தமிழரசு கட்சியின் மத்திய குழு தீர்மானத்தை ஏற்க முடியாது: சிறீதரன் காட்டம்
.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று தீர்மானித்தது.
இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட தீர்மானத்துக்கான எதிர்வினையை எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தவிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தற்போது லண்டன் சென்றுள்ள அவர், கட்சியின் தீர்மானம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே இந்த விடயத்தைக் கூறினார்.
கடந்த காலங்களில் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வந்த சிறீதரன் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்தார்.
இதேவேளை, கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் மாவட்ட ரீதியாகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளாத நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பாக நல்லூர் உற்சவ நாளில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்தக் கூட்டத்தில் சுகயீனம் காரணமாகக் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்திருந்ததாகவும், சிறீதரன் தமது நிலைப்பாட்டை எழுத்து மூலமாகக் கூட்டத்துக்கு தெரியப்படுத்தி இருந்ததாகவும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
எனவே சிறீதரனின் நிலைப்பாடு உள்ளிட்ட பல விடயங்கள் கருத்திற் கொள்ளப்பட்டே தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் கட்சித் தலைவர் இல்லாமல் மத்திய செயற்குழு தீர்மானங்களை எடுக்கக்கூடாது என்று கட்சி யாப்பில் இல்லை என்றும், தீர்மானம் எடுப்பதற்குத் தேவையான கோரத்தை விட அதிகமான உறுப்பினர்கள் பங்குபற்றி இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் கட்சியின் மத்திய குழு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் சரியானதே என்றும், இந்தத் தீர்மானம் உரிய தரப்பினருக்கு உரிய வகையில் அறிவிக்கப்படும் என்றும் சீ.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.