விமர்சனங்களுக்கு தரமான பதிலடி. அப்படித்தான் வாழ வேண்டுமென எந்த அவசியமும் இல்லை.. ஜிவி பிரகாஷ்.
எனக்குள் ஒரு தராசு இருக்கிறது. அந்தத் தராசை வைத்து சரி, தவறை நான் முடிவு செய்வேன்"

ஜிவி பிரகாஷ் இப்போது குட் பேட் அக்லி படத்துக்கு இசையமைத்திருக்கிறார். மேலும் அன்பறிவ் இயக்கத்தில் கமல் நடிக்கும் படத்துக்கும் அவர்தான் இசை என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே ஹீரோவாகவும் கலக்கிவரும் அவர் தற்போது கிங்ஸ்டன் படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் அந்தப் படம் ரிலீஸாகவிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
ஜிவி பிரகாஷ் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். முதல் படத்திலிருந்தே தரமான இசையை கொடுத்துவரும் அவர் சூரரைப் போற்று படத்துக்காக தேசிய விருதையும் வென்றார். அந்தப் படத்தின் மெகா ஹிட்டுக்கு ஜிவியின் இசையும் முக்கியமான காரணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்துக்காக அவர் தேசிய விருது வென்றத்தை அனைத்து இசையமைப்பாளர்களின் ரசிகர்களும் கொண்டாடினார்கள். அந்த அளவுக்கு ஜிவிக்கு ஹேட்டர்ஸ் குறைவாகவே இருக்கிறார்கள்.
இசையமைப்பதில் பீக்கில் இருந்த பிரகாஷ் திடீரென ஹீரோ அவதாரம் எடுத்தார். டார்லிங் படத்தில் ஹீரோவாக களமிறங்கிய அவர் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, சர்வம் தாளமயம், நாச்சியார், சிகப்பு மஞ்சள் பச்சை, பென்சில், பேச்சிலர் என ஏராளமான படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால் இவற்றில் சில படங்கள் மட்டுமே அவருக்கு நடிகராக நல்ல பெயரையும், ஹிட் படங்களாகவும் அமைந்திருக்கின்றன. இருப்பினும் நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டுகிறார் ஜிவி.
மீண்டும் ஃபார்மில்: ஹீரோவாக நடிப்பது ஒருபக்கம் இருந்தாலும் தொடர்ந்து அதிக படங்களுக்கு அவர் இசையமைக்க வேண்டுமென்பதுதான் ரசிகர்களின் பேராவலாக இருந்தது. அதனை கவனித்த ஜிவி மீண்டும் இசையமைப்பதில் பிஸியாகியிருக்கிறார். அந்தவகையில் அசுரன், அமரன், லக்கி பாஸ்கர், குட் பேட் அக்லி, பராசக்தி என ஃபார்முக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் வெளியான குட் பேட் அக்லி படத்தின் டீசரில் ஜிவி பிரகாஷின் இசையை கேட்ட ரசிகர்கள் பிரமிப்பில் வாயடைத்து போயிருக்கின்றனர். அந்த அளவுக்கு செம இசையை கொடுத்திருக்கிறார்.
இதற்கிடையே பின்னணி பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் கடந்த வருடம் பிரிவதாக அறிவித்தார். எப்படியாவது அவர்கள் இரண்டு பேரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என ஜிவியின் குடும்பத்தினர் மட்டுமின்றி ரசிகர்களுமே காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கான வாய்ப்பை காலம் வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெர்சனல் வாழ்க்கையில் இருவரும் பிரிந்தாலும் இசை ரீதியாக நட்பாகத்தான் இருக்கிறார்கள். இசை கச்சேரியிலும் இணைந்து பயணிக்கிறார்கள்.
அவர் இப்போது கிங்ஸ்டன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அப்படம் விரைவில் ரிலீஸாகவிருப்பதால் அதற்கான ப்ரோமோஷன் பணிகளில் கவனம் செலுத்திவருகிறார். அந்தவகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது ரியல் லைஃப் கேரக்டர் குறித்து பேசியிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "நான் மற்றவர்களுக்காக வாழ முடியாது. அடுத்தவர்களை இம்ப்ரெஸ் செய்ய வேண்டும் என்று வாழ்ந்தால் நான் எத்தனை நாட்கள் அப்படியே வாழ முடியும்.
என்னைப் பற்றி அவர் என்ன நினைப்பார், இவர் என்ன நினைப்பார் என்றெல்லாம் நான் நினைக்கமாட்டேன். எனக்கு தோன்றுவதை நான் செய்வேன். அடுத்தவர்களுக்காக நான் வாழ வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. எனக்குள் ஒரு தராசு இருக்கிறது. அந்தத் தராசை வைத்து சரி அல்லது தவறை நான் முடிவு செய்வேன்" என்றார்.