவும் முடியவில்லை.
தொகுத்துச் சொன்னால், 2009 க்குப் பிறகு தமிழ்த்தேசிய அரசியல் பலவீனப்பட்டே வந்துள்ளது. சரி பிழைகளுக்கு அப்பால் சம்பந்தன் இருக்கும் வரையில் தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஒரு தலைமை இருப்பதான தோற்றமாவது இருந்தது. ஆயிரம் விமர்சனங்களுக்கு மத்தியிலும் வெளி அரசியற் தரப்புகளோடு உரையாடக் கூடிய – தொடர்பாடலைச் செய்யக் கூடிய நிலையில் சம்பந்தன் இருந்தார். சம்பந்தனையே அவர்கள் தமிழர்களின் பிரதிநிதியாகவும் தலைவராகவும் அடையாளம் கண்டனர். சம்பந்தனின் மறைவுக்குப் பிறகு அதுவும் இல்லையென்றாகி விட்டது.
இப்பொழுது தெரு முக்குகளில் பெட்டிக்கடைகள் இருப்பதைப்போல, அங்கங்கே பெயர்ப்பலகைகளோடு ஒவ்வொரு கட்சிகளும் உள்ளன. சில கட்சிகளில் ஐந்தாறு பேருக்குமேல் உறுப்பினர்களே இல்லை. சிலவற்றில் அவர்களே மாறாத தலைவர்களாக இருக்கிறார்கள். அதனால் மாற்றமடைந்துள்ள சூழலுக்குப் பொருத்தமான முடிவுகளை எடுக்க முடியாமலும் புதிய சவால்களை எதிர்கொள்ள முடியாமலும் உள்ளனர். இதனால்தான் கடந்த தேர்தலில் இந்தக் கட்சிகளும் அணிகளும் படு தோல்வியடைந்தன. இதற்குப் பிறகு கூட இவை எந்தப் படிப்பினைகளையும் கொள்ளவில்லை. இன்னும் அதே பழைய பாணியிலேயே தமது அரசியலை முன்னெடுக்க முயற்சிக்கின்றன.
இதனால் அடுத்த சில மாதங்களில் வரவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலிலும் இவை தோல்விடையும் நிலையே பெரும்பாலும் உண்டு.
இவ்வளவுக்கும் இவை விடுதலை அரசியலையோ ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலையோ மக்கள் அரசியலையே முன்னெடுப்பவையும் அல்ல. கடந்த முப்பது ஆண்டுகளாக இவை தேர்தல் அரசியலை மட்டுமே செய்து வருகின்றன. அதிலும் தோற்று விட்டன.
இவற்றில் மூன்று விதமான குழுக்கள் உண்டு. இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகிலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகியவை முற்று முழுதாகவே தேர்தல் அரசியலையே தமது வரலாறாகவும் வாழ்வாகவும் கொண்டவை. அதற்குத் தோதான வார்த்தைகளை – சுலோகங்களை – பிரகடனங்களை – அவ்வப்போது தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்வதே இவற்றின் அரசியலும் உபாயமுமாகும்.
அடுத்த குழு, EPRLF, TELO, PLOT உள்ளிட்டவை. இவை முன்பாதி ஆயுதப்போராட்ட அரசியலையும் பின்பாதி தேர்தல் அரசியலையும் கொண்டவை. ஆயுதப்போராட்டத்திலிருந்து வந்தவை என்ற வகையில் இவை வேறு விதமான அரசியற் பண்பிற்குரியவையாக வளர்ச்சியடைந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 2009 இல் ஏற்பட்ட விடுதலைப் புலிகள் வீழ்ச்சிக்குப் பிறகாவது தமிழ் அரசியல் பரப்பிலும் இலங்கை அரசியற் பரப்பிலும் உருவாகிய சூழலைக் கையாளக் கூடிய விதமாகத் தம்மை உருவாக்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால் தேர்தல் அசியலைக் கூடச் சற்று வேறுவிதமாகக் கைக்கொண்டிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய விடுதலை அரசியலாகவும் மக்கள் அரசியலாகவும் அதைக்கையாண்டிருக்க முடியும்.
ஆனால் அப்படிச் செய்யவில்லை. பதிலாக தங்களுடைய இயல்பையும் அடையாளத்தையும் இழந்து, ஏற்கனவே இருந்த மிதவாத அரசியற் சக்திகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி போன்றவற்றைப்போலவே இவையும் சுருங்கின.
இன்னொரு வகையில் இதைச் சொன்னால், இவற்றின் தலைவர்களான பத்மநாபா, சிறிசபாரத்தினம், உமா மகேஸ்வரன் போன்றோர் உருவாக்கியிருந்த அடையாளத்தையும் அரசியல் பாதையையும் கைவிட்டு, சம்பந்தன், கஜேந்திரகுமார் வழியிற் செல்ல முற்பட்டன. என்பதால்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் மற்றும் ஜனநாயகப்போராளிகள், சிறிகாந்தா – சிவாஜிலிங்கத்தின் தமிழ்த்தேசியக் கட்சி, விக்னேஸ்வரனின் தமிழ்த்தேசியக் கூட்டணி எல்லாம் இணைந்து உருவாக்கிய, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தனி அடையாளத்தைப் பெற முடியாமல் போனது. மக்களாலும் நிராகரிக்கப்பட்டது.
மூன்றாவது குழு 2009 க்குப் பிறகு ஏற்கனவே இருந்த கட்சிகள், குழுக்கள், அணிகளிலிருந்து பிரிந்து புதிதாக உருவாகியவை. இவை முற்று முழுதாகவே தேர்தல் அரசியலை மட்டுமே குறியாகக் கொண்டவை. சற்று விலக்கானது என்றால் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மட்டும்தான். அதை அரசியற் கட்சியாக நோக்குவதையும் விட, ஒரு செயற்பாட்டு இயக்கமாக – பசுமை சார்ந்த மக்கள் அமைப்பாகப் பார்ப்பதே சரியானதாகும்.
இந்தச் சூழலில்தான் தமிழ்த்தேசிய அரசியற் பரப்புள்ளது. இதிலும் தமிழரசுக் கட்சி, உள் முரண்பாடுகள் வலுத்து நீதி மன்றம் தொடக்கம் மயானம் வரையில் அணி மோதல்களில் சிக்குண்டுள்ளது. அதைக் கட்டுப்படுத்தி, ஒழுங்காக்கி வழிப்படுத்தக் கூடிய தலைமைத்துவம் அதற்கில்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானத்தை எவரும் தலைவராக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.
சித்தார்த்தனுக்குப் புளொட்டுக்குள்ளேயே நெருக்கடிகள். ரெலோவுக்குள்ளும் உள் மோதல்கள் பலமடையத் தொடங்கி விட்டன. ஈ.பி.ஆர்.எல். எவ் சத்தமின்றி ஓய்வுக்குப் போகும் நிலைக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே ஈரோஸ் இவ்வாறான ஒரு நிலைக்குள்ளாகியதை இங்கே நினைவிற் கொள்ள வேண்டும்.
1989 இல் 14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த (ஆயுதப்போராட்ட இயக்கங்களில் அதிகூடிய ஆசனங்களைக் கைப்பற்றிய முதலும் கடைசியுமான அமைப்பு ஈரோஸ்தான்) ஈரோஸ், பின்னர் ஒரு உறுப்பினரைக் கூடப் பெற முடியாத நிலையில் அரசியற் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஏறக்குறைய அதையொத்த நிலைக்கே இன்றைய ஈ.பி.ஆர்.எல்.எவ் வந்துள்ளது. ஆனால், தம்மைச் சரியாக ஒழுங்கமைத்தால் மீள எழுச்சியடைய முடியும். அதற்கு அமைப்புகளில் இருப்போர் விஞ்ஞான பூர்வமான ஆய்வுக்கும் மனந்திறந்த உரையாடல்களுக்கும் விட்டுக் கொடுப்புகளுக்கும் தம்மை தயார்ப்படுத்த வேண்டும்.
இப்போதுள்ள தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி இரண்டும்தான் பாராளுமன்ற அங்கத்துவத்தைக் கொண்டுள்ளன. இவற்றின் தலைவர்களாக கஜேந்திரகுமாரும் சிறிதரனுமே உள்ளனர். இருவரும் தீவிரப் போக்குடையவர்கள். அதனால், பிறரை, பிற சக்திகளை அரவணைத்துச் செல்ல முடியாதவர்கள். ஆகவே இவர்களால் எந்த அணிக்கும் தலைமை தாங்கவும் முடியாது. எவரோடும் இணைந்து வேலை செய்யவும் முடியாது. ஏனைய தரப்புகளையோ, குழுக்களையோ அணி சேர்க்கவும் முடியாது.
எனவே இவர்கள் இருவரும் மட்டுமே ஒரு மேலோட்டமான அரசியற் கூட்டையோ உறவையோ கொண்டிருக்க முடியும். அதிலும் தமிழரசுக் கட்சியைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் சிறிதரனை விட வேறு தரப்பினரின் கைகளிலேயே – சுமந்திரனின் கைகளிலேயே -உள்ளது. என்பதால், தமிழரசுக் கட்சியின் முழுச் சம்மதத்துடன் எந்தக் கூட்டையும் சிறிதரன் மேற்கொள்ள முடியாது. எனவே சிறிதரனும் கஜேந்திரகுமாரும் இரண்டு தண்டவாளங்களைப் போலத்தான் இருக்க முடியும்.
இந்த நிலையில் மாற்றுத் தரப்புகள் தமக்கிடையில் ஒரு அணியை உருவாக்கி, தமிழ்த்தேசிய அரசியலுக்குத் தலைமை தாங்க முடியும். ஆனால் அதற்காகக் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கு முதலாவதாக இதிலுள்ள கட்சிகளும் தலைவர்களும் தம்மைப் புதுப்பித்துக் கொள்வது – மாற்றத்துக்குள்ளாவது – அவசியமாகும்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியைப் போலன்றி, விடுதலை இயக்கப் பாராம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்ற வகையில் செயற்பாட்டு அரசியலை –நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக, ஜே.வி.பி எப்படி என். பி.பி ஆக பரிமாணமடைந்ததோ அதைப்போலவேனும். இல்லையெனில் அவ்வப்போது அறிக்கை, ஊடகச் சந்திப்பு, கடிதம் எழுதுவது என தமிழர் விடுதலைக் கூட்டணியைப்போலவே இவையும் மாறும் அபாயமுண்டு.
இதற்காகத்தான் இவை ஒரு மாற்று உபாயமாக ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ்ப் பொதுவேட்பாளரை உருவாக்கி நிறுத்தின. அதைத் தொடர்ந்து தமது செல்வாக்கை உயர்த்திக் கொள்ளலாம் என்று கற்பனை செய்தன. ஆனால், அது எந்த வகையிலும் உதவப்போவதில்லை என்று இந்தக் கட்டுரையாளர், அரங்கம் – பத்திரிகை என்ற இந்த இணையத்தளம் உட்படப் பலரும் வலியுறுத்தி வந்தனர். இறுதியில் தமிழ்ப்பொது வேட்பாளர் என்ற புயல் இருந்த செல்வாக்கையும் பலத்தையும் அடித்துச் சென்று விட்டது.
ஆகவே இப்போது தமிழ்த்தேசிய அரசியலில் உருவாகியுள்ள கோட்பாட்டுப் பலவீனம், தலைமைத்துவ வெற்றிடம், நடைமுறைப் பிரச்சினைகள், சமகால நிலவரத்தைக் கையாளும் ஆற்றல், எதிர்காலத்தைப் பற்றிய தீர்க்கதரிசனமான பார்வை, வெளியுறவுகள், பிற சக்திகளுடனான ஊடாட்டம் போன்றவற்றை நிரப்பி மேலெழக் கூடியவாறு எந்தச் சக்தியாவது மேலெழுந்தால்தான் தமிழ்த்தேசிய அரசியலின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும். இல்லையெனில் காலத்தினால் கரைந்து போய் விடக் கூடிய சூழலே உண்டு.
தேர்தல் அரசியில் மட்டுமே மையங்கொண்டிருந்த காரணத்தினால், தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட கட்சிகளுக்கு அரசியல் அரங்கில் இடமில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதை ஒவ்வொரு அரசியற் தரப்பும் கவனத்திற் கொள்வது அவசியம். இது தமிழ்த்தேசியச் சக்திகளுக்கு மட்டுமல்ல, ஐ.தே.க, சிறிலங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றுக்கும் பொருந்தும்.
எப்போதும் மக்கள் அரசியலில் செயற்பட்டால் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இயங்கக் கூடிய ஒரு வெளியும் அரங்கும் அழியாது இருக்கும். அதுவே அரசியற் பலமாகும். தமிழ்த்தேசியத் தலைமையை உருவாக்க வேண்டுமெனில் இந்த உண்மையிலிருந்து படித்தால் நல்லது. அதாவது தேர்தலுக்கு அப்பாலும் அரசியல் உண்டு. அரசியற் பணிகள் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
- கருணாகரன் -