தேசபந்துவை பதவி நீக்கம் செய்வதற்காக நியமிக்கப்படவுள்ள குழு
குறித்த பிரேரணை எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதமின்றி சமர்ப்பிக்கப்படும்

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வதற்காக குழுவொன்றை நியமிக்கும் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.
இதற்கான இணக்கப்பாடு இன்றையதினம் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எட்டப்பட்டுள்ளது.
தவறான நடத்தை, ஊழல், பதவி துஷ்பிரயோகம், கடமை தவறுதல் மற்றும் பாரபட்சம் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 115 பேரின் கையொப்பத்துடன் அண்மையில் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இதன்படி, குறித்த பிரேரணை எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதமின்றி சமர்ப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், கடந்த 2023ஆம் ஆண்டு வெலிகம, பெலேன பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டுவந்தார்.
நீதிமன்றின் பிடியானைக்கு பிறகு தலைமறைவான அவர், நீண்ட நாட்களுக்கு பிறகு மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததையடுத்து, அவருக்கு விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.