சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாய் உயிரிழப்பு- யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!
இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்த தாயாரும் உயிரிழப்பு!
யாழ். போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இளம் தாயொருவர் நேற்று முன்தினம் (25) உயிரிழந்துள்ளார்.
டச்சுவீதி, உடுவில் மேற்கு, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நிருன் டர்சிகா என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த இளம் தாயாருக்கு ஏற்பட்ட வயிற்றுக்குற்று காரணமாக கடந்த 19ஆம் திகதி அன்று வயிற்றில் சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அவருக்கு வயிற்றில் ஒரு குழாய் வைக்கப்பட்டது.
அந்த குழாயினை அகற்றுவதற்காக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சத்திர சிகிச்சை நிறைவில் குறித்த தாயார் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் ஒழுங்குபடுத்தினர்.
இரத்த நாளங்களுக்குள் இரத்த கசிவு ஏற்பட்டு, இரத்தப் போக்கினால் மரணம் ஏற்பட்டதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்திருந்த தாயாரும் நேற்று (26) உயிரிழந்தார்.
ஆனைக்கோட்டை, சோமசுந்தரம் வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய நிமலராஜு சாருமதி என்ற இளம் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
குறித்த இளம் தாய் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறுவைசிகிச்சை மூலம் ஒரு ஆண் குழந்தையையும், ஒரு பெண் குழந்தையையும் பிரசவித்தார்.
இதன்போது ஒரு குழந்தை உயிரிழந்த நிலையில் பிறந்ததுடன், மற்றொரு குழந்தை பிறந்து 45 நிமிடங்களில் உயிரிழந்தது.
இந்நிலையில் தாய் தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்ததால் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் ஒழுங்குபடுத்தினர்.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் உறுதியாகாத நிலையில், உடற்கூறு மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்பிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


