முட்டி மோதும் திரைப்படங்கள்... காதலர் தினத்தில் ஒரே நாளில் வெளியான 9 தமிழ்படங்கள்,
,

இந்த வருட காதலர் தினம் மிகச்சரியாக வெள்ளிக்கிழமை அன்று வந்துள்ளது. வார இறுதி கொண்டாட்டங்களுடன் காதலர் தின கொண்டாட்டங்களும் சேர்ந்துகொள்ளும் நிலையில் திரையரங்குகளில் ஏகப்பட்ட படங்கள் படையெடுத்து வந்துள்ளன. காதலர் தினத்தை முன்னிட்டு இன்று மட்டும் 10 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
’டிராகன்’, ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்கள் காதலர் தினத்தை குறி வைத்து வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் அஜித்தின் விடாமுயற்சி பிப்ரவரி 6ஆம் தேதி வெளியான நிலையில் அடுத்த வார இறுதியான பிப்ரவரி 21ஆம் தேதியில் வெளியாகின்றன. இவை இல்லாமலே 10 திரைப்படங்கள் வெளியாகின்றன. அவற்றை காணலாம்.
காதல் என்பது பொதுவுடைமை: ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ரோகினி, வினீத், அனுஷா, தீபா உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், மிக தைரியமாக தன்பாலின காதல் கதையை மையப்படுத்தி இந்தப படம் எடுக்கப்பட்டிருக்கிறது.
சமூகத்தால் புறக்கணிக்கப்படும் பால் புதுமையினரின் காதல் கதையும் மற்றவர்களைப் போல மிக இயல்பான ஒன்றுதான் என காதல் என்பது பொதுவுடைமை படத்தில் காட்சிப்படுத்தியுள்ளனர். பத்திரிகையாளர் சந்திப்பிலும் இந்த படம் காதலர் தினத்தை முன்னிட்டுதான் வர வேண்டும் என படக்குழுவினர் தீர்மானமாக பேசியுள்ளனர். இந்தப் படத்திற்கு கண்ணன் நாராயணன் இசையமைத்துள்ளார்.
2கே லவ் ஸ்டோரி: மூன்று ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ’2K லவ் ஸ்டோரி’. ஜகவீர், மீனாட்சி கோவிந்தராஜ், சிங்கம்புலி, ஜெயபிரகாஷ் என இன்னும் நிறைய நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார். இன்றைய தலைமுறையான 2கே இளைஞர்களின் காதலையும் வாழ்க்கையும் மிகவும் அழகாக பாசிட்டிவ்வாக சொல்லும் படமாக இந்த படம் அமைந்துள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.பேபி & பேபி: இயக்குநர் பிரதாப் இயக்கத்தில் ஜெய், சத்யராஜ், யோகி பாபு, ஸ்ரீமன், இளவரசு, ஆனந்தராஜ் என பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேபி & பேபி. இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இரண்டு குடும்பங்களுக்கிடையேயான நடைபெறும் நிகழ்வுகளை நகைச்சுவையாக கூறியுள்ளனர். மேலும் ஆண் குழந்தைதான் முக்கியம் என நினைக்கும் குடும்பங்களையும் நகைச்சுவையாக விமர்சித்துள்ளனர். இன்று இப்படம் வெளியாகியுள்ளது.
ஒத்த ஓட்டு முத்தையா: நீண்ட இடைவெளிக்கு பின் கவுண்டமணி நடித்திருக்கும் திரைப்படம். இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ள இப்படத்தில் கவுண்டமணியுடன் மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, சித்ரா லட்சுமணன், சந்தான பாரதி ஆகியோர் நடித்துள்ளனர். ஒரே ஒரு வாக்கு மட்டும் வாங்கிய கோடீஸ்வர அரசியல்வாதியை சுற்றி நடக்கும் கதையாக அமைந்துள்ளது ஒத்த ஓட்டு முத்தையா திரைப்படம். தமிழ்நாடு அரசியல் நிகழ்வுகளை நகைச்சுவையாக காட்சியமைத்துள்ளனர், இந்த படமும் காதலர் தினத்தை முன்னிட்டு இன்று திரைக்கு வந்துள்ளது.
ஃபயர்: தங்க மீன்கள், குற்றம் கடிதல் போன்ற திரைப்படங்களின் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ் இயக்குநராக மாறியுள்ள திரைப்படம்தான் ஃபயர் ((Fire). இப்படத்தில் பிக் பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ், சாந்தினி தமிழரசன், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயதி ஷான், சுரேஷ் சக்ரவர்த்தி என பலர் நடித்துள்ளனர். காணாமல் போன இளைஞனை தேடும் துப்பறியும் ஆக்ஷன் கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகியுள்ளது.
கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்டு: மார்வெல் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான கேப்டன் அமெரிக்கா திரைப்பட வரிசையில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' (Captain America: Brave New World). கேப்டன் அமெரிக்கா மறைவிற்கு பிறகு ஃபால்கன் கதாபாத்திரம் படிப்படியாக கேப்டம் அமெரிக்காவாக உருவாகிறது. ஏற்கனவே இந்த கதாபாத்திரத்தை வைத்து வெப் சீரியஸ் வந்துள்ள நிலையில் இத்திரைப்படம் மார்வெல்லின் புதிய கேப்டன் அமெரிக்காவை மக்களிடையே கொண்டு சேர்க்கும் படமாக இது அமையும். ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் தமிழ் டப்பிங்கிலும் வெளியாகியுள்ளது இத்திரைப்படம்.
தினசரி: இயக்குநர் ஜி சங்கர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்து, எம். எஸ் பாஸ்கர், பிரேம்ஜி, மீரா கிருஷ்ணன், வினோதினி, சாந்தினி, நாவ்யா, சரத், சாம்ஸ் ராதாரவி ஆகியோரது பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் தினசரி. இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஃபேமிலி டிராமா கதையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த படங்கள் தவிர்த்து ’கண் நீரா’, ’அது வாங்கினால் இது இலவசம்’, ’9AM to PM வேலண்டைண்ஸ் டே’ ஆகிய படங்களும் இன்று வெளியாகின்றன. மேலும் பழைய திரைப்படங்களான ’வாரணம் ஆயிரம்’, ’சிவா மனசுல சக்தி’, ’மின்னலே’ ஆகிய திரைப்படங்களை காதலர் தினத்தை முன்னிட்டு சில திரையரங்குகளில் மறுவெளியீடு செய்துள்ளனர்.
ஏற்கனவே தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்கள் வெளியாகினாலு சில படங்களே இலாபமீட்டுகின்றன என குற்றச்சாட்டு உள்ள நிலையில் இந்த வாரம் மட்டும் ஒன்பதிற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகியுள்ளன,