தமிழரசுக் கட்சியும் ரணிலும் தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளனர்: நாமல் குற்றச்சாட்டு
.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இலங்கை தமிழரசுக் கட்சியும் இணைந்து மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத் திருத்தச் சட்டமூலத்தை விவாதத்திற்குட்படுத்தாது நிறைவேற்றி நாசப்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார்.
ரணில் மற்றும் தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் தங்களது சொந்த அரசியல் காரணங்களுக்காக தவறவிட்ட பொன்னான வாய்ப்பு இதுவென நாமல் ராஜபக்ச வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
“ரணிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கட்டத்திலும் 13 ஆவது திருத்தம் பற்றி அவர்கள் உயர்வாகப் பேசினாலும், அவர்களின் நடவடிக்கைகள் வேறுபட்ட நிகழ்ச்சி நிரலை வெளிப்படுத்துகின்றது.
உண்மையைக் கூறினால் என்னை வில்லன் என்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால் இப்போது, உண்மையான வில்லன்கள் யார் என்பதை மக்கள் காண முடியும்.
நான் தமிழ் மக்களுக்கு உண்மையைச் சொல்கிறேன் ஆனால் ரணில் விக்ரமசிங்கவும் இலங்கை தமிழரசுக் கட்சியும் பொய் கூறிகிறார்கள். ரணிலுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம் இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் மக்களைத் தோல்வியடையச் செய்துள்ளது, ரணில் மீண்டும் தமிழ் மக்களை முட்டாளாக்கியுள்ளார், ”என அவர் மேலும் கூறியுள்ளார்.