அமைச்சர் துரைமுருகன் இல்லத்தில் அமலாக்கத்துறை; ஆள் இல்லாததால் சோதனைக்காக காத்திருப்பு!
.

வேலூர் காந்திநகர் பகுதியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்துவதற்காக காத்திருக்கின்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன், அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை செய்வதற்காக காத்திருக்கின்றனர்.
காலை ஏழு மணிக்கு துரைமுருகன் இல்லத்தில் வந்த அமலாக்கத்துறையினர், வீட்டில் யாரும் இல்லாததால், முகப்பு கேட்டைக் கடந்து சென்று திண்ணையில் காத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதே நேரத்தில் பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கணக்கில் வராத பணம்
அமைச்சர் துரைமுருகனும், அவரது மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தனும் ஒரே வீட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வீட்டில் தற்போது சுமார் 10 மத்திய ரிசர்வ் படை பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மற்றொருபுறம், வேலூர் மாநகர திமுக விவசாய அணி அமைப்பாளரான பூஞ்சோலை சீனிவாசன், கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது, அவரது வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதும்.
அதாவது, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வருமான வரித்துறை நடத்திய இந்த சோதனையில் துரைமுருகன் வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடு, பூஞ்சோலை சீனிவாசன் சிமெண்ட் கிடங்குகளில் சோதனை நடத்தி, கணக்கில் வராத 11 கோடியே 55 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக காட்பாடி போலீசில் வழக்குப்பதிவு செய்து வேலூர் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அமலாக்கத்துறை சோதனை
இந்த சம்பவம் அப்போது பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், இந்த பணம் விவகாரம் தொடர்பாக இன்றைய அமலாக்கத்துறையினரின் சோதனையானது நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்வதற்காக வந்ததை அறிந்து, அவரது வீட்டின் முன்பாக திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கூடி இருக்கின்றனர். இந்த நேரத்தில், அமைச்சர் துரைமுருகன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்றுள்ளார்.
வேலூரில் உள்ள துரைமுருகன், கதிர் ஆனந்த் வீட்டின் முன்பாகத் தொண்டர்கள் கூடியிருப்பதால், மாவட்ட இணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்து, பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.