சீனப் பயணத்தை எச்சரிக்கையுடன் அவதானிக்கும் இந்தியா!
.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சீன விஜயத்தை இந்தியா மிகவும் எச்சரிக்கையுடன் அவதானிக்கும் என அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.
''சீனாவுக்கு அவர் பயணம் செய்வது என்பது வழமையானது. இலங்கையை பொருத்தவரை எந்தவொரு ஜனாதிபதியும் பதவியேற்றவுடன், அண்டை நாடுகளான இந்தியாவுக்கும், சீனாவுக்கும் பயணிப்பார்கள். முதலில் இந்தியாவுக்குதான் பயணிப்பார்கள். அதன் பின்னர் சீனாவுக்கு செல்வார்கள்." என்கிறார்.
"இலங்கைக்கு எப்போதும் சீனாவுடன் உறவு இருக்கின்றது. ஆனால், இலங்கையில் இந்தியாவை மீறி சீனாவினால் எதுவும் செய்ய முடியாது. இந்த பயணத்தின் போது முதலீடுகள் மற்றும் பொருளாதார உதவிகளை பற்றிதான் பேச போகின்றார்கள்." என்றும் அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "நிச்சயமாக இந்த பயணத்தில் இந்தியாவுக்கு அல்லது அமெரிக்காவுக்கு எதிரான, விடயங்களை பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லை."
"ஆனால், அந்த விடயங்களில் சீனா அழுத்தங்களை கொடுத்தாலும், ராஜபக்ஸ, ரணில் விக்ரமசிங்க, சந்திரிகா போன்றோர் இந்த விடயத்தில் எவ்வாறான முறையை கையாண்டார்களோ அதே முறையைதான் அநுர குமார திஸாநாயக்கவும் கையாள்வார். இந்த பயணம் பெரிய தாக்கத்தை செலுத்தாது. குறிப்பாக இலங்கைக்கான உதவிகளைதான் கொண்டு வரும்" என்று கூறுகிறார்.
ஆனால், இந்தோ-பசிபிக் போட்டியால் இந்தியா, இந்த பயணத்தை மிகவும் எச்சரிக்கையுடன் பார்ப்பதாக சிங்கள ஊடகங்கள் ஊகங்களை வெளியிடுகின்றன. ''இந்தியா எச்சரிக்கையுடன் இருக்கும். எனினும், அளவுக்கு அதிகமான எச்சரிக்கையுடன் இருக்கும் என சொல்ல முடியாது'' என்று அரசியல் ஆய்வாளர் அ.நிக்சன் தெரிவிக்கின்றார்.