அனுர மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்!
.
”அனுரகுமார திஸாநாயக்க மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்”என முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தல் நிலவரம் குறித்து கருத்துத் தெரிவித்த போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வருவதாகக் கூறிய ஜனாதிபதி அனுரகுமார தற்போது மக்கள் மத்தியில் நகைச்சுவையாளராக மாறியுள்ளார்.
இலங்கையிலிருந்து உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஊழல்வாதிகளின் பணத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு வரும் என மக்கள் காத்திருக்கின்றனர்.
எனினும் பணத்தை பதுக்கி வைத்தவர்கள் அதில் நல்ல வட்டிகளை உழைத்து சுகபோகமாக வாழ்கின்றனர். ஆட்சிக்கு வந்ததிலிருந்து தேசிய மக்கள் சக்தி சிறந்த நகைச்சுவைகளைக் கூறிவருகின்றது.
மக்களை ஏமாற்றி ஒருபோதும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, கடவுச்சீட்டு வரிசைக்குத் தீர்வு வழங்குவதற்குப் பதிலாக புதிய வரிசைகளை ஏற்படுத்திவருகிறது.
பொருட்கள் விலை மற்றும் வரி குறைப்புகளை மேற்கொள்ளவில்லை. சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை மாற்றியமைப்பதாகக் கூறிய அநுர அரசாங்கம் இன்று அவர்களிடம் மண்டியிட்டுள்ளது. பொருட்கள் விலையைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத் தேர்தல் வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை அவற்றை செய்வதற்கு நிறைவேற்று அதிகாரம் போதும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.